1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (2)

நீதிக்கட்சியின் வளர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், தமது கட்சியிலுள்ள பார்ப்பன ரல்லாதாரை திருப்தி செய்யவும், பார்ப்பனரல்லாதார் நலனில் காங்கிரசுக்கும் அக்கறையுள்ளது என்பதாகக் காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பார்ப்பனரல்லாதார் அமைப் பினை ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பெயரில் தோற்றுவிக்கலாயினர். இதன் அமைப்புக் கூட்டம் செப்டம்பர் 15 இல் கூட்டப்பட்டு, அடிதடி ரகளையில் முடிந்தது. அதன் பின் மீண்டும் செப்டம்பர் 20 இல் கூட்டப்பட்டு, இதன் அமைப்பாளர் கேசவபிள்ளையால் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘பார்ப்பனரல்லாதாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்று மாண்டேகுவிடம் கூறுதல்’ இச்சங்கத்தின் நோக்கம் என்பதால் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை மாகாண சங்கம்’ என்பது மதுரைப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் உண்டான ஒரு சங்கம் என்று நீதிக்கட்சியினர் எடுத்துக் கூறினர். ‘இந்து’ நாளிதழ் இச்சங்கம் மிகவும் அவசியமானது என்று எழுதியது. சென்னை மாகாணச் சங்கத்தின் தலைவராக திவான் பகதூர் குத்தியப்பட்டு கேசவ (பிள்ளை) என்பவரும், துணைத் தலைவர்களாக, லார்ட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமி (செட்டி), தந்தை பெரியார் என்று பின்னாளில் அழைக்கப் பெற்ற ஈ.வெ.ராமசாமி (நாயக்கர்), நாகை பக்கிரி சாமி, சீர்காழி சிதம்பர (முதலியார்), தஞ்சை சீனிவாசம் (பிள்ளை), ஜார்ஜ் ஜோசப் ஆகியோரும், செயலாளராக டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு (நாயுடு)வும், பொறுப்பாளர்களாக டி.வி.கோபால சாமி (முதலியார்), திரு.வி.க. சர்க்கரை (செட்டியார்), குருசாமி (நாயுடு) ஆகியோரும் இருந்தனர்.

சென்னை மாகாண சங்கத்துக்காக ஆங்கிலத்திலும், தமிழிலும் நாளிதழ்கள் தோற்றுவிக்கப் பட்டன. சி. கருணாகர மேனன் தான் நடத்தி வந்த ‘இந்தியன் பாட்ரியட்’ எனும் நாளிதழை இச்சங்கத்திற்கு வழங்கியதோடு தாமே ஆசிரியராகவும் இருந்து வந்தார். ‘தேச பக்தன்’ என்ற பெயரில் தமிழ் நாளிதழ் ஒன்று டிசம்பர் 7 இல் துவக்கப்பட்டு, திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைமையிடம் சென்னையில் அமைந்தது. தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கிளைகளும்,  2 ஆயிரம் உறுப்பினர்களும் இருந்தனர். இச்சங்கம் நூற்றுக்கு அய்ம்பது விழுக்காடு பதவிகள் பார்ப்பனரல்லாதாருக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்தது. இந்த தீர்மானம் கொண்டுவர மூல காரணர் பெரியார் அவர்களே என்பது குறிக்கத்தக்க செய்தியாகும். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்களுக்கோ இச்செயல் வேதனையை அளித்தது.

(கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து)