2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பம்பாயில் திடீரென எட்டு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானது கொடூரமான நிகழ்வு என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. மதவெறிக்கு உள்ளான மனநோயாளிகளின் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தவும் முடியாது. அதே வேளையில் அதற்காக அஜ்மல் கசாபை- சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் புறந்தள்ளி விட்டு, ‘ரகசியமாக’ தூக்கிலிடப்பட்டதையும் நியாயப்படுத்திவிட முடியாது. இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். ஏழ்மையின் பின்னணியில் வளர்ந்த கசாப் என்ற 19 வயது சிறு பையன் மூளையில் மதவெறி திணிக்கப்பட்டு, செய்யப்போகும் குற்றம் எவ்வளவு கொடூரமானது என்பதை அறியாத நிலையில் துப்பாக்கியுடன் மடிவதற்கு முன் வந்தான். மனிதனை மிருகமாக்கக் கூடிய வலிமை மதவெறிக்கு உண்டு என்பதற்கு இவை மறுக்கவியலாத சான்று. உயிருடன் பிடிபட்ட ஒரே சிறுவன் கசாப். அப்போது அவனுக்கு வயது 21 தான். குடியரசுத் தலைவர் கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் நாட்டுக்கே தெரியாமல் ரகசியமாக நவம்பர் 21 ஆம் தேதி அஜ்மல் கசாப் புனே சிறையில் தூக்கிலிடப்பட்டுவிட்டான்.

அய்.நா.வில் தூக்குத் தண்டனைக்கு எதிரான வரைவு தீர்மானத்தின் மீது தூக்குத் தண்டனைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, அடுத்த நாளில், கசாப்பை தூக்கில் போட்டு விட்டது. உலகின் பெரும்பான்மை நாடுகள் தூக்குத் தண்டனையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்கின்றன. அந்நாடுகளின் பார்வையில் இந்தியாவின் செயல்பாடு கேலிக்குரியதாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை.

குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்ட தாலேயே ஒருவரைத் தூக்கில் போடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. குடியரசுத் தலைவரின் முடிவு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட் பட்டது என்ற சட்ட நடைமுறைகள் பற்றியெல்லாம் இந்திய ஆட்சி யாளர்கள் கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஏதோ சர்வாதிகாரிபோல் தன்னைக் கருதிக் கொண்டு பேசுகிறார்.

“நான் காவல்துறையில் பணியாற்றியவன். ஒரு ரகசியத்தைக் கட்டிக் காப்பது எப்படி என்ற பயிற்சி எனக்கு உண்டு” என்கிறார். ஒரு உள்துறை அமைச்சர் காவல்துறையின் மன நிலையில் செயல்படுவது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. தூக்கிலிடப்பட்ட கசாப், ஒரு வெளிநாட்டுக் குடிமகன், இதில் தூக்கிலிடும் முடிவை எடுப்பதற்கு முன்பு, சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பயன்படுத்தும் வாய்ப்புகளை மறுத்து, தகவல் அறியும் அடிப்படை உரிமைகளையும் புறந்தள்ளி, அவசரமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

குஜராத்தில் பல்லாயிரம் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள், புதுடில்லியில் பல்லாயிரம் சீக்கியர்களைக் கொன்று குவித்தவர்கள் எவருக்கும் இந்த நாடு மரண தண்டனை  வழங்கி கொண்டாட்டம் போடவில்லை. ஈழத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை இனப்படுகொலை செய்த அரசுக்கோ, அந்த நாட்டின் அதிபருக்கோ தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இப்போது ‘தூக்குதண்டனை’யை கொண்டாடும் ஆட்சியாளர்களோ பார்ப்பனிய சக்திகளோ, குரல் கொடுத்ததில்லை. ஆனால், கசாப் தூக்கிலிட்டதை மட்டும் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் பம்பாயிலும் டில்லியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைநீட்டத் தொடங்கியதே அயோத்தி யில் பாபர் மசூதியை இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் தகர்த்த பிறகு தான் என்ற உண்மையைப் பரிசீலிக்கக்கூட இங்கே ஊடகங்களோ, பயங்கரவாத பார்ப்பனிய இந்துவெறி சக்திகளோ தயாராக இல்லை.

இந்தியாவின் உச்சநீதிமன்றமே கடந்த 9 ஆண்டுகளாக தூக்குத் தண்டனையை சட்டவிரோதமாக நிறைவேற்ற துணை நின்றது. இதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டிருக்கும் அதிர்ச்சியான செய்தியும் அண்மையில் வெளி வந்தது. குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்றவுடன் கடந்த 2012 ஜூலை 25 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேர் தனித்தனியாக கடிதம் எழுதினார்கள். அதில் குற்றத்தின் கொடூரத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் குற்றவாளியின் சமூகப் பின்னணியையும் கவனத்தில் கொண்டே தூக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை (பச்சன் சிங் எதிர் பஞ்சாப் வழக்கு) புறந்தள்ளிவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளே 13 பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இப்போது சட்டம் வழங்கும் உரிமைகளை மறுத்து, மற்றொரு  தூக்குத் தண்டனையை பார்ப்பனிய இந்து வெறி சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியல் நோக்கத்துக்காக இந்திய அரசு நடத்திக் காட்டியிருக்கிறது.

‘தேசத் தந்தை’ என்று இவர்களால் ஏற்றி புகழப்படும் காந்தியாரே எதிர்த்த தூக்குத் தண்டனையை இந்த ‘தேச பக்தர்கள்’ கைவிடத் தயாராக இல்லை! அதற்காக சட்டத்தின் நெறிமுறைகளைக்கூட தூக்கி வீசி விடுகிறார்கள்.

கசாப்பின் தூக்கு, இந்த நாட்டின் கடைசி தூக்காக முற்றுப் பெற வேண்டும். விருப்பு வெறுப்பு அரசியலுக்கு மனித உயிர்களைப் பலி கேட்கும் நரபலிகள் இனியும், இந்த நாட்டில் அரங்கேறவே கூடாது. இதற்காக மனித உரிமை மக்கள் இயக்கங்கள் ஆர்த்தெழ  வேண்டும்!