சாட்சிகள்-பொய் சாட்சிகள் பற்றி மனு கூறுவது என்ன?


“இந்துமதம் சமூக சமத்துவத்தை உருவாக்கியதா என்ற கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்பட வில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும் ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட் டுள்ளதொரு அமைப்பு அது. சாதிகளைத் தோற்று வித்ததில் மனுவுக்குப் பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்; நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்த வகையில், சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து அவற்றைத் தரப்படுத்தி, படிமப்படுத்தும் கோட் பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் மனு பொறுப்பு வகித்தார் என்பதில் அய்யமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தரத்தில் வைக்கப்பட்டான். அதற்கு அடுத்து க்ஷத்திரியர்; க்ஷத்திரியருக்குக் கீழ் வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தர வரிசை அமைப்பானது, சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்ப தாகும். எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவைக் கூடத்தின் விழாக் கூட்டத் திற்காக  வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல. அது, மக்களினத்தவரிடையே கடைப்பிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும், அமுலாக்கப்பட வேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக் கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்.

அடிமைத்தனத்தை மனு அங்கீகரித்தார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத் துள்ளார். மூன்று உயர்சாதி அமைப்பினராலும் சூத்திரர்கள் மட்டுமே அடிமைப்படுத்தப்பட முடியும். ஆனால், உயர்சாதியினர் சூத்திரர்களுக்கு அடிமைகளாக முடியாது.

ஆனால், மனுவின் சட்டத்திலிருந்து நடைமுறை வேறுபட்டது என்பது கண்கூடு. சூத்திரர்கள் மட்டுமின்றி, இதர மூன்று வகுப்பினைச் சேர்ந்தோரும்கூட, அடிமைகளாயினர்; இது கண்டுபிடிக்கப்பட்டவுடன், மனுவின் வாரிசாக வந்த நாரதர் ஒரு புது விதியை உருவாக்கினார். நாரதரின் இந்தப் புதிய விதி கீழ் வருமாறு:

5.39 - “ஒரு மனிதன், அவனது சாதிக்கு விசேஷ மான கடமைகளை மீறினால் தவிர, நான்கு சாதிகளில் தலைகீழ் வரிசையில் அடிமைத்தனம் விதிக்கப்பட வில்லை. அது போன்று ஏற்பட்டால் அடிமைத்தனம் என்பது ஒரு மனைவியின் நிலைக்கு ஒத்ததாகும்....”

அடிமைத்தனத்தை அங்கீகரிப்பதே மோசமானது தான். ஆனால், அடிமைத்தன விதிகள், அவற்றின் போக்கில் விடப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் ஒரு சாதகமான விளைவு ஏற்பட்டிருக்கும். அது சமனப்படுத்தும் விசையாக இருந்திருக்கக் கூடும். சாதிகளின் அஸ்திவாரம் தகர்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் அதன் கீழ், ஒரு பிராமணன், தீண்டாதானின் அடிமையாகவும், தீண்டாதான் பிராமணனின் எஜமானராகவும் ஆகியிருக்கக் கூடும். ஆனால், தங்கு தடையற்ற அடிமைத்தனம் ஒரு சமனப்படுத்தும் அம்சம் என்று காணப்பட்டது; ஆகவே அதைச் செல்லாததாக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனவே மனுவும் அவரது வழி வந்தவர்களும், அடிமைத்தனத்தை அங்கீகரித்த போது வருண அமைப்பில், தலைகீழ் வரிசையில் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று விதித்தனர். அதன் பொருள், ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம்; ஆனால், அவன் க்ஷத்திரிய, வைசிய, சூத்திர அல்லது ஆதிசூத்திரன் ஆகிய இதர வருணத்தைச் சார்ந்தவனுக்கு அடிமையாக மாட்டான். மாறாக, ஒரு பிராமணன், நான்கு வருணங்களில், எந்த வகுப்பினைச் சேர்ந்த வரையும் தனது அடிமையாக்கிக் கொள்ள முடியும். ஒரு க்ஷத்திரியர், வேறொரு க்ஷத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர மற்றும் ஆதி சூத்திரரையோ தனது அடிமையாகக் கொள்ளலாம்; ஆனால், ஒரு பிராமணனை அவ்வாறு கொள்ள முடியாது. ஒரு வைசியர், ஒரு பிராமணனையும், க்ஷத்திரியனையும் தவிர, வேறொரு வைசியரையோ, சூத்திரரையோ, ஆதி சூத்திரரையோ தனது அடிமையாக்கிக் கொள்ள லாம். ஒரு சூத்திரன் வேறொரு சூத்திரரையும், ஆதி சூத்திரர் மற்றொரு ஆதி சூத்திரரையும் அடிமை களாகக் கொள்ளலாம். ஆனால் ஒரு பிராமணரை யோ, க்ஷத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர ரையோ ஆதி சூத்திரர் அடிமையாக்க முடியாது.

பல்வேறு வகைப்பட்ட வருணத்தாருக்கிடையே நடைபெறும் கலப்பு மணங்கள் பற்றி மனு விதித்துள்ள விதிகள் பின்வருவன:

3:12 - “இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வருணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணஞ் செய்யப் பரிந்துரைக்கப் படுகிறது. மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பமுடையோர் வருணமுறையின் நேர் வரிசையில்  தேர்ந்தெடுத்தல் வேண்டும்.”

3:13 - “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண்; க்ஷத்திரியனுக்குச் க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள், பிராமணர்க்குப் பிராமண, க்ஷத்திரிய, சூத்திரப் பெண்கள்.”

மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வருணத்தாரும் தமக்குள்ளேயே மணம் புரிதல் வேண்டும். குறித்த வருணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மனு பொதுவாக அங்கீகரிக்கின்றார். அடிமை முறையைப் போல வரிசைப்படுத்தப்பட்ட, சமமின்மைக் கோட்பாட்டிற்கு ஊறுவிளைவிக்காத வகையில்  கலப்புத் திருமண முறையை அனுமதிக் கிறார். கலப்புத் திருமணத்தை அவர் அங்கீகரிப்பது அடிமை முறையைப் போல, தலைகீழ் வரிசை யிலன்று. பிராமணன் எந்த வருணப் பெண்ணையும் மணக்கலாம். க்ஷத்திரியன் தன் வருணம், தன் கீழ் வருணமான வைசிய, சூத்திர வருணங்களிலும் பெண் கொள்ளலாம். ஆனால், மேல் வருணமாகிய பிராமணப் பெண்களை மணக்கக் கூடாது. வைசியன் தன் வகுப்பிலும் சூத்திர சாதியிலும் பெண் கொள்ளலாம்; க்ஷத்திரிய, பிராமணப் பெண்களை மணத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாரபட்சம்? அவரது வழிகாட்டு நெறியாக அமைந்துள்ள சமத்துவமின்மையை அப்படியே கட்டிக்காக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தின் விளைவுதான் இது. சட்டத்தின் விதிகளைக் காண்போம். அது பற்றி மனு என்ன கூறுகிறார் என்பதை அறிய ஆர்வமுள்ளோர் அவர் வகுத்துள்ள பின்வரும் விதிகளைக் காண்க. எளிதில் புரிந்து கொள்வதiற்காகத் தெளிவாகத் தெளிவான தலைப்புகளில் பகுத்துத் தந்துள்ளேன்.

முதலில் சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்; மனு முறைப்படி அவர்களுக்குப் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் செய்வித்தல் வேண்டும்.

8:87 - “முற்பகலில் தூய்மை பெற்ற நீதிபதி, இரு பிறப்பாளர் (தூய்மை பெற்றவர்) பிராமணர் அல்லது தெய்வீகச் சின்னம் முன்னிலையில் உண்மையைக் கூறுமாறு அறிவுறுத்த வேண்டும். சாட்சிகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக நிற்றல் வேண்டும்.”

8:88 - “பிராமணரிடத்தில் ‘கூறுக’ என்றும், க்ஷத்திரியனிடத்தில் ‘உண்மையைக் கூறுக’ என்றும், வைசியனிடத்தில் அவனுடைய ‘பசுக்கள், பொன், தானியங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக’ என்றும், சூத்திரனாயின் ‘தலைமீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி அச்சுறுத்திக் கூறுக’ என்றும் பிரமாணம் செய்க.”

8:113 - “ஒரு மத குருவை அவனது வாய்மையின் மீதும், ஒரு போர் வீரனை அவனது குதிரை, யானை மற்றும் அவனது ஆயுதத்தின் மீதும், ஒரு வணிகனை அவனது பசுக்கள், தானியம், தங்கம் ஆகியவற்றின் மீதும், குற்றவேல் புரிபவனை அவனது தலை மேல் சத்தியம் செய்யுமாறும் நீதிபதி கூறவேண்டும்.”

மனு பொய்ச் சாட்சி அளிப்போரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பொய்ச் சாட்சி அளிப்பதையும் ஒரு குற்றமாகக் கருதி மனு விதிப்பதாவது:

8:122 - “பொய்சாட்சி சொல்லுவோருக்கும் இந்தத் தண்டனை விதிகள் ரிஷிகளால் வகுக்கப்பட்டுப் பெரியோர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

8:123 - “க்ஷத்திரியர் முதலான மூவகைக் கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்துவிட்டுப் பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும்ட் ஆனால் பிராமணராயின் நாடு கடத்தல் மட்டுமே செய்ய வேண்டும்.... இதிலும் மனு ஒரு விதிவிலக்கு அளித்துள்ளார்.”

8:112 - “பெண்களிடம் களியாட்டத்தின் போதும், திருமண ஏற்பாடு தொடர்பாகவும், பசு தீவனத்தையோ பழத்தையோ தின்றுவிட்டது பற்றியும், யாகத்திற்கான சமிதைகள் எடுத்துக் கொண்டது பற்றியும், பிராமணரைக் காப்பாற்று வதற்காக வாக்குறுதி அளித்தது பற்றியும் பொய்ச்சாட்சி சொல்வது பெரும்பாவமன்று.”

வழக்கு நடவடிக்கைகளில் அவரவர்க்குரிய நிலைகளுக்கேற்ப முக்கியமான குற்றங்களுக் குரிய தண்டனை முறைகளாக மனு கூறுவதா வது:  அவதூறுக்குரிய தண்டனை:

8:267 - “புரோகிதனுக்கு அவதூறு இழைக்கும் க்ஷத்திரியனுக்கு நூறு பணமும், அவ்வாறு தவறிழைக்கும் வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறு பணமும், ஒரு அடிமையோ, தொழிலாளியோ தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.”

8:268 - “ஒரு புரோகிதர் க்ஷத்திரியனுக்கு அவதூறு விளைவித்தால் ஐம்பது பணமும், வைசியனுக்கு அவதூறு விளைவித்தால் பன்னிரண்டு பணமும் அபராதம் விதித்தல் வேண்டும்.”

நிந்தனைக் குற்றத்தை எடுத்துக் கொள்வோம். மனு விதிக்கும் தண்டனை வருமாறு:

8:270 - “சூத்திரன், இரு பிறப்பாளரைக் கடுஞ் சொற்களால் நிந்தித்தால், அவன் நாக்கை அறுத்தல் வேண்டும். ஏனெனில் பிரமனின் கீழான பாகத்தில் அவன் பிறந்தவன்.”

8:271 - “அவன் பெயரையும், சாதியையும் நிந்தித்தால் உதாரணமாக, ‘தேவதத்தா, பிராமணக் குப்பையே’ என்றால் பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பாணியை அவன் வாயில் நுழைத்தல் வேண்டும்.”

8:272  - “கர்வத்தால், பிராமணன் எப்படிப் பணி யாற்ற வேண்டும் என்பது பற்றிக் கட்டளையிட்டால், அவன் வாயிலும் காதிலும் காய்ச்சிய எண்ணெயை ஊற்றுமாறு அரசன் கட்டளையிடுதல் வேண்டும்.”

8:276 - “பரஸ்பர பழித்தலைச் செய்த பிராமண னுக்கும் க்ஷத்திரியனுக்கும் அரசன் தண்டனை விதிக்க வேண்டும்., பிராமணனுக்கு மிகக் குறைவாகவும், க்ஷத்திரியனுக்கு மிதமாகவும் விதித்தல் வேண்டும்.”

8:277 - “வைசியனுக்கும் சூத்திரனுக்கும் அவரவர் வருணத்திற்குரிய முறையில் ஒன்றுபோலத் தண்டனை விதித்தல் வேண்டும். நாக்கை அறுப்பது சூத்திரருக்கு மட்டுமே. இதுவே தண்டனைக்குரிய நிலையான விதிமுறை.”

தாக்கியமைக்கான தண்டனையை மனு விதிக்கிறார்:

8:279 - “இழிகுலத்தில் பிறந்தவன் உயர்குலத் தானை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தைத் துண்டித்தல் வேண்டும்; அல்லது காயத்தின் அளவுக்குத் துண்டிக்க வேண்டும். இதுவே மனு விதித்த நீதி.”

8:280 - “சினத்தினால் கையோங்கியோ, தடி யெடுத்தோ ஒருவனை அடித்தால், அடித்தவன் கையையும், உதைத்த காலையும் வெட்ட வேண்டியது.”

8:281 - “உயர்சாதிக்காரனுடன் இழி சாதிக்காரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அந்த ஆணவச் செயலுக்காக இடுப்பில் சூடு போடுதல் வேண்டும்; அல்லது நாடு கடத்தப்படுதல் வேண்டும்; அல்லது அவனது ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண் ஏற்படுத்திட அரசன் ஆணை பிறப்பித்தல் வேண்டும்.”

8:282 - “ஆணவத்தால் அவன் துப்பினால், அரசன் அவனது இரு உதடுகளையும் வெட்டிடல் வேண்டும். அவன் மீது சிறுநீர் பெய்தால் ஆண்குறியை வெட்டிடல் வேண்டும்., அவன் மீது குசு விட்டால், ஆசனத்தை வெட்டிடல் வேண்டும்.”

8:823 - “பிராமணனின் முடியைப் பிடித்திழுத் தாலோ காலைப் பிடித்து வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ அவன் கையை வெட்டிவிடுமாறு அரசன் தயங்காமல் ஆணையிடுதல் வேண்டும்.”

பிறன்மனை புணர்தலுக்கு மனு விதிக்கும் தண்டனையாவது:

8:359 - “இழிகுலத்தான் ஒருவன் பிறன்மனை புணர்ந்தால் அவனுக்கு மரணதண்டனை விதித்தல் வேண்டும். எல்லா வருணங்களையும் சார்ந்த மனைவி களையும் குறிப்பாகப் பாதுகாத்தல் வேண்டும்.”

8:366 - “உயர்குலத்துப் பெண்ணைக் காதலிக்கும் இழிகுலத்தானுக்குக் கசையடி கொடுத்தல் வேண்டும்; அவரவருடைய சம வர்க்கத்துப் பெண்ணைக் காதலித்தால் பெண்ணின் தந்தை சம்மதத்தைப் பெற்றுப் பரிசம் போட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.”

8:374 - “இரு பிறப்பாளனின் மனைவியுடன் சோரம் போகும் சூத்திரன், அப்பெண் இல்லத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், காக்கப்படாவிடினும் பின்வரும் தண்டனைக்குள்ளாவான். காக்கப் படாத பெண்ணாயின் தன் சொத்துக்களை இழப்பதுடன் ஆண் குறியையும் வெட்டப்பட வேண்டியவனா கின்றான். காக்கப்பட்டவளாயின் அவன் உயிரையும் பிற அனைத்தையும் இழத்தல் வேண்டும்.”

8:375 - “காப்பிலுள்ள பிராமணப் பெண்ணுடன் சோரம் போகும் வைசியன் செல்வமனைத்தையும் இழந்தும், அத்தகைய குற்றம் புரியும் க்ஷத்திரியனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் கழுதை மூத்திரத்தால் தலைச் சவரமும் பண்ணி விடுதல் வேண்டும்.”

8:376 - “க்ஷத்திரியனோ, வைசியனோ காப்பில்லா பிராமணப் பெண்ணுடன் சோரம் போனால் வைசியனுக்கு ஐந்நூறு பணமும் க்ஷத்திரியனுக்கு ஆயிரம் பணமும் அபராதம் விதித்தல் வேண்டும்.”

8:377 - “இவ்விரு சாதியைச் சேர்ந்தவரும், மேன்மை மிக்கவளும் பிராமணனின் காப்பிலுள்ள வளுமான மனைவியைச் சேர்ந்தால், அவர்களுக்குச் சூத்திரருக்குரிய தண்டனையே வழங்குதல் வேண்டும்; அல்லது உலர்ந்த புல்லும் நாணலும் நிறைந்த படுக்கையிலிட்டு எரிக்கப் பெறுதல் வேண்டும்.”

8:382 - “க்ஷத்திரியனின் காப்பிலுள்ள மனைவியை வைசியன் கூடினாலும், வைசியப் பெண்ணை க்ஷத்திரியன் கூடினாலும் காப்பில் இல்லாத பிராமணப் பெண்ணுடன் சோரம் போவானுக்குரிய தண்டனை பெறுவர்.”

8:383 - “பிராமணர் இவ்விரு சாதியைச் சார்ந்த காப்பிலுள்ள மனைவியுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் சூத்திரப் பெண்ணுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் அபராதம் வதிக்கப் பெறுதல்  வேண்டும். க்ஷத்திரிய, வைசியருக்கும் அப்படியே.”

8:384 - “க்ஷத்திரிய வகுப்பைச் சார்ந்த காப்பிலுள்ள பிறர் மனைவியுடன் வைசியன் சோரம் போனால், ஐந்நூறு பணம் அபராதம், க்ஷத்திரியன் வைசியப் பெண்ணுடன் சோரம் போனால் ஐந்நூறு பணம் அபராதம் அல்லது மூத்திரச் சவரம் விதித்தல் வேண்டும்.”

8:385 - “காப்பில் இல்லாத க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்ணுடன் சோரம் போகும் பிராமண னுக்கு அய்ந்து நூறு பணமும், சண்டாளியுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் அபராதம் விதிக்க வேண்டும்.

பல்வகைக் குற்றங்களுக்கு மனு விதிக்கும் தண்டனை முறைகள் வேடிக்கையானவை. அவற்றுள் சில:

8:379 - “பிராமணன் எத்தகைய பாவமோ கலப்போ செய்த போதிலும் அவனைக் கொல்லக் கூடாது; ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.”

8:380 - “எத்தகைய பாவத்தைச் செய்தபோதிலும், பிராமணனைக் கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்து கொள்ளாமலும் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.”

11:127 - “நற்குணமுள்ள க்ஷத்திரியனைக் கொன்றால் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு விதித்த பன்னிரண்டு வருட விரதத்தில் நாலில் ஒரு பங்கும், வைசியனைக் கொன்றால் எட்டில் ஒரு பங்கும், தன்னுடைய கடமைகளைக் கைவிடாது செய்யும் சூத்திரனைக் கொன்றால் பதினாறில் ஒரு பங்கும் கழுவாயாகும்.”

11:128 - “ஆயின் அறியாமல் க்ஷத்திரியனைப் பிராமணன் கொன்றால் அனைத்துச் சடங்குகளும் செய்து புரோகிதனுக்கு ஓர் எருமையும் ஆயிரம் பசுக்களையும் தானம் செய்ய வேண்டும்.”

11:129 - “அல்லது ஒரு பிராமணனைக் கொன்று அவனது அங்கங்களை அழித்த குற்றத்திற்குரிய தண்டனையை அவன் நகரிலிருந்து வெகுதூரம் சென்று ஒரு மரத்தடியை உறைவிடமாகக் கொண்டு மூன்றாண்டு காலம் அங்கு தங்கி கழுவாய் தேட வேண்டும்.”

11:130 - “ஒழுக்கமிக்க ஒரு வைசியனைப் பிராமணன் அறியாமற் கொன்றால் ஓராண்டு விரதமோ அல்லது புரோகிதருக்கு ஒரு எருதும் நூறு பசுக்களும் தானமோ செய்ய வேண்டும்.”

11:131 - “சூத்திரனைக் கொன்றால் ஆறு மாதம் விரதமோ புரோகிதருக்கு ஒரு எருதுடன் பத்துப் பசுக்களைத் தானமோ செய்ய வேண்டும்.”

8:381 - “பிராமணனைக் கொல்வதைவிட உலகத் தில்  பெரிய தொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்லுவது பற்றி அரசன் மனதளவில்கூட நினைக்கக் கூடாது.”

8:126 - “குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனை களை, குற்றம் முதல் தடவையா, இரண்டாம் தடவையா என்பதையும், குற்றத்தின் தன்மையையும், தண்டனையைத் தாங்கக் கூடியவனா என்பதையும், காலத்தையும், தண்ட நீதிகளையும் நன்கு ஆராய்ந்து ஏற்ற தண்டனைகளை மன்னன் விதிக்க வேண்டும்.”

8:124 - “பிராமணனைத் தவிர்த்த ஏனைய வருணத்தார் குற்றம் இழைப்பின் தண்டிக்கத்தக்க இடங்கள் பத்து என்றும், பிராமணனாயின் அவனைக் காயப்படுத்தாமல் துரத்திவிட வேண்டு மென்றும் சுயம்புவாகத் தோன்றிய மனு கூறியுள்ளார்.”

8:125 - “இனவிருத்தி உறுப்பு, வயிறு, நாக்கு, கை, கால், கண், மூக்கு, காது, பொருள், உடைமை ஆக தண்டிக்கப்பட வேண்டிய இடங்கள் பத்தாகும், மரண தண்டனையாயின் முழு உடம்பும் இலக்காக அமையும்.”

சமயச் சடங்குகள், யாகங்கள் சம்பந்தமான உரிமைகள், கடமைகள் பற்றி மனு தெரிவிக்கும் கருத்து:

இந்துச் சட்ட முறைகளுக்கும் இந்து அல்லாத சட்டமுறைகளுக்குள்ளேயும் எத்துணை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப் பெற்றுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம். குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரே விதமான தண்டனையே. மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட அவயத்தைத் துண்டித்தல்; வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்குத் தனித் தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும் கருதித் தண்டனை அளித்தல். மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய மனித தன்மையற்ற தண்டனை விதித்தல். மனுவின் குற்றவியல் சட்டத்தின் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது. குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமின்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள் சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச் சமமின்மையை நிலைநாட்டுவதுமேயாகும். சமூச் சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன்.

(‘இந்துமதத் தத்துவமும் மனு தர்மமும்’ - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்)