தொல். திருமா பிறந்த நாளில் உரை

15-10-2012 திங்கட்கிழமை அன்று மாலை 6-00 மணிக்கு, சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என்.அரங்கில் சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, அதன் தலைவர் தொல்.திருமாவளவனின் 50 வது பிறந்தநாள் பொற்காசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில்….

இன்று திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக இவ்வளவு பேர் திரண்டிருக்கிறோம். வாழ்த்து சொல்வதை விட, அவர் இடுகிற கட்டளைகளை நிறைவேற்றுவோம் என்று நீங்கள் அவருக்கு உறுதி அளித்தால், மேலும் மகிழ்ச்சி அடைவார். விடுதலை அடைந்து அறுபது அறுபத்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சமத்துவம்  சொல்கிற அரசியல் சட்டம் அமுலுக்கு வந்து அறுபது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் அரசியல் சட்டப்படி பெறவேண்டிய உரிமைகளையே பெற முடியாதவர்களாய் இருக்கிறோம். நமது தலைவர்களான பெரியாரும், அம்பேட்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய செயல்களிலிருந்து நாம் முன்னேற்றம் காணாமல் இருக்கிறோம்.

புரட்சியாளர் அம்பேட்கர் தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் மனம் வெதும்பி சில நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். இராமலீலா மைதானத்தில் இறுதி நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் “என் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கல்வி கற்று, வேலைவாய்ப்பினை பெற்றுவிட்டால் அதன்பின் தங்கள் சமுதாயத்தை கவனித்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தேன், ஆனால் அவர்களோ தங்கள் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்” என்று சொன்னார். நம் போராட்டத்தால் பலரை வேலை வாய்ப்புகளில் அமர்த்தி வைத்திருக்கிறோம், ஆனால் அவர்கள் சமூக அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மனம் வெதும்பி பேசினார்.

திருமாவளவன் அவர்கள் எளிய குடும்பத்தில் பிறந்து கல்வி பெற்று, அரசு பணியில் அமர்ந்த பின்பு, அந்த பணியை தூக்கி எறிந்து விட்டு, பொது வாழ்விற்கு வந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று தான் (அக்டோபர் 14) 1956 ஆம் ஆண்டில் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் இந்து மதத்தை உதறிவிட்டு, புத்தமதத்துக்கு மாறிய நாள். நம் இழிவு நீங்கவேண்டும் என்று சொன்னால் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும்; அகமண முறை ஒழிய வேண்டும் என்று அவர் சொன்னார். சாதி மறுப்பு திருமணங்கள் புரிந்தவர்களுக்கு அரசு பரிசு கொடுக்கிறது, முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால் இன்று அகமண முறைதான் வேண்டும் என்று சிலர் மேடையிலேயே துணிச்சலோடு பேசுகிறார்கள். இதை நாம் அனுமதித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது தலைவர்கள் பெரியாரும், அம்பேட்கரும் மதச் சார்பின்மையை பேசினார்கள்.  அமெரிக்காவின் அதிபராக இருந்த கத்தோலிக்க கிருத்துவரான கென்னடிக்கு  போப்பை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தும், தான் அவர் முன்னால் மண்டியிட வேண்டியிருக்கும், அமெரிக்க அதிபராக இருக்கும் நாம் மண்டியிட்டால் நம் நாடே மண்டியிட்டதாக இருக்கும் என்று அதை தவிர்த்து விட்டார் என்று சொல்வார்கள். ஆனால் இன்று நம்முடைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒரு பார்ப்பானின் காலில் அமர்ந்திருப்பதை பார்க்கிறோம்; இராமன் வேடம் போட்டவனையே பணிந்து வணங்குவதைப் பார்க்கிறோம். தமிழன் விடுதலை பெற வேண்டுமானால் இந்து, இந்தியன் என்ற இரு கட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என்று பெரியார் சொல்வார். இந்த இரு கட்டுகளையும் உடைப்பதற்கு “இந்துத்துவத்தை வேரறுப்போம்” என்ற நூலை வெளியிட்டவர் திருமாவளவன்.

என்னை மகிமைப்படுத்துவனை நான் ஆசீர்வதிப்பேன் என்று சொல்வதாக பைபிளில் இருக்கும். எனவே அப்படி இந்த தலைவரை புகழ்ந்து, மகிழ்வித்தால் போதும் என்று கருதி ஏமாந்து விடாதீர்கள். எனவே நீங்கள் அவர் கருதுகிற இந்துமதத்தை வேரறுங்கள், தமிழர் உரிமைகளுக்கு போராடுங்கள், அண்டை நாட்டில் போராடி கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு துணை நில்லுங்கள் அது தான் நீங்கள் அவருக்கு எடுக்கும் உண்மையான பொன்விழாவாக இருக்கும். ஒரு காலத்தில் பகுத்தறிவு பேசியவர்கள், நம்மை இழிவுபடுத்தும் இராமாயணத்துக்கு எதிராக பேசியவர்கள். இன்று அவர்களின் தொலைக்காட்சிகளில் இராமாயணத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே முழுக்க சமுதாய அக்கறை உள்ள தொலைக்காட்சி ஒன்று நமக்கு வேண்டும். அதைத் தொடங்குவதற்குத்தான் இந்த பொற்காசுகள் வழங்கப்படுகிறது என்பதறிந்து அதற்கும் சேர்த்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.