விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியும், ஈழவிடுதலை இயக்கத்தின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளருமான பரிதி என்ற ரீகன் அவர்கள் பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் அளவிலா வேதனையும் அடைந்தேன். பரிதி அவர்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர். அதன் பின்னர் கொளத்தூரில் எங்கள் தோட்டத்தில் நடந்த புலிகளின் மூன்றாம் பயிற்சி முகாம் காலத்தில் எனக்கு அறிமுகமானவர். முப்பதாண்டு கால நண்பரை இழந்த வேதனை ஒரு புறம் இருக்க அவர் கொல்லப்பட்டிருக்கும் விதம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்த சிங்களப்பேரினவாதம் - இன்னமும் பல்வேறு வடிவங்களில் தனது இனப்படுகொலையை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தொடரும் சிங்கள பேரினவாதம் - தனது கோரக்கரங்களை இலங்கைக்கு வெளியே நீட்டி வெளிநாடுகளில் வாழ்பவர்களையும் கொன்று வருகிறது.

பரிதி அவர்கள் பல ஆண்டுகாலமாக ஈழவிடுதலை இயக்க அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு சிறையில் இருந்தவர். பின்னர் மீண்டும் பொறுப்பேற்று அமைதியாகச் செயல்பட்டு வந்தவர்.

நீண்ட நாட்களாகவே அவர் மீது குறிவைத்திருந்து கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் அவர் மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அதில் பிழைத்த அவர் இந்த ஆண்டு அதே நவம்பர் மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்பாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வு என்பது தமிழ் மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் நிகழ்வு என்பதால் அந்நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்புடன் இருக்கும் சிங்கள அரசு, ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டே வந்துள்ளது. இந்த ஆண்டு தங்களின் நீண்டநாள் குறியான தோழர் பரிதியைக் கொன்று, மாவீரர்நாள் நிகழ்வைச் சீர்குலைக்கும் தனது எண்ணத்தைச்  செயல்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு இழப்பும் மேலும் உறுதியையே அளிக்கும் என்பதையும் பரிதியின் இழப்பு இந்த மாவீரர் நாள் நிகழ்வை மேலும் எழுச்சி உள்ளதாக மாற்றும் என்பதும் சிங்களர்கள் அறியாதது.
வாழ்நாளெல்லாம் தனது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்த நண்பர் பரிதிக்கு எனது வீர வணக்கங்கள்.