முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!!

அமெரிக்க தீர்மானத்தின் மீது கடைசியாக நாடாளுமன்றத்தில் வாய் திறந்த பிரதமர் மன்மோகன் சிங், அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் இறுதி நகல், தம்மிடம் இல்லை என்றும், அதை ஆதரிக்கும் மனப்போக்கில் இந்தியா இருப்பதாகவும் (Inclined to vote) கூறியுள்ளார். போருக்குப் பிறகு இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமும் அந்த ஆணையத்தின் பரிந்துரையை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் அவசர நிலை அங்கே தளர்த்தப்பட்டதும், உள்ளாட்சித் தேர்தலுக்கு இலங்கை அரசு தயாராகி வருவதும் உறுதியான நடவடிக்கைகள் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இலங்கை அரசின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்க மன்மோகன் சிங் தயாராக இல்லை.

இது பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “பிரதமர் உரையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் ‘மென்மையான’ தீர்மானம் உலகம் முழுதும் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு மட்டும் அது வராமல் போய்விட்டது போல் மன்மோகன் பேசுவது அவர் தப்பிக்க முயல்வதையே காட்டுகிறது.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்கூட அப்படி ஒன்றும் ‘அழுத்தமானதாக’ இல்லை என்பது உண்மைதான். இப்படி ஒரு தீர்மானம் வந்து விட்டதாலேயே ஈழத் தமிழருக்கு என்ன பயன் கிடைத்து விடும் என்ற கேள்வியைக்கூட ஈழ விடுதலை ஆதரவாளர்கள் சிலர் எழுப்புகிறார்கள்.

இலங்கை அரசை குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டித்துவிட்டால் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துவிடுமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் அரசியல் தீர்வுகளுக்கும் இலங்கை அரசு மீதான பன்னாட்டு விசாரணைக்கும் உள்ள தொடர்புகளைத் துண்டித்துவிட்டு, இப்பிரச்சினையை பார்க்க முடியாது. போர்க் குற்றத்திலிருந்து இலங்கை தப்பித்துவிட்டால் மீண்டும் தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையை ‘காவு’ கொடுக்கும் நிலைதான் உருவாகும். தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் அது தனி நாடாக இருந்தாலும் அதிகாரப் பகிர்வு என்றாலும் இலங்கை அரசே தீர்மானிக்கப் போகிறதா? அல்லது சர்வதேச அழுத்தங்களினால் தலையீடுகளால் உருவாகப் போகிறதா என்பதே முக்கிய கேள்வி.

இலங்கையின் குருதி படிந்த இனப் படுகொலையை அந்த ஆட்சிக்கு வெளியே அதன் அதிகார வரம்பிலிருந்து வெளியே இழுத்து சர்வதேச அரங்கிற்குக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதே எதார்த்தம். மக்கள் கவிஞர் இன்குலாப் ஒரு கவிதையில் கூறியதுபோல் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளிடமிருந்து இரத்த தானம் கேட்க முடியாது!

இந்தப் பின்னணியில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்தைப் பார்க்க வேண்டும். இனப்படுகொலையை ‘உள்நாட்டுப் பிரச்சனை’யாகவே மூடி மறைத்து விடலாம் என்று மனப்பால் கொண்டிருந்த இலங்கை அரசு இப்போது அதிர்ச்சி அடைந்து நிற்கிறது. “அதிபர் ராஜபக்சேயையும் அவரது சகோதரர் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேயையும் குறி வைத்தே இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று அலறுகிறார் இலங்கை இராணுவ தளபதி ஜெயசூரியா.

2009 ஆம் ஆண்டு போர் முடிந்தவுடன் இதேபோல் இலங்கை அரசுக்கு எதிராக அய்ரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது அதை இந்திய ஆதரவுடன் மிக எளிதாக இலங்கையால் முறியடிக்க முடிந்தது. அந்தச் சூழல் இப்போது இல்லை.

டப்ளின் தீர்ப்பாயம் - அய்.நா. மூவர் குழு அறிக்கையைத் தொடர்ந்து சேனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியது.  இவை அனைத்தும் சர்வதேச விவாதங்களையே தவிர்த்து விடலாம் என்ற சிறீலங்காவின் கனவை தகர்த்துவிட்டது.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், இலங்கையின் விசாரணை ஆணைய அறிக்கையை இலங்கை அரசே நிறைவேற்ற வேண்டும் என்பதுதான், சர்வதேச சுதந்திரமான விசாரணையை அது வலியுறுத்தவில்லை. முதலில் அமெரிக்கா அறிமுகப்படுத்திய தீர்மானத்தின் நகல், பிறகு மேலும் மென்மையாக்கப்பட்டது. ஆனாலும், இலங்கை அய்.நா.வின் ஆலோசனை தொழில்நுட்ப உதவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கும் தமிழர் நலன் - உரிமை தொடர்பான செயல்பாடுகளை அய்.நா. மனித உரிமைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதுபற்றி அய்.நா. மனித உரிமைக் குழு தனது கருத்தை 20வது அய்.நா. கூட்டத் தொடரில் முன் வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் கூறுவதை இலங்கையால் செரிமானம் செய்ய முடியவில்லை. இதை மேலும் மென்மையாக்கவே இப்போது இந்தியா தீவிரம் காட்டுகிறது. முதன்முறையாக இலங்கையின் எதேச்சதிகார நடவடிக்கை களுக்கு இதன் வழியாக அய்.நா. தனது பிடியை இறுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதே இலங்கை அரசின் அச்சம்.

இந்தத் தீர்மானம், இலங்கை அரசுக்கே சாதகமானது என்ற ஒரு கருத்தை ஈழ விடுதலை ஆதரவாளர்கள் சிலரால் முன் வைக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை இது பிரதிபலிக்கவில்லை என்பது அவர்கள் வாதம். தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்தி கருத்து தெரிவிப்பதில் தவறில்லை; அத்தகைய பார்வை அவசியமானதுதான். ஆனால், தீர்மானமே பயனற்றது; தோற்றே போகட்டும்; இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு தமிழ் ஈழ ஆதரவாளர்கள் வந்து விட முடியுமா என்பதுதான் கேள்வி. ஈழத் தமிழர்கள் விடுதலைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்கி வரும் ‘துக்ளக்’ சோ பார்ப்பனர், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தத் தீர்மானம் பயனற்றது என்றே கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.  ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஆர்கனைசர்’ ஏடும் சுப்ரமணியசாமியும் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறார்கள்.

சர்வதேச விசாரணை வந்தாக வேண்டும். அதற்கு முன் சர்வதேச விவாதம் வரும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்த வேண்டுமா? இல்லையா? ‘இடி பாடுகள்’ - ‘இழுபறிகளுக்குள்’ சிக்கி சிக்கித்தான் தேசிய இனங்களின் பிரச் சனைகள்  நேர்மையற்ற ஏகாதிபத்திய உலக அமைப்பில் பயணிக்க வேண்டியது தவிர்க்க இயலாதாகிவிட்டது. இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப் பதில் உறுதி காட்டுமா? உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. இதுவே இதை எழுதும்போது உள்ள நிலை. சர்வதேச விவாதம் ஒன்று வருவதையே இலங்கை அரசும் அவரது ஊதுகுழல்கள் எடுபிடிகளும் தவிர்த்துவிட துடிக்கிறார்கள்.

மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற பேச்சு இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இது தமிழகத்தில் எழுந்த ஒன்றுபட்ட அழுத்தத்துக்குக் கிடைத்த வெற்றி. அமெரிக்க தீர்மானம் தோற்றாலும் வென்றாலும் ஈழத் தமிழர் பிரச்சனை சர்வதேச தளத்துக்கு நகர்த்தப்பட்டுவிட்டதை இனி தடுத்து நிறுத்த முடியாது.

- இரா

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத்  தாக்கிய சிங்கள குண்டர்கள்

ஜெனிவாவில் நடக்கும் அய்.நா. கூட்டத்தில் பங்கேற்று வரும் மக்கள் உரிமை கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிஃபேன் ஜூனியர் விகடன் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:

“இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ‘ஸ்கைப்’ மூலமாகப் பேசினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி ஐரோப்பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக, இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் தடுத்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே தாக்குதல் நிறுத்தப்பட்டது. அமர்வு தொடங்கியதுமே ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலின் தலைவர், ‘நேற்று நடந்த சம்பவங்கள் ஐ.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல், இதுபோன்று நடக்காது’ என்று வருத்தம் தெரிவித்தார்.

- ஜீனியர் விகடன் 21.3.2012