கேரளாவில் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற ‘பிறப்பு ஆதிக்கம்’ ஒழிந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அமைதிப் புரட்சி நடந்து முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கேரள தேவஸ்வம் போர்டு காலியாக இருந்த 100 அர்ச்சகர் பதவிகளில் 50 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகராக நியமனம் செய்துள்ளது. கேரள தேவஸ்வம் போர்டு சார்பாக அர்ச்சகர் பதவிக்கு அனைத்து சாதியினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பிறகு அவர்கள் நேர்முகப் பேட்டிக்கு அழைக்கப்பட்டனர். மொத்தம் 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பார்ப்பனரல்லாத அனைத்து சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.  கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார் கூறுகையில்:

“ஒருவர் உள்ளத்தாலும் செயல்களாலும் தான் ‘பிராமணர்’ ஆக முடியுமே தவிர, பிறப்பால் அல்ல இதைத்தான் பழங்கால புனித நூல்கள் கூறுகின்றன” என்றார்.

மலையாள இந்துவாகவும் ‘தந்திர சாஸ்திரங்கள்’ - பூசை முறைகள் பற்றி தெரிந்தவர் களாகவும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப் பட்டதாக தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த கிருஷ்ணன் நம்பூதிரி கூறினார்.

மூத்த அர்ச்சகர் ஒருவரிடமிருந்து இதற்கான சான்றிதழ் பெறவேண்டும்.

“பல பார்ப்பனரல்லாதவர்கள் வேத மந்திரங் களை வியக்கும்படி மிகச் சிறப்பாகக் கூறி, தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்” என்றும் அந்த நம்பூதிரி கூறினார்.

பரம்பரை வழியாக இதே தொழிலில் இருந்த பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரை அர்ச்சக ராக்கியதை விரும்பவில்லை. இதே தொழிலில் இருந்தவர்களுக்கு கோயில்களிலேயே வேறு வேலைகள் வழங்க வேண்டும் என்று விஷ்ணு நாராயணன் நம்பூதிரி என்ற பார்ப்பன கவிஞர் கூறினார்.

தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ் கேரளாவில் 2000 கோயில்கள் உள்ளன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மார்ச் 12 இந்த செய்தியை வெளியிட்டுள்ளது).

ஏற்கனவே கேரளாவில் ஈழவர் ஒருவர், அர்ச்ச கராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பார்ப்பனர் தொடர்ந்த வழக்கில், பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராக இருக்க வேண்டும் என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைக்கு எதி ரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நாடு சுதந்திரம் பெற்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தக் கூடிய பழமையான செயல்பாடுகளை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று, இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி, முறையான அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி, பயிற்சி அளித்த பிறகும், பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக முடியவில்லை. பழக்க வழக்கங்களில் அரசு தலையிடக் கூடாது என்று கூறி, பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டனர்.

இப்போது கேரளாவில் கோயில்களில் நிலை நாட்டப்பட்டிருந்த “சூத்திர-பஞ்சம்” இழிவு ஒழிக்கப்பட்டிருக்கிறது