இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ - அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் - இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது.

ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது கண் துடைப்பு என்றே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறின.

இந்த விசாரணை ஆணையத்தின் தலைவரான சி.ஆர். டி.சில்வா, இலங்கை அரசின் தலைமை சட்ட அதிகாரியாவார். 2006-2009 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தார். இந்தியா வின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பகவதி தலைமையில் சர்வதேச பிரமுகர்களைக் கொண்டு ஒரு சர்வதேச குழு அமைக்கப்பட்டது. இலங்கை அரசின் விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக அக்குழுவை ராஜபக்சே அமைத்தார். கொழும்பு வந்த அந்த குழு, இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க தகுதியில்லாத அளவுக்கு குற்றங்களை செய்து வருகிறது என்று கூறி, குழுவைக் கலைத்துவிட்டு, கொழும்பை விட்டு வெளியேறின. இந்த சர்வதேச குழுவால் குற்றம் சாட்டப்பட்டவர்தான் டி.சில்வா. ராணுவத்தினரை குற்றங்களிலிருந்து காப்பாற்ற அரசு தலைமை வழக்கறிஞரான டி.சில்வா தலையிட்டார் என்று நீதிபதி பகவதி குழு கூறியது. அந்த சில்வாதான், இப்போது இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையத்தின் தலைவர். குழுவின் மற்றொரு உறுப்பினர். சர்வதேச பயங்கரவாத ஒழிப்புக்கான அய்.நா. துணைக் குழுவில் இடம் பெற்றவர். (இலங்கை அரசு விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையே பயங்கரவாதிகளாக கூறி வந்தது) இவர்களை ஒழிப்பதற்காக அய்.நா. குழுவில் இடம் பெற்ற பிரதிநிதி, தமிழர்களுக்கான இறுதி யுத்தத்தில் இலங்கையில் நிரந்தர பிரதிநிதியாக அய்.நா.வில் இடம் பெற்றிருந்த எச்.எம்.ஜி.எஸ். பலிஹாக்கரா என்பவர் இந்த ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர். இலங்கையில் ராணுவத் தாக்குதல்களை அய்.நா.வில் நியாயப்படுத்திப் பேசியவர். இந்த ஆணையத்தில் இடம் பெற்றிருந்த எட்டு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் இப்படி அரசின் நம்பிக்கைக்கு உரியவர்கள்; போர்க் குற்றங்களை ஆதரித்தவர்கள்.

18 மாதம் செயல்பட்ட இந்தக் குழு, வன்னிப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியது, 6 நாட்கள் மட்டுமே! 17 நாட்களில் கள ஆய்வுகளை முடித்து விட்டது. ஆணையத்தின் அலுவலகம் கொழும்பில் இருந்தது. அவர்களின் முன்னால் பாதிக்கப்பட்ட வர்கள் சாட்சியமளிக்கும்போது அவர்களுக்கு உதவக் கூடிய வழி நடத்துவோர் எவரும் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியமளிக்கும்போது, மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் உள்ளாகும் நிலையில் உதவக்கூடியவர் எவரும் இல்லை. பெண்கள் பாலுறவு வன்முறை உட்பட தங்களின் பாதிப்புகளை ஆணையத்தில் ஆண் உறுப்பினர் களிடையே எப்படி விரிவாக கூற முடியும்? 8 ஆணைய உறுப்பினர்களில் பெண் ஒருவர் மட்டுமே. ஆணையத்தின் செயல்பாடுகளும் வெளிப்படையாக இல்லை. ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்ற சட்டபூர்வ உரிமையும் ஆணை யத்துக்கு வழங்கப்படவில்லை. சாட்சிகளுக்கு பாதுகாப்பும் இல்லை; ராணுவத்துக்கு எதிராக சாட்சி கூறிவிட்டு, மீண்டும் ராணுவத்தின் பாதுகாப்பு கீழ்தான்அவர்கள் வாழ வேண்டும். தமிழர் வாழும் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

போரில் கொல்லப்பட்ட பொது மக்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கைப் பற்றி ஆணையம் எந்த புள்ளிவிவரத்தையும் தரவில்லை. ஆணையத்தின் செயல்பாடுகளிலேயே இதுதான் முதன்மையானது.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் வன்னிப் பகுதியிலும் அரசு பதிவேடுகளின் கீழ் பதிவாகியிருந்த மக்கள் தொகை 429,059. போருக்குப் பிறகு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட மக்கள் எண்ணிக்கையோ 282,380. இது அய்.நா. தயாரித்த புள்ளி விவரம். (2009, 10 ஜூலை நிலவரம்) 146,679 பேர் என்ன ஆனார்கள்? இலங்கை அரசு ஆணையத்தின் முன் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் டாக்டர் இராயப்பு ஜோசப் எழுத்துப்பூர்வமாக, இதைத் தாக்கல் செய்தார். போருக்குப் பிறகு தமிழர் பகுதியில் நில பறிப்பு, ராணுவ மயமாக்குதல், சிங்களர் குடியேற்றம், புத்தமயமாக்குதல், மனித உரிமை மீறல் குற்றங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். ஆணையம் இதுபற்றி எதுவுமே கூறவில்லை.

‘உயர் பாதுகாப்பு வளையம்’ என்று இராணுவம் அறிவிக்கும் பகுதிகளில் மக்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் வீடுகளை இழந்த யாழ்ப்பாணத் தமிழர்கள், 60000 பேர் இந்த பகுதியில் மீன் பிடிக்கச் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு. 24 இலங்கை அதிகாரிகளின் கையொப்பம் பெற்றே மீன் பிடிக்கச் செல்ல முடியும்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பி லிருந்து விடுபடவும், தொழில் பயிற்சி அளிக்கவும் தடைபோடப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங் களோ, சர்ச்சுகளோ, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அய்.நா.வின் குழு நடத்திய விசாரணை அறிக்கையில் இறுதி கட்டப் போரிலும் போருக்குப் பிறகும் இராணுவம் நடத்திய பாலுறவு வன்முறைகளைக் குறிப்பிடுகிறது. பல சம்பவங்கள் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி, பாதிக்கப்பட்ட பெண்கள் மூடி மறைத்து விட்டார்கள். பெண்களின் நிர்வாண உடலையும், சிதைக்கப்பட்ட உடலையும் ‘வீடியோ’ சான்றுகள் வெளிப்படுத்தின. தற்காலிக முகாம்களில் பெண்கள் இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டதை, பல சர்வதேச தொண்டு நிறுவனங்களே வெளிப்படுத்தின. இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை அரசு விசாரணை ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை.

ஆங்காங்கே தனி மனிதர்களாக சில இராணு வத்தினர் தவறு இழைத்திருக்கலாம் என்று கூறுகிறது ஆணையம். இராணுவமே ஒரு அமைப்பாக குற்றம் செய்யவில்லை என்று கூறுகிறது. போரில் 40,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அய்.நா. அறிக்கை கூறுகிறது. மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு, 146,679 பேர் கதி என்னவென்று தெரியவில்லை என்று ஆதாரங்களுடன் கூறியுள்ளார். ஆனால், இலங்கை அரசின் ஆணையமோ, நான்கு அத்துமீறல்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதுவும், இராணுவத் திலுள்ள தனி நபர்களால்தான் என்று கூறுகிறது. நான்கு ராணுவத்தினர் நடத்திய முறைகேடுகளால் 40000 பேர் கொல்லப்பட்டுள்ளார்களா? அய்.நா.வின் அறிக்கை வெளியிட்டுள்ள கடுமையான குற்றச் சாட்டிலிருந்து இலங்கை தன்னை காப்பாற்றிக் கொள்ளவே, இந்த ஆணையத்தை நியமித்திருக்கிறது.

இராணுவம் பாராட்டத்தக்க அணுகுமுறைகளை வகுத்து செயல்பட்டது என்றும், பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கு முன்னுரிமை தந்தது என்றும், ஆணையம் இராணுவத்திற்கு புகழாரம் சூட்டுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஆஸ்திரேலிய குடிமகன் - இலங்கையில் ‘குடியமர்வுத் துறை’ அமைச்சருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், இலங்கை பாதுகாப்புப் படை தமிழர்களை சித்திர வதை செய்து கொலை செய்ததை உறுதி செய்தது. அப்பாவி மக்களை ராணுவம் சுட்டு, வீதிகளில் வீசி எறிந்துள்ளதை மனுதாரர் நேரில் பார்த்ததையும் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

போர் நடந்தபோது 2008 செப்டம்பரில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் வெளியேற்றப்பட்டன. ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இதுபற்றி இலங்கை விசாரணை ஆணையம் எதையும் குறிப்பிடவில்லை.

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள்; ஊடகவியலாளர் படுகொலைகள்; அரசு ஆதரவு துணைப் படைகளில் சிறுவர்கள் சேர்க்கப்பட்டது; சித்திரவதைகள்; வடக்கு கிழக்கில் போரினால் கணவனை இழந்துவிட்ட 90000 பெண்கள்; குழந்தை களின் கல்வி பாதிப்பு; அனாதைகளாகிவிட்ட சிறுவர்கள்; முள்வேலி முகாமான மானிக் முகாமில் 282,000 தமிழர்கள் சந்தித்த அவலங்கள்; தமிழர்கள் சுதந்திர நடமாட்டத் தடை போன்றவை பற்றி ஆணையம் எதையும் குறிப்பிடவில்லை.

ஒன்றரை ஆண்டுகாலம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இலங்கை அதிபரைக் காப்பாற்றிய ஆணையம் இராணுவ முறைகேடுகளுக்கு வேறு சில ஆணையங்களை நியமிக்க பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து அதிபரை காப்பாற்ற ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அய்.நா.வில் பான்கிமூன் நியமித்த குழு, அய்.நா.அலுவலகங்கள் மற்றும் அகதிகளுக்கு உணவு வழங்கும் மய்யங்களில் குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டி, அய்.நா. இதை ஏன் வெளி உலகுக்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வியை எழுப்பி யிருக்கிறது. இந்த குண்டு வீச்சுக்கு அய்.நா.வின் செயற்கைக் கோள் படங்களே சான்றுகளாக உள்ளன. இலங்கை அரசு ஆணையம் இதை மறுக்க முடியாது.

அய்.நா. குழு அறிக்கை

• அய்.நா.வின் முன்னாள் அதிகாரி கார்டன்வெய்ஸ் எழுதிய ‘தி கேஜ்’ எனும் நூல்;

• சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘கொலைக்களம்’

• ‘ஹெட்லைன்ஸ்’ டுடே தொலைக்காட்சி படம் பிடித்த ‘இனப் படுகொலைக்கு சாட்சியங்கள்’

• இந்திய தொலைக் காட்சிகள் தயாரித்த ‘இலங்கையின் பொய்மை’

இந்த தொலைக்காட்சிகள் எதுவுமே இலங்கை அரசு ஆணையத்தின் அறிக்கையை ஏற்கவில்லை. அது ஒரு சார்பானது என்று புறந்தள்ளி விட்டார்கள்.

இலங்கை அரசு போரினால் கற்றுக் கொண்ட படிப்பினை என்ன? யாரிடமிருந்து எதை கற்றுக் கொண்டது? இதற்கு பதில் கிடையாது. சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியத்தையே இலங்கை அரசின் ஆணைய அறிக்கையின் ஓட்டைகளும் இருட்டடிப்புகளும் உறுதி செய்கின்றன.