ஆளுங்கட்சிக்கு அடிபணிந்து கிடக்கும் அணுஉலை ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம்

வாழ்வுரிமைக்குப் போராடும் கூடங்குளம் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மனித உரிமை வழக்கறிஞர்கள் மய்யத்தின் சார்பில் 6.10.2012 அன்று உண்ணாநிலைப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. வழக்கறிஞர் சா. ரஜினிகாந்த் வரவேற்புரையாற்ற, வழக்கறிஞர் செ. விஜய குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் கல்விமணி, சிவக்குமார், சரசுவதி, வழக்கறிஞர் செந்தில் நாதன், தியாகு, மருத்துவர் புகழேந்தி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன். உண்ணாவிரதப் போராட்ட வடிவம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றாலும் போராட்டத்தின் நோக்கத்தை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று கூறினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரை மக்கள் ஓராண்டு காலத்துக்கு மேலாக அமைதி வழியில் போராடி, அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு வரலாறு படைத்திருக்கிறார்கள். இந்தப் போராட்ட சக்திகளை சிதைக்க, குழப்ப, பிளவு படுத்த, ஆட்சியாளர்கள் தங்களின் சூழ்ச்சித் திட்டங்களின் மூலம் வலை வீசினார்கள். சாதிப் பிளவை, மதப் பிளவை உருவாக்குதல்; அன்னிய சக்திகளின் ஊடுருவல் - என்ற பொய்யுரைப்புகளை எல்லாம் ஒன்றுபட்ட மக்கள் சக்தி முறியடித்தது. போராடும் மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டு அரசு அடக்குமுறைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்த லாம் என்ற கனவும் பிசுபிசுத்தது. தொடர்ச்சியான வன்முறைக்கு இடமில்லாத அறவழிப் போராட்ட வடிவங்களை இவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கான அடிப்படை.

சமூக அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட ‘சூத்திர’, ‘பஞ்சம’ உழைக்கும் மக்களை எப்போதும் தங்கள் அதிகாரத்துக்கும் ஆளுமைக்கும் அடி பணிந்து கிடக்க வேண்டும் என்பதே இந்திய ஆளும் பார்ப்பன அதிகாரக் கும்பலின் சிந்தனைப் போக் காகும். விவசாயிகளுக்கு எதிராக அவர்கள் உணர்வைப் புறந்தள்ளி, விவசாயக் கொள்கையைத் திணித்து, தற்கொலைக்குத் தள்ளுவார்கள். தொழி லாளர்களுக்கு எதிரான சட்டங்களைத் திணிப் பார்கள். பொது மக்கள் தலையில் பெட்ரோல், டீசல், கட்டணச் சுமைகளைத் திணித்து, இது தான் சரியான பொருளாதாரக் கொள்கை என்று சாதிப் பார்கள். வணிகர்களுக்கு எதிராக ‘வால்மார்ட்டு’ நிறுவனங்களைக் கொண்டுவந்து இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு சரியானது என்று கட்டளையிடு வார்கள். அதே போன்று,

ஏதோ, இடிந்தகரை-கூடங்குளம் மக்கள் ஏதுமறியாத முட்டாள்கள் போலவும், இந்த ஆளும் பார்ப்பனிய அதிகாரக் கும்பலுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போலவும் இந்த ‘ஏதுமறியாத’ மக்களை சில ‘படித்தவர்கள்’ தூண்டிவிடுவதாகவும் திரும்பத் திரும்பக் கூறி, போராடும் மக்களின் உண்மையான கவலை, அச்ச உணர்வைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே முடியாது என்று கர்வத்துடன் பேசுகிறார்கள்.  இத்திட்டத்தை எதிர்த்து, 1988 இல் மக்கள் அமைதி வழியில் போராடியபோது, காவல் துறை அடக்குமுறைகளை ஏவியது. துப்பாக்கிச் சூடு நடத்தியது. இத்திட்டத்தின் 3, 4, 5, 6 ஆவது பிரிவுகளைத் தொடங்க திட்டமிட்டபோது அது குறித்து பொது மக்கள் கருத்தைக் கேட்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது, அய்யோ, எங்களுக்கு இந்த ஆபத்து வேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்தைக் குலைத்துவிடாதீர்கள் என்று தான் பெரும்பான்மை மக்கள் கூறினார்கள். அதை ஆளும் அதிகாரக் கும்பல் புறந்தள்ளியது. கடந்த ஆண்டு கூடங்குளம் முதல் அணு உலை செயல்படும் முயற்சிகள் தீவிரமான நிலையில் மக்கள் அமைதி வழியில் ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போராடும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். அப்போது உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரவிருந்த நேரம். தேர்தல் முடிந்த பிறகு மன்மோகன் அரசிடம் சமரசம் செய்து கொண்டு, மக்களின் அச்சத்தை நீக்காமல், அது தீவிரமாக அதிகரித்த நிலையில் திட்டத்தை திணிக்கவும் போராட்டத்தை ஒடுக்கவும் ஜெயலலிதா முன் வந்தார். கிராமம் கிராமமாக தமிழக காவல் துறையும் துணை ராணுவமும் மச்களை அச்சுறுத்தி தேடுதல் வேட்டைகளை நடத்திக் கொண்டிருக் கிறது. மக்கள் கடலை நோக்கி ஓட வேண்டிய சூழலையே உருவாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு அப்பாவி மீனவர் உயிரையும் பலி வாங்கி விட் டார்கள்.  ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்ற நியாயமான அச்சத்தை துப்பாக்கிக் குண்டுகளாலும் தடிகளாலும் கண்ணீர் புகைக் குண்டுகளாலும் தேசவிரோத வழக்குகளாலும் அதிகாரத் திமிரால் ஒடுக்கிவிடத் துடிக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை வெளிநாட்டு சக்திகள் தூண்டிவிடுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங்கே கூறினார். அமெரிக்க ‘எஜமானருக்கு’ அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆட்சி நடத்துபவர் மன்மோகன் சிங். அவரே கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தை அமெரிக்கா தூண்டுவிடுகிறது என்றார். அணுஉலைகளை வாங்கியது ரஷ்யாவிடமிருந்து என்பதால், அமெரிக்கா ‘துருப்புச் சீட்டை’ப் பயன்படுத்தி திசை திருப்பிவிடலாம் என்ற கீழான நிலைக்கு நாட்டின் பிரதமரே இறங்கினார். மன்மோகன் சிங் நிலையே இது என்றால் நாராயணசாமி போன்றவர்களைப் பற்றிக் கூறவே வேண்டாம். தொலைக்காட்சிகளிலே ஒவ்வொரு நாளும் அந்தக் காலத்து தமிழ்ப்பட வில்லன்கள் போல் அவர் அளித்தப் பேட்டிகளை பார்த்தோம். ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து இங்கே தங்கியிருந்த ஒரு அப்பாவியைப் பிடித்து, கூடங்குளம் போராட் டத்தோடு எந்தத் தொடர்புமற்ற அவரை, நாடு கடத்தினார்கள். இதன் மூலம் போராட்டத்துக்கு அன்னிய சக்திகள் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதே நோக்கம். “அன்னிய சக்தி”யைக் கண்டுபிடித்து, நாடு கடத்திய பிறகு, போராட்டம் நின்றிருக்க வேண்டுமே! நின்று போனதா? இல்லை. போராட்டம் மேலும் சூடு பிடித்தது.

ஜப்பானில் புக்குஷிமாவில் நடந்த அணு உலை விபத்தை நேரில் சந்தித்து, பாதிப்புக்குள்ளான அப்பகுதியைச் சேர்ந்த ஜப்பானியர்கள், இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தபோது விமான நிலையத்திலிருந்தே அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். போராட்டத்தை வழி நடத்தும் உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டுப் பணம் வருகிறது என்றும், அதைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் நாராயணசாமி நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார். மத்திய வருமான வரி, கலால் வரி துறை களமிறக்கப் பட்டு, போராட்டக் குழுத் தலைவர்களின் தொண்டு நிறுவனங்கள் சோதனைக்குள்ளாயின. இவ்வளவுக் கும் பிறகு நாடாளுமன்றத்திலே வெளிநாட்டுப் பணம் வருவது பற்றி கேள்விக் கேட்டபோது சத்தியத்தையே பேசும் காந்தி வழி வந்த நாராயணசாமி, “அப்படி ஏதும் அரசிடம் தகவல் இல்லை” என்று ‘அந்தர் பல்டி’ அடித்தார். போராடுகிற இந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள், ‘படிப்பறிவு’ இல்லாத முட்டாள்களாகக் கருதும் ‘பார்ப்பனிய இறுமாப்பும்’ அதிகாரத் திமிரும் தானே இப்படி எல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது?

அணுசக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஒரு பேட்டி அளித்தார். ‘அணுஉலை விபத்துக்கள்’ நடக்கவே நடக்காது என்று கூற முடியாது. எப்போதாவது அபூர்வமாக இந்தியாவில் நடக்கலாம் என்றார். போராடும் மக்கள் இதைப் புரிந்து கொள்வதற்கு ‘விஞ்ஞானி’களாகவா இருக்க வேண்டும்? ‘புக்குஷிமா’ விபத்துகளையும், அதன் கொடூரப் பாதிப்புகளையும் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி வழியாக இந்த மக்கள் பார்க்கும் போது, இந்த ஆபத்துகளை உணர மாட்டார்களா? இன்னும் சொல்லப்போனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆபத்து ஏற்படும்போது தற்காத்துக் கொள்வது எப்படி என்பதற்கு அணுமின் நிர்வாகம் நடத்திய ஒத்திகையைப் பார்த்தபோதுதான் இந்த மக்களுக்கு உண்மையான அச்சமே வந்தது! நாங்கள் கேட்கிறோம், இதிலே மத்திய அரசு ஒளிவுமறைவின்றி செயல்படுகிறதா? உண்மையிலே நாட்டின் மின்சார வளர்ச்சிக்கான திட்டமாக இது இருக்குமேயானால், இதில் மக்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு இருக்கிறது; எந்த ஆபத்தும் இல்லை என்பது உண்மையானால், அரசு ஏன் ரகசியமாக செயல்பட வேண்டும்? அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளையே ஏன் மீற வேண்டும்?

உச்சநீதிமன்றத்திலே கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடந்த விவாதங்கள் இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியிருக்கிறதே! ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பாக தொடரப்பட்ட வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிசார்த்பூஷன் தனது வாதத்தில் முன் வைத்துள்ள கருத்துகள் ஏடுகளில் வெளி வந்திருப்பதை படித்திருப்பீர்கள். அரசே சுற்றுச் சூழல் விதிகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுஉலை விபத்துக் காப்பீடு சட்டத்தை மீறி இந்தத் திட்டத்தை கூடங்குளம் மக்கள் மீது திணிக்கலாமா? இந்த உண்மைகள் உச்சநீதிமன்றத்தில் வெட்டவெளிச்சமாகியுள்ளதே.

கூடங்குளம் அணுமின் திட்டத்தினால் சுற்றுச் சூழல் ஆபத்துகள் இல்லை என்ற சான்று 1989 ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்டது. இந்தச் சான்று 5 ஆண்டுகள் மட்டுமே செல்லத் தக்கது. ஆனால், இதே சான்றிதழை வைத்துக் கொண்டு, 2002 ஆம் ஆண்டுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ‘உரிய சுற்றுச்சூழல் தடையின்மை’ சான்றிதழ் இல்லாமலே திட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். சுற்றுச்சூழல் அமைச்சர் காலாவதியாகிப்போன சான்றிதழை வைத்துக் கொண்டு, சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று பொய் பேசுகிறார். அதுமட்டு மல்ல, கூடங்குளம் அணுஉலை வாங்கியது தொடர்பாக ரஷியாவுக்கும் இந்தியாவுக்குமிடை யிலான உடன்பாட்டை வெளியிட மன்மோகன் ஆட்சி மறுக்கிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. நீதிமன்றம் வழியாகக் கேட்கப் பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி வழியாகவும் கேட்கப்பட்டது. அனைத்துக் கும் அது ‘ரகசிய ஆவணம்’ வெளியிட முடியாது என்று அரசு சாதிக்கிறது.

உங்களுக்கு நினைவிருக்கும், நாடாளுமன்றத்தில் அணுசக்தி இழப்பீடு சட்டம் (Nuclear Liabilities bill) ஒன்றை மன்மோகன் ஆட்சிக் கொண்டு வந்தது. உண்மையிலேயே அணுமின் திட்டங்களால் ஆபத்து இல்லை என்றால் இப்படி ஒரு இழப்பீடு சட்டமே தேவைப்பட்டிருக்காதே! அது போகட்டும். இந்தச் சட்டத்திலே என்ன கூறப்பட்டிருக்கிறது? விபத்து ஏற்பட்டால் அணுஉலையை விற்ற நிறுவனம் இழப்பீடாக ரூ.1500 கோடி மட்டுமே வழங்கும். இதற்கும் மேல் இழப்பீடு தர வேண்டுமானால், இந்திய அரசின் அணுசக்திக் கழகம் ரூ.500 கோடி தரவேண்டும். மேற்கொண்டு ஆகும் இழப்பீட்டு செலவு முழுவதையும் அரசே மக்கள் பணத்திலிருந்து வழங்க வேண்டும். இதுதான் சட்டம். இதற்கே நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் வந்தன. ஆனால், ரஷ்யாவுடன் மன்மோகன் ஆட்சி செய்துள்ள ஒப்பந்தம், நாடாளுமன்றத்தின் சட்டத்தையேகூட குப்பைக் கூடையில் வீசி எறிந்திருக்கிறது. அணுஉலையை விற்ற ரஷ்யா, இழப்பீடாக ஒரு சல்லிக்காசும் தரத் தேவையில்லை என்ற இந்த ரகசிய ஒப்பந்தத்தை உருவாக்கி யுள்ளார்கள் என்ற உண்மை உச்சநீதிமன்றத்தில் வெளிவந்துள்ளது.

ரஷ்யா விற்ற அணுஉலை நூற்றுக்கு நூறு பாதுகாப்பு என்பது உண்மையானால், விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்று ரஷ்யா ஏன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்? அணுஉலையை விற்ற நாட்டுக்கே தனது அணுஉலையின் பாதுகாப்பில் முழுமையான நம்பிக்கை இல்லை என்பதுதானே? ஆனால், மன்மோகன்சிங்கும் அவரது “தொண்டரடிப் பரிவாரங்களும்” ஆபத்து இல்லை; ஆபத்து இல்லவே இல்லை என்று பஜனை பாடிக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மாறாக ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் என்றால், இது தானே உண்மையான தேசத் துரோகம்? ஆனால், கூடங்குளத்தில் போராடுகிற 7000 மக்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தைப் போடுகிறது, இந்த ஆளும் அதிகாரப் பார்ப்பனியக் கும்பல்!

இந்திய அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியம் என்று ஒரு அமைப்பு (Atomic Energy Regulatory Board)  இங்கே செயல்படுகிறது. இந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் செயல்படுகின்றன. இந்த அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியம் சுதந்திரமாக செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டா என்றால், இல்லை. அரசுக்கு கட்டுப்பட்டு அதன் ஆணைகளை ஏற்று செயல்படக்கூடிய அதிகாரமற்ற அமைப்பாகவே இந்தியாவின் ஆளும் அதிகாரக் கும்பல் இதை வைத்திருக்கிறது. அண்மையில் இந்தியாவின் பல்வேறு ஊழல்களை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் மத்திய தணிக்கைக் கணக்காய்வுக் குழு (CAG)  - இந்த அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு ஆய்வுக் குழு எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

•              இது அரசுக்கு அடிபணிந்து நடக்கும் நிறுவனமாகவே செயல்படுகிறது.

•              இந்த நிறுவனத்திடம் அணுக் கதிர்வீச்சிலிருந்து அவசர நிலை காலத்தில் மக்களைக் காப்பாற்றும் கொள்கைகள் ஏதும் கிடையாது.

•              சட்ட ரீதியான அங்கீகாரம் இந்த அமைப்புக்குக் கிடையாது.

•              அணுஉலை பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளில் தலையிடும் உரிமையும் கிடையாது.

இதுதான் நாட்டின் அணுமின் உலைகளை நிர்வகிக்கக் கூடிய ஒரு அமைப்புக்கு இந்தியாவின் ஆளும் அதிகாரக் கும்பல் வழங்கியுள்ள அங்கீகாரம், சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அருணாராய், இந்திய தணிக்கைக் கணக்காய்வுக் குழுவின் இந்தக் கருத்துகளை சுட்டிக்காட்டி, இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தேசிய ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே வலியுறுத்தியுள்ளார்.

புக்குஷிமா விபத்துக்குப் பிறகு அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாடு வாரியம், குழு ஒன்றை அமைத்து, புக்குஷிமா விபத்தின் அடிப்படையில் புதிய பாதுகாப்பு விதிகளைப் பரிசீலித்தது. இந்தக் குழு 17 பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தியது. அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக செயல்படுத்தாமலே மன்மோகன் தலைமையிலான ஆளும் அதிகாரக் கும்பல் இந்தத் திட்டத்தை அவசர அவசரமாக மக்கள் மீது திணிக்கிறது. அதாவது, அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த நிறுவனமே மதித்து செயல்படத் தயாராக இல்லை; அரசின் முறைகேடுகளுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டிக் கொண்டிருக்கிறது.

அணுஉலை செயல்படாது முடங்கிவிட்டால், கதிர்வீச்சு ஆபத்திலிருந்து காப்பாற்ற, உடனடியாக அணுஉலையை இயக்குவதற்கான மாற்று ஏற்பாடுகள், அதாவது சக்தி இணைப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட நீர் சேமிப்பு இருக்க வேண்டும். புக்குஷிமாவில் சுனாமியில் குளிரூட்டும் திரவம் வழிந்தோடி விட்டதால், உலையின் மய்யம் உருகி ஆபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு குளிர்விக்கும் திரவம் இல்லாததால் நிகழ்ந்தது என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. (loca - loss of coolant accident) கூடங்குளத்தில் இதுபோல் நிகழாமல் தடுக்க இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த யோசனையை புறக்கணித்து விட்டார்கள். குளிரூட்டுவதற்கு கடல் நீரைப் பயன்படுத்த திட்டமிட்டார்கள். கடல்நீர் இதற்காக சுத்திகரிக்கப்பட வேண்டும். ஆனாலும் கடல் நீரில் எஞ்சியிருக்கும் உப்புகளால் உலை அரிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால், இதற்கெல்லாம் இப்போது அவசரமில்லை. எதிர்காலத்தில், அதாவது மின் உற்பத்தி தொடங்கி 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகளுக்குள் ஒரு தண்ணீர் தொட்டியை உருவாக்கி, அதில் நகரக்கூடிய டீசல் ஜெனரேட்டர்களை அமைத்துக் கொள்ளலாம் என்று அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட யோசனையை எந்த மறுப்பும் இன்றி அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புக் கொண்டுவிட்டது. அதிகாரமற்ற வாரியம் அரசுக்கு அடிபணிந்து தானே போக வேண்டும்? மக்கள் பாதுகாப்பு பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இந்த தண்ணீர் தொட்டியை அரசு அமைத்து முடிப்பதற்கு முன் ஏதேனும் விபத்து நேருமானால், விபத்தை மக்கள் தான் சந்திக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பு, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடிப்பதாக உறுதி கூறியவர்கள், இப்போது உற்பத்தி தொடங்கிய பிறகு காலப்போக்கில் செய்து முடிப்பதாகக் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அணுமின் திட்டத்திலிருந்து 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் வசிக்கக் கூடாது; 10 கிலோ மீட்டர் தூரம் வரை பாதுகாக்கப்பட்ட (Sterilised Zone) பகுதியாக இருக்க வேண்டும் என்பது ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்த குழுவின் 17 பரிந்துரைகளில் இடம் பெற்றுள்ள அம்சம்.ஆனால், கூடங்குளம் அணுமின் திட்டத்திலிருந்து 1.6 கிலோ மீட்டர் தூரத்தில் 4 ஆயிரம் மக்களும், 5 கி.மீட்டர் தூரத்தில் 40,000 மக்களும், 10 கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியில் ஒரு லட்சம் மக்களும் வசிக்கிறார்கள். இது பற்றியெல்லாம் ஆளும் அதிகாரக் கும்பலுக்கோ, கூடங்குளத்தை தங்களின் சங்கரமடத் திட்டமாகவே புனிதமாகப் போற்றி எழுதிக் கொண்டிருக்கும் ‘தினமலர்’ அக்கிரகாரங்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை.

ஆபத்து என்று வந்துவிட்டால், உடனடியாக மக்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு நிர்வாக அமைப்பு இந்த ‘புண்ணியபூமியில்’ உண்டா என்பதை சிந்திக்க வேண்டும். மலக்குழிக்குள் அடைப்பு களை நீக்க இறங்கும் தொழிலாளி, எந்த நேரத்திலும் விஷ வாயுவில் சிக்கி சாகலாம் என்ற நிலையிலும் மனிதர்களை மலக்குழிக்குள் இறக்கிவிடும் நிர்வாக அமைப்புதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. பட்டாசுத் தொழிற் சாலைகள் நிறைந்த சிவகாசியிலும், அதன் சுற்று வட்டாரத்திலும், எந்த நேரத்திலும் வெடி விபத்துகள் நிகழக்கூடிய சூழல் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை உடன் மருத்துவமனைக்குக் கொண்டுப்போய் சிகிச்சை தந்து காப்பாற்றிவிட முடியாது. அதைத் தானே சிவகாசிக்கு அருகே முதலிபட்டி கிராமத்தில் நடந்த வெடி விபத்தின்போது பார்த்தோம். ‘சூத்திரர்’களும், ‘பஞ்சமர்’களுமாக 38 பேர் மரணமடைந்தார்கள்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து சேருவதற்கான சாலை வசதி இருந்திருக்குமானால், சுற்று வட்டார மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவுகள் இருந்திருக்குமானால், இந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். இத்தகைய கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல் படுத்தக்கூடிய அய்ரோப்பிய நாடுகளேகூட அணுமின் உலைகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரையும் பாமர மக்களையும் மனிதர்களாகவேகூட கருதாத இந்த பார்ப்பனிய கட்டமைப்பில் அணுஉலை விபத்துக்கள் நேரிடும்போது இந்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைத்துவிடப் போகிறது?

இடிந்தகரையைச் சுற்றியுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி, திருவனந்தபுரம் மாவட்டங்களில் அணுசக்தி வீச்சு ஆபத்திலிருந்து காப் பாற்றக்கூடிய எந்த மருத்துவ வசதியும் கிடையாது. ஆபத்து ஏற்படும்போது மேற் கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளை நாங்குனேரி கிராமத்தில் மக்களிடம் விளக்கிக் காட்டியதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அப்படி ஒரு ஒத்திகை தங்கள் கிராமத்தில் நடந்ததாக அடுத்த நாள் பத்திரிகைகளில் பார்த்த போதுதான் தங்களுக்குத் தெரியும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர். மக்கள் சிவில் உரிமைக் கழகம் தனது களஆய்வு அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இவ்வளவு சட்டமீறல் விதிமீறல்களை நடத்திக் கொண்டு உலகம் முழுதும் கை விடப்பட்டு வரும் ஒரு ஆபத்தான திட்டத்தை ஒன்றுபட்ட மக்கள் போராட் டத்துக்கு எதிராக அவர்கள் மீது திணித்தே தீருவோம் என்று மத்திய மாநில அரசுகள் துடிப்பதும், பார்ப்பன ஏடுகள் போராடும் மக்களை தேச துரோகிகள் அன்னிய ஏஜெண்டுகள் என்று வாய் கூசாமல் சேறுவாரி தூற்றுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் போராடும் மக்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகள் பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் சமுதாயப் பொறுப்போடு கடமையாற்ற முன் வந்திருப்பது பாராட்டி மகிழக்கூடியதாகும்.

ஈழத்தில் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிட்ட காலத்தில் உறுதியோடு நீதிமன்ற வளாகத்தை போராட்டக் களமாக்கி போராட்ட உணர்வை நெருப்பை அணையாது காப்பாற்றிய பெருமைக்குரியவர்கள் நீங்கள். சமூகநீதிப் போராட்டங்களின் விளைச்சல்களாக உயர்நீதிமன்றப் படிக்கட்டுகளில் வழக்கறிஞர்களாக வந்துள்ள நீங்கள், நம்மை ஆளாக்கிய நமது சமுதாயத்தின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட களமிறங்கியிருப்பதைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.