‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்ய்ய்ய்ய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன மனுதர்மம். இந்த மனுதர்ம சிந்தனைதான் இன்றும் சமூகத்தின் வாழ்க்கை முறை.

‘இந்து’ நாளேட்டில் வாரம்தோறும் பெண்ணியம் பற்றி கட்டுரை எழுதி வரும் கல்பனா சர்மா (மே 27) எழுதியுள்ள கட்டுரையில் மராட்டியத்தில் தான் சந்தித்த, புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மராட்டியத்தில் பழமையில் ஊறிய குடும்பத்தில் வந்தவர் அந்தப் பெண். திருமணம் முடிந்தவுடன், கணவர் வீட்டில், பெண்ணின் பெயரையே மாற்றி விடும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடருகிறது என்று கூறுகிறார் கட்டுரை யாளர். உஷா என்ற இந்தப் பெண்ணின் பெயர் திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாரால் ‘தபசியா’ என்று மாற்றப்பட்டுவிட்டதாம். இந்த மாற்றத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன், பிறந்து வளர்ந்த பெற்றோரின் உறவுகள் துண்டிக்கப் பட்டு, பெண்ணின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு, கணவன் வீட்டுக்கு, ஒரு வீட்டு வேலைக்காரியாகவும் குழந்தைகளைப் பெற்றுத் தரும் எந்திரமாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏதோ பெயர் தானே மாற்றப்படுகிறது என்று இதை எளிதாக எடுத்துக் கொளளாமல், ஏன் இப்படி நடக்கிறது? இது தேவை தானா? இதனால் திருமண வாழ்க்கையில் மாற்றம் வந்து விடப் போகிறதா என்ற கேள்விகளை எழுப்ப வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் கல்பனா.

பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணின் பெயர் மாற்றப்படவில்லையானாலும், திருமணத்துக்குப் பிறகு பெற்றோரின் தலை எழுத்து (இனிஷியல்) நீக்கப்பட்டு, கணவனின் பெயர் தலை எழுத்தாக மாற்றப்படுகிறது. மனைவியின் பெயருக்குப் பிறகு கணவரின் பெயரும் இணைக்கப்படுகிறது. ஆனால் கணவனின் பெயர் எந்த மாற்றத்துக்கும் உள்ளாவ தில்லை. ஏற்கனவே இருந்த நிலையிலேயே நீடிக் கிறது. இவை அனைத்துமே பார்ப்பன ‘மனுதர்மம்’ விதித்த ஆணைதான். “யவ்வனத்தில் கணவன் ஆஞ்ஞையில்” (திருமணமான பிறகு கணவனை மட்டுமே சார்ந்து) வாழ வேண்டும் என்ற மனுதர்மக் கொள்கையே அடிமை வாழ்வுக்கு அவர்களை இப்படி தயார்படுத்துகிறது. ஒவ்வொரு குடும்பத்தி லும் பார்ப்பன மனுவின் தர்மமே இன்றும் வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இதற்கு நேர் மாறாக, மனுதர்ம பார்ப்பனிய அடிமை வாழ்க்கை முறை இல்லாத பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டி யுள்ளார் கல்பனா. பிரான்சு நாட்டின் அதிபராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரான்காய்ஸ் ஆலன்டே; மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந் தெடுக்கப்பட்ட அவரது மனைவியோஆலன்டேயை திருமணம் செய்து கொள்ளாமலே அவருடன் சேர்ந்து வாழ்கிறார். டிரயர்வெய்பர் என்ற 47 வயதுடைய பெண் பத்திரிகையாளர். 20 ஆண்டு களாக அரசியல் துறையில் பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் இவர், இனியும் பத்திரிகைத் தொழிலையே தொடரப் போவதாகவும், அதிபரோடு சேர்ந்து வாழ்ந்தாலும் பொருளாதாரத்தில் எவரை யும் சார்ந்து நிற்கத் தயாராக இல்லை என்றும் கூறி யுள்ளார். ஒரு கணவனுக்கு பணிவிடை செய்பவராக நான என்னை வளர்த்துக் கொள்ளவில்லை. சுதந்திரத்தின் அடிப்படையிலேயே என்னுடைய வாழ்க்கையை கட்டமைத்து வந்திருக்கிறேன். என்று ‘நியுயார்க் டைம்ஸ்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். திருமணமே வேண்டாம் என்றோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் முறை நல்லது என்றோ, தாம் வாதிட முன்வரவில்லை என்று எழுதும், இந்தக் கட்டுரையாளர் தனது கணவர் நாட்டின் அதிபராக வந்த பிறகும்கூட, அவரோடு வாழ விரும்பும் ஒரு பெண், தனது தனித்துவத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இதை குறிப்பிட்டதாக கூறுகிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் வரலாற்றில் முதன்முறையாக இவர்கள்தான் இப்படி திருமண மின்றி இணைந்து வாழும் தம்பதிகள்!

இந்தியாவில் இனவாதம்

இந்தியாவிலும் இனப் பாகுபாடு இன வெறி இருக்கிறது என்றும், இங்கே இனவெறி இல்லை என்று நடிக்க வேண்டாம் என்றும், ‘இந்து’ ஏட்டில் (மே 29) ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலத்தவர்களை இந்தியாவின் பிற மாநிலங்களில் வெறுப்புக்குரியவர்களாகவே அவர்களிடம் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று அந்தக் கட்டுரை கூறியது. அது உண்மைதான் என்றா லும், மேல் கீழ் அடுக்கு வரிசையில் சாதியமைப்பு சமூகத்தைக் கூறு போட்டு காலங்காலமாய் மக்களை ஒதுக்கி வைத்திருப்பதை இக்கட்டுரையாளர் கண்டு கொள்ளவே இல்லை. அறிவாளிகள் என்று கூறப் படும் பிரிவினரும், நடுத்தர வர்க்கமும், சாதியமைப் பால் நிலைநாட்டப்பட்டுள்ள ‘இன ஒதுக்கலை’ப் பற்றி கள்ள மவுனம் சாதிப்பதால் இந்தக் கொடூர மான அமைப்பு தேசத்தின் பிரச்சினையாக்கப் படாமல், காப்பாற்றப்பட்டு வருகிறது இந்த உண்மையை ஜூன் 1 ஆம் தேதி அதே நாளேட்டில் இனியன் இளங்கோ எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். சாதி தீண்டாமை என்பதையும் இன வேறுபாடாகக் கருத வேண்டும் என்று 2001 இல் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாட்டிலேயே வலியுறுத்தபபட்டது. ஆனாலும், ‘மனுதர்ம’ப் பார்வையில் ஊறிக் கிடக்கும் சமூகம், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத ‘தீண்டாமை’எனும் கொடுமையை இன வேறுபாடாகவோ, இன வெறுபபாகவோ, பேசுவதற்கோ, எழுதுவதற்கோ கூட தயாராக இல்லை.

“கணவன் துராசாரமுள்ளவனாகவிருந்தாலும் அந்நிய ஸ்திரீலோனாயிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.” - மனு அத் 5; சுலோகம் 154.

ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு ‘பதிவிரதை யாக’ இருப்பதற்கான இலக்கணம் இது. இதுவே மனு விதித்த கட்டளை. பெரியார் கேட்டார், ‘பதிவிரதை’ என்று பெண்ணுக்கு கூறப்படும் இலக்கணம் ஆணுக்கு உண்டா? ஏன் ‘பதி விரதன் என்ற சொல் தமிழில் இல்லை? - இது பெரியார் கேட்ட கேள்வி! தமிழிலே கணவனை இழந்தப் பெண்ணுக்கு ‘விதவை’ என்ற சொல் இருக்கிறது. அதேபோல் மனைவியை இழந்த கணவனைக் குறிக்க ‘விதவன்’ என்ற சொல் ஏன் இல்லாமல் போனது? இதுவும் பெரியார் கேட்ட கேள்விதான். மனு எழுதி வைத்த ‘பெண்ண டிமைக்கு எதிராக பல சட்டங்கள் வந்துவிட்டன.

ஆனாலும், சமூகத்தை ‘மனு தர்மமே’ இன்னும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. உதாரணமாக கிருட்டிணகிரி மாவட்டத்திலிருந்து அண்மையில் வெளி வந்துள்ள செய்தியைப் பார்ப்போம்.

மே 30 ஆம் தேதி ஏடுகளில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டில் 14 குழந்தை திருமணங்களும், 2011-12 இல் 62 குழந்தை திருமணங்களும் 2012 ஏப்ரல், மே மாதங்களில் 12 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, 80 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த செய்தி கூறுகிறது.

• 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு விடுவதால் அரசுப் பள்ளிகளில் இந்த பருவத்தில் மாணவியர் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவது அதிகரித்து வருகிறது.

• இதற்காகவே மாவட்ட ஆட்சித் தலைவர் சி.என்.

மகேசுவரன் ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ மாணவியர் குழந்தைத் திருமணத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற நடை முறையை அமுல்படுத்தினார். குழந்தைத் திரு மணம் நடப்பதாகத் தெரிந்தால், உடனே மாவட்ட ஆட்சித் தவைலருக்கு தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்களும் விளம்பரப் படுத்தப்பட்டன. இப்படி வந்த புகார்களின் அடிப்படையில் 89 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

• திருமணத்தை விரும்பாத மாணவிகளே நேரடி யாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவகத்தோடு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கிறார்கள்.

• மே மாத துவக்கத்தில் ஓசூரில் ஆடம்பரமாக ஒரு திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடக்க இருந்த நேரத்தில் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரே களத்தில் இறங்கி அதிகாரி களை மிரட்டி திருமணத்தை நடத்த மேற் கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

(இதே சட்டமன்ற உறுப்பினர்தான் அண்மையில் கழகத் தோழர்களை தனது சகோதரர் மூலமாகக் கொடுமையாக தாக்குவதற்கு ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் செய்தி வெளி வந்துள்ளது.) • “காது குத்துப் போன்ற பெயரில் வேறு சடங்குகளை நடத்தப் போவதாக உறவினர்களை அழைத்து அங்கே குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. வெளியூர்களில் குடும்பத் தினருடன் சென்று வேலை பார்ப்போர் ஊர்த் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து குழந்தைத் திருமணங்களை திடீரென்று நடத்தி விடுகின்றனர்” - என்று அநத் செய்தி கூறுகிறது.

ஏழ்மையில் உழலும் பின் தங்கிய சமூகத்தினர் மனுவின் பார்ப்பனியத்தை பிடிவாதமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த பல்ய விவாகக் கொடுமைகளை சமூகத்தில் திணித்த பார்ப்பனர்களோ தங்களின் முன்னேற்றத்துக்காக கைவிட்டுவிட்டனர்.

மக்கள் பிரதிநிதியும் மனுதர்மத்தின் அடிமையே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரானாலும் ‘மனுதர்ம’த்துக்குத்தான் அவர் கட்டுப்பட வேண்டும் என்பதே நடைமுறை! ‘மனுதர்மம்’ கட்டளை யிட்டுள்ள மனித ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தான் ஊராட்சிகளில் ‘ரிசர்வ்’ தொகுதி முறை கொண்டு வரப்பட்டது. சட்டம் ‘தலித்’ தொகுதியை வரையறுத்து, ‘தலித்’ வேட்பாளரைத் தேர்வு செய்தா லும், சட்டம், ‘மனு’வின் பார்ப்பன கூட்டத்தின் முன் மண்டியிட்டு வருகிறது. இதுவே இப்போதும் நீடிக்கிறது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்தின் தலைவன் வி.கருப்பன், தலித் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கடந்த 7 மாதங்களாக பஞ்சாயத்து கூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரும் உரிமை கிடையாது. தரையில் தான் உட்கார வேண்டும. ஏனைய தலித் அல்லாத உறுப்பினர்கள் மட்டும்நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். ஊராட்சி துணைத் தலைவர் ஆறு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர் கூடிப் பேசி முடிவுகளை எடுப்பார்கள். நீட்டிய இடத்தில் பஞ்சாயத்து தலைவர் கையெழுத்திட்டாக வேண்டும்.

மாநில காவல்துறை இயக்குனருக்கு தன் மீது இழைக்கப்படும் தீணடாமைக் கொடுமைகளை விளக்கி, பஞ்சாயத்து தலைவர் புகார் செய்துள்ளார்.

இந்த பஞ்சாயத்திலும் மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துகளிலும் ‘தலித்’ பஞ்சாயத்து தலைவரை சாதி வெறியர்கள் ஏற்க மறுத்ததால், 20 ஆண்டுகளாக தேர்தலே நடக்க வில்லை. 2006 ஆம் ஆண்டில் தான் தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த பஞ்சாயத்துகளில் தேர்தலையே நடத்த முடிந்தது. இப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து பஞ்சாயத்து செயலாளரை மட்டும் பதவி நீக்கம் செய்துள்ளார். ‘தீண்டாமை’ யைத் திணித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘மனுதர்டத்தின்’ அதிகாரத்தின் முன் உள்ளாட்சி சட்டங்களும் வன்கொடுமை சட்டங்களும் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும் என்றால் இதற்குப் பெயர் ‘மனுதர்ம’ ஆட்சி தானே?

திட்டக் குழுவும் கல் முதலாளிகளும்

நகரத்தில் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.32 வருமான வந்தாலும், கிராமத்தில் ரூ.28 வருமானம் வந்தாலும் அவர் வறுமைக்கோட்டைத் தாண்டி விட்டார் என்கிறது திட்டக்குழு. திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா, உலகமயமாக்கல் கொள்கையின் தீவிர ஆதரவாளர். அமெரிக்க முதலாளியின் கருத்தை செயல்படுத்தும் ஏவலர். ரூ.28 வருமானம் வந்தவருக்கு வறுமை ஒழிந்தவிட்டது என்று கூறிய இவர், டெல்லியிலுள்ள தனது திட்டக் குழு அலுவலகத்தின் இரண்டு கழிப்பறைகளை சீரமைக்க ரூ.35 லட்சம் செலவிட்டுள்ளார். ‘ஸ்மார்ட் கார்டு’ கையில் வைத்திருப்போர் மட்டுமே, இந்தக் கழிப் பறையை பயன்படுத்த முடியுமாம். வெளி நாட்டுப் பயணங்கள் வேண்டாம், நட்சத்திர ஓட்டல் கூட்டங்கள் வேண்டாம் என்று மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கும்போது இரண்டு கழிப்பறைகளை திருத்தி அமைக்க ரூ.35 லட்சம் செலவிடலாமா என்ற கேள்விகள் எழுப்பப்படு கின்றன. நியாயமான கேள்விதான்.

வறுமை கோட்டுக்கும் நவீன கழிப்பறை சொகுசுவுக்கும் இடையே உள்ள பாகுபாடு, ‘பிராமண-சூத்திர’ பாகுபாடுகளின் மறு வடிவம் தானே. ‘மனுதர்ம’ தத்துவமே வெவ்வேறு வடிவங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏடுகளில் வந்துள்ள மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்ற தொழிலதிபர் ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரம், அபயஹஸ்தம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினாராம்.

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏடு (ஜூன் 14, 2012) மற்றொரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு நாளும் 9 காலப் பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மடப் பள்ளியின் போதும் முருகனுக்கு படைக்கப்பட்ட சோறு, கவளம் கவளமாக யானைக்கு போடப் பட்டதாம். வேறு சிலர் அதை மாடுகளுக்கு வாங்கிப் போனார்களாம். இவ்வளவுக் கும் பிறகு, ஒவ்வொரு நாளும் 193 கிலோ சோறு கடலில் கொட்டப்பட்டு வந்ததாம்.

நீண்ட காலம் இந்த ‘கிரிமினல் விரயத்தை’ பார்ப்பன புரோகிதர்கள் செய்து வந்தனர்”. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த பிறகுதான், கடந்த மே 5 ஆம் தேதியிலிருந்து அந்த சோற்றில் மிளகு, சீரகம் சேர்த்து பக்தர்களுக்கு ‘மிளகு சம்பா’ என்ற பெயரால் பிரசாதமாக வழங்கத் தொடங்கியுள்ளார்களாம்.

பாழும் கல்லின் மீது குடம்குடமாக பாலைக் கொட்டி அழும் பாலாபிஷேகம், ‘அக்னி’யை வளர்த்து, வேத மந்திரம் ஓதி, அதில் நெய்யையும், பருப்பையும் கொட்டி பாழடிக்கும் பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்கள்; இப்படி மக்களுக்கு எதிரான வீண் விரயங்கள், பார்ப்பன சவுண்டிகளால் ஒவ்வொரு நாளும் நடக்கிறதே. அலுவாலியாவின் 32 லட்சம் கழிவறையாவது மலத்தை வெளியேற்றப் பயன்படுகிறது. இந்த பார்ப்பனக் கும்பல் நடத்தும் படையலும், யாகமும் அதற்குக் கூடப் பயன்படுவதில்லையே! எந்தப் பார்ப்பனராவது எந்த ஆன்மீகப் புலியாவது, இதைக் கண்டு சீறியது உண்டா? மக்களாவது இந்த வீண் விரயத்தை உணர்ந்தார்களா? காரணம்.... மனுதர்ம சிந்தனை. அப்படி ஒரு மூளை விலங்கை அழுத்தமாகப் போட்டு வைத்துள்ளது என்பது தானே?