இஸ்லாமிய பயங்கரவாதம்’, ‘மாவோயிசப் பயங்கரவாதம்’, ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதம்’ - என்று பார்ப்பன ஏடுகளும், பனியாக்களின் ஏடுகளும், ‘தேசிய’ ஏடுகளும் பக்கம் பக்கமாக எழுதி, ஏதோ, இந்த அமைப்புகள் எல்லாம் பயங்கர வாதத்துக்காகவே பிறப்பெடுத்து வந்ததைப்போல சித்தரிக்கின்றன. எந்த பயங்கரவாதமும் அடிப்படை வாதமும் ஏற்க முடியாதவைதான். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இதற்கு நேர் மாறாக, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பன பயங்கரவாதம் என்று ஒன்று இருப்பது பற்றி எந்த ஏடும் எழுதுவதற்கு முன்வருவது இல்லை. பீகாரில் ‘ரன்வீன் சேனா’ என்ற பயங்கர வாத ஆயுதம் தாங்கிய அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்த பிரமேஷ்வர் சிங், கடந்த ஜூன் முதல் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சுட்டுக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மிக மோசமான கலவரத்தை நடத்தியுள்ளனர். அது என்ன ‘ரன்வீன் சேனா?’ இது பார்ப்பனர்களின் ஆயுதம் தாங்கிய ஒரு படை!

ராஜபுத்திரர்களை எதிர்த்து அவர்களை ஒழிக்க ஆயுதம் தாங்கிய படையை உருவாக்கிய ‘ரன்வீர்’ என்ற பார்ப்பனரின் பெயரிலேயே இந்தப் படையை உருவாக்கிய பிரமேசுவர்சிங்கும் ஒரு பார்ப்பனர்தான். 1995 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை தலித் சமூகத்தைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்பட 337 பேரை இந்தப் பார்ப்பன தலைமையிலான குண்டர் படை கொலை செய்துள்ளது. இதைத் தவிர, நூற்றுக்கணக்கான தலித், முஸ்லீம் மக்களை வேறு பல சம்பவங்களிலும் கொலை செய்துள்ளனர்.

தலித் மக்களும், முஸ்லீம்களும் வாழ்வுரிமை இழந்து, ஆடு மாடுகளைப்போல் நடத்தப்பட்ட கொடுமையான சமூகச் சூழலில் 1968 இல் மார்க்சிய லெனினியக் கட்சி இவர்களுக்காக அணி திரட்டிப் போராடியது. பின்னர், ‘மாவோயிச ஒருங்கிணைப்பு மய்யம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் இயங்கி வருகிறது. நிலமற்ற மற்றும் கொத்தடிமை யாக்கப்பட்டுள்ள மக்களின் உரிமை களுக்காக இந்த இயக்கம் போராடத் தொடங்கியதை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், இவர்களைக் கொன்று குவிப்பதற்காகவே ‘தன்வீர் சேனை’யை உருவாக்கினார்கள். தலித்-முஸ்லீம் மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமைகளையே தடுத்து வைத்திருந்தது பார்ப்பன நிலவுடைமை யாளர்கள் கும்பல். தேர்தலிலும் போட்டியிட முடியாது. மாவோயிச இயக்கம் வந்த பிறகு, 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தான் தலித், முஸ்லீம்கள் வாக்களிக்கும் நிலையே உருவானது.

பல கிராமங்களில் கொத்து கொத்தாக தலித் மற்றும் முஸ்லீம்களை கொலை செய்த இந்த பார்ப்பன குண்டர் படைத் தலைவன், 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ‘அரா’ சிறையி லடைக்கப்பட்டார். சிறையிலிருந்தவாறே பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இந்த பிரமேஷ்வர், “நான் தான் தலித், முஸ்லீம்களைக் கொலை செய்தேன். காரணம், இவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் நக்சலைட்டுகளாக மாறப் போகிறவர்கள்” என்று திமிருடன் கூறினார்.

இவ்வளவு படுகொலை செய்து முதல் குற்ற வாளியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பார்ப்பனருக்கு 2011 இல் அரா மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியது. காவல்துறை நீதிமன்றம் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகம் முழுவதும் பார்ப்பன குண்டர் படைக்கும் அதன் தலைவனுக்கும் வெளிப்படையாகவே ஆதரவாக செயல்பட்டன. ‘பதானிடோலா’ எனும் கிராமத்தில் தலித் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியபோது, பிரமேஷ்வர் சிறைக்குள்ளேதான் இருந்தார். ஆனால், மாவட்ட நீதிபதி அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் அப்பட்டமாக பொய் கூறினார். சிறையில் இருந்து கொண்டே 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பார்ப்பன குண்டர் படைத் தலைவனை தேர்தலில் போட்டியிட வைத்தனர் - பார்ப்பனர்கள். தேர்தலில் தோற்றாலும், ‘தலித்-முஸ்லீம் படுகொலைகளுக்கு’ ஆதரவு தெரிவித்து 1.5 லட்சப் பார்ப்பன உயர்சாதி கும்பல் தங்கள் வாக்குகளை இந்த மனிதனுக்கு வாரிப் போட்டது. இந்த பிரமேஷ்வர் -  தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர். பிணையில் வெளிவந்த பிறகு, அரசியலில் இறங்கிட முனைப்பு காட்டினார். இவருக்கு அடுத்த நிலையிலிருந்த மற்றொரு பார்ப்பனரான சுனில் பாண்டே என்பவர்தான் பிரமேஷ்வர்  கொலைக்கு திட்டமிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

“பரசுராமன் பிராமணர்களைக் காப்பாற்ற கோடரியைத் தூக்கியதுபோல் நானும்தூக்கினேன். இந்த சமூகத்தில் அநீதிக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்கியாக வேண்டும்” என்று பல பேட்டிகளை அளித்த பிரமேஷ்வர் மனுதர்மத்தின் காவலன்! ‘பகவான் கிருஷ்ணன்’ காட்டிய வழியில் பார்ப்பன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயுதம் ஏந்தியவன்.”

இது ஏதோ ஒரு யுகத்தில் நடந்தது அல்ல; இப்போதும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 337 தலித் -முஸ்லீம் மக்களை படுகொலை செய்த பார்ப்பன ராணுவம் பற்றி ஊடகங்கள் மூச்சு விடவில்லை. இது பற்றி கட்டுரை வெளி யிட்ட ‘பிரன்ட்லைன்’ பத்திரிகைகூட பிரமேஷ்வர், பார்ப்பான் என்பதை இருட்டடித்து விட்டது.

சொல்லுங்கள்! ‘மனுதர்மம்’ உயிர் வாழ்கிறதா? இல்லையா?