கேள்வி : மனு.... மனு... என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே!

பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சாஸ்திரம் பற்றி.

கேள்வி : அது என்ன மனுதர்ம சாஸ்திரம்?

பதில் : அப்படி கேளுங்க. இப்ப, நம்முடைய வாழ்க்கையைப் பாருங்க. கோயிலுக்குப் போனால், அங்கே பார்ப்பான் தான் அர்ச்சகர். கல்யாணம்னு வந்தா, பார்ப்பனர்களை வைத்துதான் நடத்துறோம். புது வீடு கட்டி குடிபோகும் போதும், அவர்களைத் தான் கூப்பிடுகிறோம். இறந்தவர்களுக்கு ‘திதி’ கொடுக்கவும், அவருதான்! கோயில் கும்பாபிஷேகம் செய்யுறதும் அவருதான்!

கேள்வி : உண்மைதான். எதுக்கு, இப்படி எல்லாத்துக்குமே பார்ப்பனர்களை மட்டுமே அழைக்க வேண்டும்? அவுங்க மட்டும்தான் ஆண்டவன் கிட்ட தொடர்பு கொள்ளும் உரிமை உண்டா?

பதில் :  சரியான கேள்வி. இங்கேதான் ‘மனுதர்மம்’ வருது. இந்த ‘மனுதர்மம்’ என்றால் என்னன்னு பார்ப்போமா?

இது சமஸ்கிருதத்துல எழுதப்பட்டது. பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு வந்ததுதான் ‘மனு தர்மம்’. சமுதாயத்தை ‘பிராமணன்’, சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரிச்சு, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது இந்த ‘மனுதர்மம்’.

கேள்வி : இதை இன்னும் விளக்கமாகச் சொல்லுங்களேன்.

பதில் : சொல்றேன். ரிக் வேதம் இப்படி கூறுகிறது.

‘இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்று ரிக்வேதம் கூறுகிறது.

ஆக உலகமும், கடவுளும் “பிராமணர்”களுக்கு மட்டுமே உரியது என்று அவர்களே எழுதிக் கொண்டார்கள்.அதை நாமும் கேள்விக் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு, எல்லா நிகழ்ச்சி களுக்கும் பார்ப்பனர்களையே அழைக்கிறோம். மனுதர்மம் நம் மீது சுமத்தும் இழிவுகளை நாம் பெருமையாகக் கருதுகிறோம்.

மனுதர்மம் கூறும் ஒரு சில கருத்துகளைப் பாருங்கள்:

“படைக்கும் கடவுள் பிரம்மாவின் முகத்தி லிருந்து ‘பிராமணன்’ பிறந்தான்;

தோள்களிலிருந்து ‘சத்திரியன்’ பிறந்தான். (அரசன், ஆட்சி செய்பவன்)

தொடையிலிருந்து ‘வைசியன்’ பிறந்தான். (வணிகம் செய்கிறவன்)

கால்களிலிருந்து ‘சூத்திரன்’ பிறந்தான். (அடிமைகளாக வாழ வேண்டியவர்கள்-இழி பிறவி)

- இப்படி யஜூர் வேதம் கூறுகிறது.

அந்த வேதக் கருத்தை அப்படியே ‘மனு தர்மம்’ ஏற்றுக் கொண்டு, மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவும் எப்படி வாழ வேண்டும் என்று கட்டளையிடுகிறது! மீறுவோருக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைகளையும் வற்புறுத்துகிறது.

சூத்திரன் - பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அடிமை; வேதத்தையோ கல்வியையோ கற்க உரிமை இல்லாதவன் என்று கூறுகிறது.

“வேதத்தை சூத்திரன் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும். காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்று உழைக்கும் மக்களை அவமதிக்கிறது.

கேள்வி : அப்படியா! நம்பவே முடியவில்லையே! இப்படி எல்லாம்கூட பார்ப்பான் சட்டங்கள் வைத்திருக்கிறானா? இப்போதும் அப்படி இருக்கிறதா?

பதில் : ஆமாம்! ஆமாம்!

இப்போதும் ‘மனுதர்மம்’ சட்டப்படி தடை செய்யப்படவில்லை. நமது அரசியல் சட்டத்தில் இந்துக்களுக்கான சட்டங்களில் இந்த ‘மனுதர்மம்’ தான் மூல நூலாக ஏற்கப்பட்டுள்ளது. நமது சமுதாயத் தலைவர்களான பெரியாரும், அம்பேத்கரும், இந்த மனுதர்மத்தை எதிர்த்து - எரித்தார்கள். இன்னும் ஒரு உண்மையை கூறுகிறேன். அது வியப்பாக இருக்கும்.

கேள்வி : சொல்லுங்கள்; சொல்லுங்கள்.

பதில் : இந்த மனுதர்மம் தான், வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தில் 1772 ஆம் ஆண்டிலிருந்து நமது நாட்டின் சட்டமாகவே இருந்தது. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங் களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’ வரை இந்தியர்களின் வழக்கில் இதுதான் பின்பற்றப் பட்டது. ‘பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும். அதுவே ‘சூத்திரன்’ கொலை செய்தால் தலையையே வெட்ட வேண்டும். வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனு தர்மத்திலிருந்து இதை எல்லாம் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிறகு, இந்த மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக அறிந்திட 1801 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே ஹென்றி தாமஸ் கோல் புரூச் என்பவரை நியமித்து, ‘மனுதர்மத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. 1860 ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது. மனுதர்மமே காலம் காலமாக சட்டமாக இருந்த காரணத்தினால்தான் சூத்திரர்களான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுததப்பட்ட மக்களும் கல்வி மறுக்கப்பட்டு படிக்காதவர்களாக தற்குறிகளாக இருந்தனர்.

இப்போது கல்லூரிகளில் சேருவதற்கு ‘பி.சி.’, ‘எம்.பி.சி.’, ‘எஸ்.சி.’, ‘எஸ்.டி.’ என்றெல்லாம் மனு போடுகிறோம் அல்லவா? இவை எப்படி வந்தன? நமது தலைவர்கள் பெரியாரும், அம்பேத்கரும் போராடி நமக்கு பெற்றுத் தந்த உரிமைகள், ‘மனுதர்மம்’ தலை தலைமுறையாக நம்மை படிக்காத மக்களாக, மடையன்களாக வைத்திருந்த சமூகக் கொடுமைக்கு நியாயம் கிடைக்க, பார்ப்பனரல்லாத நாம் போராடிப் பெற்றுள்ள உரிமைகள், அந்த அளவுக்கு ‘மனுதர்மம்’ என்ற பார்ப்பன கட்டளைகள், நம்மை எல்லாம் அழித்து, ஒழித்தது.

கேள்வி: ஒரு சந்தேகம்; பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பதற்கும், இப்போதுள்ள சாதிக்கும் என்ன தொடர்பு?

பதில் : நல்ல கேள்வி! முதலில் வர்ணப் பிரிவுகள் தான் இருந்தன. இந்த நான்கு வர்ணப் பிரிவுகளில் மனுதர்மத்தை மீறி ஆண் பெண்களின் வர்ணக் கலப்பில் உருவான சந்ததியினரே சாதிகளாக மாறினர் என்ற மனுவே கூறுவதை அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார். நான்கு வர்ணங்களிலிருந்து இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகள் வந்து விட்டன. ஆனால், அய்யர், அய்யங்கார், சாஸ்திரி என்று பார்ப்பனர்கள் சாதிகளாக பிரிந்தாலும், அனைவரும் மனு கூறிய வர்ணாஸ்ரமப்படி தங்களை ‘பிராமணர்’ என்றே அடையாளப்படுத்தி காயத்ரி மந்திரம் ஓதி பூணூல் போட்டுத் திரிகிறார்கள். சத்திரியர், வைசியர்கள் எல்லாம் சூத்திரர்களாக்கப்பட்டு விட்டனர். சூத்திரர்களுக்கும் கீழானவர்கள் என்று தீண்டப்படாத மக்களை என்று உழைக்கும் பெருமைக்குரிய மக்களை ஒதுக்கி விட்டனர். ஆனாலும், சாதிகளாக பிரிந்து கிடக்கும் நாம் ‘மனு’வின் பார்ப்பன கட்டளைகளையே காலம் காலமாய் ஏற்றுக் கொண்டு நம்மை நாமே இழிவானவர்களே என்று ஒப்புக் கொண்டு வாழ்க்கை முறையாக வாழ்ந்து வருகிறோம்.

கேள்வி : என்ன கொடுமையடா! சரி; இப்போது அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு என்ன நிலை?

பதில் : சொல்கிறேன். நமது நாடு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகிறது. எனவே சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருப்பது அவசியம். அதனால் மனுதர்மத்தின் ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ பேசும் பார்ப்பனக் கொடுமைகள் ஓரளவுக்கு சட்டத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கேள்வி : எதில், எதில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது?

பதில் : கூறுகிறேன். மனிதர்கள் அனைவரும் சமமாகவே முடியாது; பிராமணனை வணங்க வேண்டும்; சூத்திரன் அடிமை என்கிறது மனுதர்மம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம்.

சூத்திரர்களுக்கு, பெண்களுக்கு கல்வி தரக் கூடாது என்றது மனுதர்மம். 6 வயது முதல் 14 வயது வரை கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்கி யிருக்கிறது, நமது அரசியல் சட்டம். பெண்களுக்கு குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்துவிட வேண்டும் என்கிறது மனுதர்மம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்வது குற்றம் என்கிறது நமது சட்டம். ‘சூத்திரன்’ இழிவானவன் என்கிறது மனுதர்மம். தீண்டாமை குற்றம் என்கிறது அரசியல் சட்டம்.

- இப்படி மனுதர்மம் வலியுறுத்திய பல பார்ப்பன கட்டளைகளை அரசியல் சட்டம் ஏற்கவில்லை.

கேள்வி : அப்படியானால், மனுதர்மம் சட்டத்துக்கு எதிரானது தானே? அதைத் தடை செய்ய வேண்டாமா?

பதில் :  இதுதான் நியாயமான கேள்வி. அதைத் தான் ‘பெரியார் திராவிடர் கழகமும்’ வற்புறுத்து கிறது. அதற்காகவே மனுதர்மத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை எதிர் வரு:ம நவம்பர் 26 இல் தமிழகம் முழுதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதை மக்களிடம் விளக்கவே இந்தப் பரப்புரைப் பயணம்.

கேள்வி : உண்மையில் மிக நியாயமான போராட்டத்தை கையில் எடுத்துள்ளது ‘பெரியார் திராவிடர் கழகம்’. அரசியலுக்குப் போனால் பணம் கிடைக்கும்; பதவி கிடைக்கும் என்று பலரும் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும்போது, சமூக அக்கறையோடு விளம்பரம் கிடைக்காத ஒரு முக்கிய பிரச்சினைக்காக போராட வந்திருக்கிறீர்கள். ஆனாலும் ஒரு சந்தேகம். இப்போதும் மனுதர்மம் இருக்கிறதா?

பதில் : சரியான கேள்வி. இதற்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டும். இந்து சட்டத்துக்கான மூல நூல்களில் ஒன்று மனுதர்மம் என்று ஏற்கனவே கூறினோம். நம்முடைய மக்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

மனுதர்மம் கூறியவாறு பார்ப்பான்தான் மேலானவன் என்று நாம் இப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவர்களையே திருமணத்துக் கும், வீடு திறப்புக்கும், பூசைகளுக்கும், சடங்கு களுக்கும் என அனைத்து நிகழ்வுகளுக்கும்  அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் மனுதர்மத்தையே பின்பற்றி, இழி மக்கள் என்பதை ஒப்புக் கொண்டு வருகிறோம். தீண்டாமைக்கு எதிராக சட்டம் வந்து விட்டாலும்,தீண்டப்படாத மக்கள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் தொடருகிறது. பிறசாதியினர் வாழும் பகுதிகளில் சைக்கிளில் போகக் கூடாது; செல்போன் பேசக் கூடாது; நாய் வளர்க்கக் கூடாது; ஊர்த் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது; முடி வெட்ட முடியாது; தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை; சுடுகாட்டில்கூட பேதம் என்று இப்போதும் அடக்குமுறைகள் நீடிக்கிறதே. இன்னமும் ஊர் வேறு, சேரி வேறு என்று பிளந்து கிடக்கிறதே. சுடுகாட்டில்கூட சாதிக்கொரு சுடுகாடு இருக்கிறதே; மனிதன் மலத்தை மனிதன் அள்ளு கிறானே; சாக்கடைக் குழிகளில் அடைப்புகளை அகற்ற ‘கீழ் சாதி’ மனிதன் இறங்கி, மூச்சுத் திணறி சாகிறானே; ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் அடக்குமுறைகளை சந்திக்கிறார்களே; வன்முறைக்கு உள்ளாகிறார்களே! தீ வைத்து எரிக்கப்படுகிறார் களே; பெண் சிசுக் கொலைகள் நடக்கிறதே; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘பெண் குழந்தைகள் திருமணம்’ நடக்கும் செய்திகள் வருகின்றனவே!

திருமணங்களில் பார்ப்பானுக்கு உயர்ந்த மந்திரம்; சூத்திரனுக்கு தாழ்ந்த மந்திரம் என்று  பார்ப்பன புரோகிதர்கள் ஒவ்வொரு வகை திருமண மந்திரங்களையும் சடங்குகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்களே! பார்ப்பான் பூணூல் போட்டுக்கொண்டு, தன்னை “பிராமணன்” என்று அடையாளப்படுத்துகிறானே! இதன் அர்த்தம் என்ன? என்னைத் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள், எனது அடிமைகள் என்பதுதானே! வீடுகளை வாடகைக்கு விடுவதில்கூட சாதி பார்க்கப்படுகிறதே; பெரும்பாலான திருமணங்கள் ஒரே சாதிக்குள் தானே நடக்கின்றன! மீறி நடந்தால் பெற்றோர்களே கொலை செய்கிறார்களே! சாதி மாறி திருமணம் செய்தால் வெட்டுவோம் என்று சாதித் தலைவர்கள் மிரட்டுகிறார்களே! சாதி மறுப்பு திருமணங்களை நடக்க விட மாட்டோம் என்று மாநாடு கூட்டி தீர்மானங்களைப் போடுகிறார்களே!

இப்படி ஏராளமாக பட்டியல் போட முடியும். இவையெல்லாம் ‘மனுதர்மம்’ விதித்த கட்டளை தானே! மனுதர்மத்தின் சட்ட ஆட்சி விடைபெற்று விட்டது என்றாலும், அந்த இழிவான வாழ்க்கை முறை தானே இப்போதும் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. நம்மை பிளவுபடுத்தி சீரழித்து நமக்குள்ளே மோதவிட்டு  ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறதே. இந்த சமத்துவமற்ற அவல வாழ்வியல் நீடிக்கலாமா? சொல்லுங்க; இது நியாயம் தானா?

கேள்வி : சரியான விளக்கம். நீங்கள் கூறுவது முற்றிலும் நியாயம். உண்மை; நேர்மை; இதோ, நாங்களும் தீப்பந்தங்களை ஏந்தி வருகிறோம். மானமுள்ள ஒவ்வொரு மனிதனும் ஓங்கி ஒலிப்போம்!

‘எரிந்து பொசுங்கட்டும் மனுதர்மம்!’