தமிழ்நாடு முழுதும் தற்காலிகப் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள கல்லூரி விரிவுரையாளர்கள் கடந்த 8 நாட்களாக பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 997 பேர் தற்காலிக விரிவுரையாளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதாக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது.  

 

வாக்குறுதியை நிறைவேற்றாமல் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு அமர்த்தி, ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் அவர்களை அரசு அலைக்கழித்து வருகிறது.

 

வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஏற்கனவே வேலை வாய்ப்புகள் உள்ள துறைகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்புகளை வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டி வருவதில் எந்த நியாயமும் இல்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்கள், படித்து, வேலை வாய்ப்பற்ற நிலையில் தவிக்கிறார்கள்.

 

அவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்து, உரிய பணிப் பாதுகாப்பை வழங்க வேண்டியதே உண்மையான சமூக நீதியில் கவலை உள்ள ஆட்சியின் கடமையாக இருக்க முடியும். இலவசங்களை வழங்கினாலே போதும், ஓட்டு குவிந்து விடும் என்று கருதிக் கொண்டு, போராடும் விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் போராட்டத்தையும் இந்த ஆட்சி அலட்சியப்படுத்துவது, மக்கள் நல அரசின் அணுகுமுறையாக இருக்க முடியாது.

 

அதிகாரப் பார்வையில் பிரச்சினையைப் பார்க்காமல் 1000 குடும்பங்களின் வாழ்க்கைப் பிரச்சினையாக இதை கருத வேண்டும். சாலைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவதில் இதேபோல் ஜெயலலிதா அலட்சியம் காட்டி செயல்பட்டதை எதிர்த்து தேர்தல் களத்தை சந்தித்த தி.மு.க., இப்போது, அதே போன்று விரிவுரை யாளர்களை நிரந்தரமாக்குவதில் அலட்சியம் காட்டலாமா?

 

விரிவுரையாளர்களின் நியாயமான போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் வரவேற்கிறது.