சர்வாதிகார அடக்குமுறை ஆட்சிகளை மக்கள் புரட்சி தூக்கி எறியத் தொடங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு அரபு உலகில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் சக்தியே மகத்தானது என்பதை மீண்டும் உணர்த்தி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டுனீசியாவில் மக்கள் ஒன்று திரண்டு துப்பாக்கிக் குண்டுகளையும், அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று அந்நாட்டின் அதிபர் சைன் எல் அபிடைன் பென் அலியை அதிகாரத்திலிருந்து விரட்டினர். அந்த எழுச்சி எகிப்தில் எதிரொலித்தது. 18 நாட்கள் தொடர்ந்த மக்கள் புரட்சியினால் 30 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய ஹோஸ்னி முபாரக் பதவி விலகியுள்ளார். மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அதிகாரம் இராணுவ உயர் மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் சுதந்திரமான வெளிப்படையான தேர்தலை நடத்தி 30 ஆண்டுகால அவசரகால ஆட்சி முறை முடிவுக்குக் கொண்டு வருவதாக ராணுவ உயர்மட்டக் குழு, மக்களிடம் உறுதியளித்துள்ளது. முபாராக்கின் ஆட்சிக்கு ஆதரவு காட்டி வந்த இஸ்ரேல், இப்போது, எகிப்துடன் நல்லுறவு தொடர வேண்டும் என்று அறிவித்துள்ளது. முபாரக் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தியது.

எகிப்தில் இப்போது மக்கள் மதத்தின் அடிப்படையில் ஒன்று திரளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரட்டைக் கோபுர தகர்ப்பிலிருந்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைக் காட்டி வரும் மேற்குலக நாடுகள், முஸ்லீம்கள் மதத்துக்காக மட்டுமே ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என்று பரப்புரை செய்து வந்தன. எகிப்து இந்த பொய்யுரையை முறியடித்துக் காட்டியுள்ளது. மதங்களைக் கடந்து முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். இது இஸ்லாமியருக்கான போராட்ட மல்ல; எகிப்துக்கான போராட்டம்என்று எகிப்து முஸ்லீம்கள் போராட்டம் தொடங்கியதிலிருந்தே, மதச் சார்பற்ற நான்கு குழுவினரோடு இணைந்து, போராட் டத்தைத் தொடங்கினர். போராட்டக் குழுவுக்கு தலைமை யேற்றவர் முகம்மது எல் பாராடே என்ற மதச்சார்ப் பின்மையை ஏற்றுக் கொண்ட மேலை நாட்டு விஞ்ஞானி.

அதேபோல் டுனிசியாவில் 20 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய மறுமலர்ச்சி கட்சிஎன்ற கட்சியின் தலைவர் ரேக்கிட் கான்னாவுச்சி தலைமையில் தான் மக்கள் புரட்சி நடந்துள்ளது. தமது கட்சி மீதான தடையை நீக்கி, நாட்டின் ஜனநாயகத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து டுனிசாவுக்கு வந்த இந்தக் கட்சி, மக்களைத் திரட்டிப் போராடியது. தொழிலாளர் சங்கங்கள் - இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்கும் முயற்சிகள் அங்கே தொடங்கியுள்ளன. அல்ஜீரியாவில் இப்போது மக்கள் எழுச்சி தொடங்கி யிருக்கிறது. ஏமன் நாட்டில் மக்கள் போராட்டத்துக்கு பணிந்து அந்நாட்டின் அதிபர் அதிகாரத்தை, தனது மகனிடம் அளிக்க மாட்டேன் என்று உறுதி கூறியுள்ளார். ஜோர்டான் நாட்டின் மன்னர், அவசரமாக புதிய அரசாங்கம் ஒன்றை அறிவித்து சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதாக உறுதி கூறியிருக்கிறார். சர்வாதிகாரிகளும் ராணுவமும் மக்களிடம் மண்டியிடும். இந்த எதிர்ப்பு அலை இந்தியாவிலும் இலங்கையிலும் நெருங்கக் கூடிய காலம் விரைந்து வந்தே தீரும்.