ஆனைமலைக்கு அருகிலுள்ள கள்ளிமேட்டுப்பதி மலைவாழ் மக்களுக்கு சாலை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் இதுவரை அரசு செய்து தரவில்லை. அரசின் சார்பில் இம்மக்களின் பயன்பாட்டிற்கென 3 ஏக்கர் நிலம் மயான பூமியாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலத்தை அருகிலுள்ள தனியார் தோட்ட உரிமையாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். அடிப்படை வசதியுமில்லாமல் மயானமுமில்லாமல் துன்பப்பட்டு வந்த இம்மக்கள் தொடர்ந்து அரசுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்த உபயோகமுமில்லை. இதனால் சுள்ளிமேட்டுப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆனைமலை, நகர ஒன்றிய கழகங்களின் சார்பாக கடந்த 7.5.2011 அன்று காலை முக்கோணம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட கழகத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். கழகம் சார்பில் சூலூர் பன்னீர்செல்வம், சி. விசயராகவன், கா.சு. நாகராசன், வே. வெள்ளியங்கிரி, வே. அரிதாசு, அப்பாதுரை, மணிமொழி, ஆனந்த், சம்பத், கண்ணன், சீனிவாசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்களும், ஆதித் தமிழர் பேரவையின் சார்பாக தோழர் தி.செ. கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.