கழக மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ராஜீவ் கொலை வழக்குப் பற்றி நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். கொலை வழக்கில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இந்த நூல் வெளிக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.  உளவுத் துறை வட்டாரங்கள் இந்த நூல் வெளி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளன. எனவே நூல் வெளி வருவதற்கு முன்பே நூலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்கப்பட்ட தம்பா என்கிற பரணீதரன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நான் சாட்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தேன். எனக்கு அந்த வழக்கு விவரங்கள் அனைத்தும் தெரியும். இந்த சம்பவம் பற்றி வழக்கறிஞர் எஸ். துரைசாமி, “ராஜீவ்காந்தி மரணத்தின் பின்னணியில் மறைக்கப்பட்ட உண்மைகளும், மர்மங்களும்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். விரைவில் அது வெளியிடப்பட உள்ளது. ராஜீவ் கொலையாளிகள் தரப்பில் ஆஜரானதால் அவருக்கு பல உள் விவரங்கள் தெரிந்து இருக்கும். தடா வழக்கு விசாரணை விவரங்களை வெளியிடக் கூடாது என்று தடா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்படும் தகவல்களால், படுகொலை சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி மற்றும் சி.பி.ஐ. மீது வைத்துள்ள நம்பிக்கை மக்களிடையே குறையும். எஸ்.துரைசாமி காங்கிரஸ் எதிர்ப்பாளர். எனவே அவர் அந்த புத்தகத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்.” - இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஜோதி மணி, இன்னும் 4 வாரங்களுக்குள் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ. மற்றும் வழக்கறிஞர் துரைசாமி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டார்.