மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென் மீது அவர் ‘மாவோயிச’ நூல்களை வைத்திருந்ததால் ‘தேசத் துரோகம்’ இழைத்துவிட்டார் என்று சத்தீஸ்கர் மாநில நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையிலிருந்து உச்சநீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது. 1860 ஆம் ஆண்டு, இந்திய குற்றவியல் சடடம் உருவாக்கப்பட்டபோது இடம் பெறாத தேசத் துரோகக் குற்றப் பிரிவு, அதற்கு 10 ஆண்டுகள் கழித்து 1870 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டது. அதுதான் பிரிவு ‘124ஏ’. மருத்துவர் பினாயக் சென் இந்தப் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டதை மட்டு மல்ல, இப்படி ஒரு சட்டம் ஒரு ஜனநாயக அமைப்பில் தேவை தானா என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

‘தேசத் துரோகம்’ என்பதற்கான விளக்கம் தெளிவாக இல்லாத நிலையில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான கருத்துகளை முடக்குவதற்கு முறைகேடாகப் பயன்படுத்தும் சட்டமாகவே இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1933 ஆம் ஆண்டில் பெரியார் “இந்த ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?” என்று அவர் நடத்திய ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய தலையங்கத்துக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி, தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்து பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனையையும், பதிப்பாளரான அவரது தங்கை கண்ணம்மாளுக்கு 6 மாத சிறைத் தண்டனையையும் விதித்தது. அதன் காரணமாக, அப்போது ‘குடிஅரசு’ பத்திரிகையை நிறுத்திய பெரியார், அதற்கு மாற்றாக ‘புரட்சி’ என்ற ஏட்டைத் தொடங்கினார். அப்போது பெரியார், “இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்” என்று எழுதினார்.

1922 இல் காந்தியார்கூட இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, தேசப் பற்று என்பதை சட்டத்தின் மூலமாக உருவாக்கி விட முடியாது என்றே நீதிமன்றத்தில் கூறினார். 64 ஆண்டு “சுதந்திர” இந்தியா, “தேசப் பற்றை” சட்டத்தின் மூலம் தான் நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது என்பது தேசத்துக்கே அவமானம்.

இந்தியாவின் அரசியலையும், பொருளாதார அதிகாரத்தையும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் காலடியில் சமர்ப்பித்து விட்டு, அதற்கு பார்ப்பனர்களையும், பனியாக்களையும் பாதுகாவலர்களாக்கியிருப்பவர்கள் ‘தேசபக்தி’ பற்றிப் பேசுவதும், ‘தேசத் துரோகம்’ தடுப்புச் சட்டங்களை சட்டப் புத்தகத்தில் வைத்திருப்பதும் கேலிக் கூத்துதான்.

தேசத் துரோக சட்டத்தை அகற்றிவிட வேண்டும் என்று இப்போது பார்ப்பன ஏடுகளேகூட எழுதுகின்றன. இந்த சட்டப் பிரிவை மட்டுமல்ல, தேசியப் பாதுகாப்பு போன்ற கருத்துரிமையைப் பறிக்கும் எந்த சட்டமும், சட்டப் புத்தகத்தில் இடம் பெறக் கூடாது என்பதே நமது உறுதியான கருத்து. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் அ.இ.அ.தி.மு.க. ‘பொடா’வை ஏவியது என்றால், தி.மு.க. ஆட்சி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (‘பொடா’ காலாவதியாகி விட்டதால்) ஏவியது. கருத்துகளை வெளியிட்டதற்காகவே இந்த அடக்குமுறை சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதுதான், இதில் வெட்கக்கேடான அம்சம்.

‘இந்தியா’ என்ற நாடு இங்கே வாழும் தமிழர்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் புறக்கணிக்கும்போது, இந்த நாட்டின் குடி மக்களாக நாங்கள் இருக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? எங்களுக்கான தாயகம் - தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று பேசுவதும் - எழுதுவதும் - பரப்புவதும் - அடிப்படை கருத்துரிமை. அதைப் பறிப்பதும் - பேசுவதை ‘தேச துரோகம்’ என்பதும், ‘பார்ப்பன நாயகமே’ தவிர ‘ஜனநாயகம்’ அல்ல.

இத்தகைய தேச விரோத சட்டங்களை பல நாடுகள் தங்கள் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டன. 2001 ஆம் ஆண்டு கானாவும், 2007 இல் நியூசிலாந்துவும், 2009 இல் பிரிட்டனும், தேச விரோத சட்டப் பிரிவுகளை நீக்கிவிட்டன. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அயர்லாந்து நாட்டின் சட்ட ஆலோசனை அமைப்புகள், இத்தகைய தேச விரோத சட்டப் பிரிவுகளை நீக்கி விடுமாறு, அந்த நாடுகளுக்கு பரிந்துரை வழங்கியுள்ளன. தேச விரோத சட்டம் சட்ட விரோதமானது என்று 2010இல் உகாண்டா நாட்டின் உச்சநீதிமன்றமும், அதேபோல் நைஜீரியா நாட்டின் நீதிமன்றமும் அறிவித்து விட்டன.

மாவோயிச நூல்களை வைத்திருப்போர் எல்லாம் மாவோயிஸ்டுகள் என்றால் காந்தியார் நூல்களை வைத்திருப்போர் எல்லாம் காந்தியவாதிகளா என்று உச்சநீதிமன்றம் சரியாகவே கேட்டிருக்கிறது. மாவோயிசமானாலும் மார்க்சியம் என்றாலும், பெரியாரியம் என்றாலும் எந்த சிந்தனையையும் ஏற்றுக் கொள்வதற்கும் அதைப் பின்பற்றுவதற்கும் முழு உரிமை உண்டு. பார்ப்பனியம், இந்துத்துவம், முதலாளித்துவம் இருக்கும் வரை பெரியாரியம், அம்பேத்கரியம், மாவோயிசம், மார்க்சியம் எல்லாம் இருந்து தானே தீரும்?