மூன்று தமிழர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்ற வழக்கில் மத்திய அரசு என்ன பதில் கூறப் போகிறது என்று சென்னை கழகக் கூட்டத்தில் வைகோ கேட்டார். மரண தண்டனைக்கு எதிராகவும், மூன்று தமிழர் உயிர் காக்கவும் தமிழகம் முழுதும் மக்களைச் சந்திக்கும் பயணத்தின் தொடக்க விழா சென்னை இராயப்பேட்டை பத்ரிநாராயணன் நினைவு பெரியார் படிப்பகம் அருகே 20.9.2011 அன்று செங்கொடி நினைவரங்கில் எழுச்சியுடன் நடந்தது. கழகத் தோழர் அருள்தாசு, புத்தர் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் பொதுக் கூட்டம் தொடங்கியது.

கழகத் தோழர் அன்பு தனசேகர் வரவேற்புரை யாற்ற, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயணத்தின் நோக்கத்தை விளக்கினார். பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்தாலும், இதை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் பயணமாகக் கருதாமல், மரண தண்டனைக்கு எதிராக தமிழ்நாட்டில் களமிறங்கி நிற்கும் அத்தனை இயக்கங்கள், பல்வேறு அமைப்புகள், பங்கேற்பு பயணமாகவே கருது கிறோம். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலே கூட சொல்லலாம். மரண தண்டனைக்கு எதிராக இத்தகைய எழுச்சியுடன் மக்கள் இயக்கங்கள் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை. தமிழகம் தான் இதில் முன் னோடியாக வழிகாட்டி வருகிறது. இந்தியாவிலே சட்டமன்றத் தீர்மானத்தின் வழியாக தூக்குத் தண்டனையை மரண தண்டனையாக மாற்றக் கோரியும் - இது தமிழ்நாட்டு மக்கள் எழுச்சியின் பிரதிபலிப்பு என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி தமிழக சட்டமன்றம், இந்தியாவுக்கே வழிகாட்டி யிருக்கிறது. அதேபோல், அணுமின்சாரத்தின் ஆபத்துகளுக்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை ஏற்று மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்டிருப்பதும் இந்தியாவிலே தமிழ்நாடு அரசுதான். இந்த நிலையில் மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றமே விசாரிக்கக் கூடாது என்று காங்கிரசார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தனித் துவத்தில் இந்தியா இணைந்து நிற்க முடியாது என்று காங்கிரசாரே முடிவு செய்துவிட்டால், தமிழ்நாடு தனித்துவமாக தனது இறையாண்மையை தாமே நிறுவிக் கொள்ள வேண்டியதுதான் என்று குறிப் பிட்டார்.

வழக்கறிஞர் பாண்டிமா தேவி

தொடர்ந்து வழக்கறிஞர் பாண்டிமாதேவி பேசுகையில் - ராஜீவ் கொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையம், வர்மா ஆணையங்கள், இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சந்திராசாமி, சுப்ரமணியசாமி போன்ற வர்களை விசாரிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அது பற்றி எல்லாம் ‘கள்ள மவுனம்’ சாதிக்கும் காங்கிரசார், இந்த மூன்று இளைஞர்களும் 20 ஆண்டுகால சிறைக் கொடுமைகளை அனுபவித்த பிறகும், இந்த 3 உயிர்களையும் தங்களது அரசியல் விளையாட்டுக்குப் பயன்படுத்தத் துடிப்பது என்ன நியாயம் என்று கேட்டார். தமிழ்நாட்டில் இப்படி தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசும் காங்கிரசார், பஞ்சாபில், இதுபோல, பஞ்சாபியர் களுக்கு எதிராகப் பேசியிருந்தால், வீதியில் நடமாட முடியுமா என்ற கேள்வியை எழுப்பிய அவர், அங்கே காலிஸ்தான் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பேராசிரியர் பில்லாவுக்கு, மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று அம்மாநில முதல்வர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சித் தலைவர் சுரேந்தர் சிங் போன்றவர்கள்கூட குரல் கொடுப்பதை சுட்டிக்காட்டினார். 19 கருணை மனுக்களை ஏற்று தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபாபட்டீல், திடீரென்று, ஒரு நாள் - 3 தமிழர் களின் கருணை மனுக்களை நிராகரித்தார் என்றால், என்ன காரணம்? மத்திய அரசு, அப்படி அவரை நிர்ப்பந்திக்கிறது; அழுத்தம் தருகிறது. அதற்கு, குடியரசுத் தலைவரும் துணை போகிறார். ‘கருணை மனு’ என்பதுகூட ஏதோ குடியரசுத் தலைவரின் கருணை உணர்வைச் சார்ந்தது அல்ல; அது குற்றவியல் நீதியமைப்பின் ஒரு மய்யம் என்று மகராட்டிய அரசு வழக்கறிஞராகவும் இந்திய அரசு வழக்கறிஞராகவும் இருந்த அந்தி அர்ஜூனா கூறுகிறார். குடியரசுத் தலைவர் முடிவில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்கிறார்.

நீதிபதிகளும் தவறு செய்யக் கூடியவர்கள்தான். அவர்களின் விருப்பு வெறுப்புகள் தீர்ப்புகளில் வெளிப்படவே செய்யும். கொல்லப்பட்டவர்கள் பிரபலமானவர்களாக இருந்துவிட்டால், அரிதினும் அரிதாக வழக்காக நீதிபதிகள் முடிவு செய்து தூக்கில் போட்டுவிடுகிறார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூறுகிறார். மிகவும் வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேகூட மரணதண்டனை நிறை வேற்றப்பட வேண்டிய நிலையில், அவர்கள் அப்பாவிகள் என்று கண்டறியப்பட்டு, 138 பேர், மரணப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக் கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் இதுபோல், மரணத்தின் பிடியிலிருந்து தண்டனை வழங்கப் பட்டு, கடைசியில் காப்பாற்றப்பட்டவர்கள் 4 பேர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இந்த நிலை என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை கருதிப் பாருங்கள். இங்கே தூக்கிலிடப்படுவது யார்? ஏழைகள், வறியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தானே! தலைவர்கள், அரசியல்வாதிகள், வசதி படைத்தவர்கள் தூக்கிலிடப்படுகிறார்களா? பஞ்சாப் மாநிலத்திலே ஒரு கொலைக் குற்றத்தில் தொடர்புடைய 2 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஒருவர் மேல் முறையீட்டுக்குப் போய் நிரபராதி என்று விடுதலைப் பெற்று விடுகிறார். மற்றொருவருக்கோ இந்த செய்திகூட தெரியாமல் - அதே குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டு விடுகிறார் - என்று கூறிய வழக்கறிஞர் பாண்டிமாதேவி - இது போன்ற மரணதண்டனை எதிர்ப்புப் பரப்புரைப் பயணங்கள் மனித உரிமைக்கான இயக்கத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தக் கூடியவையாகும் என்று கூறி, பயணத்தை வாழ்த்தி, உரையை நிறைவு செய்தார்.

‘கீற்று’ இரமேஷ்

‘கீற்று’ இணையதளக் குழுவைச் சார்ந்த இரமேஷ் - “1965 இல் மொழிப் போரில் திரண்ட மக்கள் எழுச்சி, இப்போது உருவாகியிருக்கிறது. இரண்டு எழுச்சிகளையுமே திணித்தவர்கள், காங்கிரசார்தான்” என்றார். ராஜீவ் காந்தியையே கொலை செய்தவர் களை மன்னிக்கலாமா என்ற காங்கிரசாரின் பிரச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கிய அவர், ‘ராஜீவ் அப்படி என்ன புனிதரா? இந்தியாவை வல்லரசாக மாற்ற விரும்பியவர் என்றால், ராணுவத்துக்கு பீரங்கி வாங்கியதில் ஊழல் செய்யலாமா? தனது தாயார் இந்திரா கொலையில் தாக்கர் விசாரணை ஆணையத்தால் விசாரிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட ஆர்.கே. தவானைக் காப்பாற்றி, அவரை காங்கிரசின் செயலாளராக்கலாமா? பிற் படுத்தப்பட்டோருக்கான மண்டல் குழு பரிந் துரையை எதிர்த்து 3 மணி நேரம் நாடாளுமன்றத்தில் பேசியது யார்? ராஜீவ் காந்தி தானே? வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்ததும்; ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி 5000 தமிழர்களைக் கொன்று குவித்ததும் அவர் தானே? இந்தக் கேள்விகளை நாம் எழுப்பாமல் போனதால்தான் காங்கிரசார், இப்போது துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இந்திரா கொலையிலேயே சோனியாவுக்கு தொடர்பு உண்டு என்று, சுப்பிரமணியசாமியும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனமும் கூறுவதற்கு, காங்கிரசாரின் பதில் என்ன? தமிழர்கள் எப்போதுமே அறவுணர்வோடு போராடுகிறார்கள். தங்களையே தீயிட்டு அழித்துக் கொண்டுதான், நீதி கேட்டு வருகிறார்கள். இந்த உணர்வுகளை மதிக்காமல், தொடர்ந்து நெருக்குதல் தந்தால், அவர்கள் ஆயுதம் தூக்கும் நிலைக்குத் தள்ளப்படு வார்கள். இதுதான் ஈழத்திலும் நடந்தது. இப்போது தன்னைத் தானே எரித்துக் கொண்டு, நீதிக்குப் போராடும் தமிழர்களின் உணர்வுகளை மறுத்து, 3 தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனை பெற்றுத் தர காங்கிரசார் துடித்தால், அது, எதிர்விளைவுகளுக்கே கொண்டு செல்லும். அந்த நிலையை காங்கிரசார் உருவாக்கிவிடக் கூடாது என்றார்.

வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, 3 தமிழர்களின் உயிர்காப்புக்கு நீதி மன்றத்தின் வழியாக, முயற்சிகளை மேற்கொண்ட வைகோவுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பாக பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டில் திருநாவுக் கரசு என்ற ‘தலித்’தை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழின துரோகி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று கூறும் இந்திய அரசு, 3 தமிழர்களை தூக்கில் போட வேண்டும் என்று கூறுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். இந்த 3 தமிழர்களின் உயிர் என்பது தமிழர்களின் இறை யாண்மையாகும். இவர்களைக் ‘காவு’ கொடுக்க காங்கிரசார் நினைத்தால் தமிழர்கள் இந்திய இறை யாண்மைக்கு காவு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டை மீட்டெடுக்கப் போராடுவார்கள் என்றார்.

பேராசிரியர் தீரன்

நாம் தமிழர் கட்சி முன்னணித் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் தீரன், தமது உரையில் - உலக முழுதும் நாகரிக சமூகங்கள் தூக்குத் தண்டனையை ஒழித்து வருவதையும், நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்களே சி.ஏ. பாலன் வழக்கில் தலையிட்டு, தூக்குத் தண்டனையை நிறுத்தியதையும் சுட்டிக் காட்டினார். பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப்சிங் கெய்ரோன் சுடப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற தயான்சிங்கின், கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபோது பஞ்சாப் சட்ட மன்றத்தில் 16 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு தூக்குத் தண்டனை தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆயுள் தண்டனையாக நிறை வேற்றப்பட்ட முன் உதாரணத்தை சுட்டிக்காட் டினார். ‘தடா’ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அந்த சட்டம் காலாவதியான பிறகு தூக்குத் தண்டனை வழங்க முடியாது என்று ‘அகாலிதள’ கட்சித் தலைவர் லோங்கோவில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை எடுத்துக் காட்டினார்.

பேரறிவாளன் - ராஜீவைக் கொன்ற ‘பெல்ட் வெடிகுண்டுக்கு’ 9 வோல்ட் பேட்டரி வாங்கித் தந்தார் என்றும், அந்த பேட்டரிக்கு கடைக்காரர் ரசீது தந்தார் என்றும், அந்த ரசீதில், பேரறிவாளன், ஊர்ப் பெயர், முகவரி எல்லாம் எழுதப்பட் டிருந்தது என்றும், அந்த ரசீதை, பேரறிவாளன், தனது சட்டைப் பைக்குள்ளேயே இரண்டு மாத காலம் வைத்திருந்தார் என்றும் புலனாய்வுத் துறை உருவாக்கிய கதைகளை நம்ப முடியுமா? இது குற்றம் என்றால் ராஜீவ் காந்தி, பாதுகாப்பு வளையத்துக்குள் தனு நெருங்கிச் செல்வதற்கு, சிவராசன் தந்த 5 லட்சம் தேர்தல் நிதியை வாங்கிக் கொண்டு உதவிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத் தினருக்கு என்ன தண்டனை தருவது? என்று கேட்டார்.

வழக்கறிஞர் துரைசாமி

கழகத்தின் மூத்த வழக்கறிஞரும் ராஜீவ் கொலை வழக்கில் ‘தடா’ நீதிமன்றம், நேர்நின்று வாதாடிய வருமான வழக்கறிஞர் துரைசாமி, மூவரின் உயிர் காக்கும் வழக்கில் வைகோ மேற்கொண்ட முயற்சி களை பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனியே பாராட்டியதைக் குறிப்பிட்டார். ராஜீவ் கொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தடா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது திராவிடர் கழகம், தி.மு.க., ‘தடா’ ஒடுக்குமுறைக்கு உள்ளான காலத்தில், பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26 இல் ‘தடா’வை எதிர்த்து அண்ணாசாலையிலிருந்து கண்டன ஊர்வலம் நடத்தி இதே பகுதியில் கண்டனக் கூட்டத்தை நடத்திய அதே இராயப்பேட்டை கழகச் செயல்வீரர்கள்தான். இப்போதும் இந்தக் கூட்டத் தையும் மூன்று தமிழர் உயிர்காக்கும் பரப்புரைப் பயணத்துக்காக நடத்துகிறார்கள் என்று கூட்டத்தில் பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

“20 ஆண்டுகளுக்கு முன் ராஜீவ் கொலை வழக்கை ‘தடா’வின் கீழ் விசாரிக்கக்கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நான் டெல்லி சென்றபோது, வைகோவை சந்தித்தேன்; அப்போது கீழ் நீதிமன்றத்தில் நாம் நீதியை எதிர்பார்க்க முடியாது. உச்சநீதிமன்றம் வரும்போது, வழக்கை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதையே இப்போது செய்து காட்டியுள்ளார்” என்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் 1400 சாட்சிகளில் ஒருவராக வைகோவை சேர்த்த சிறப்புப் புலனாய்வுக் குழு அவரை மய்யமாக வைத்துதான் இந்த வழக்குக்கான கதையையே உருவாக்கியது. டெல்லி அசோகா ஓட்டலிலே ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை, பிரபாகரன் மீது, மிரட்டி திணித்த போது வைகோவை சந்தித்த பிரபாகரனிடம் ‘ராஜீவ் எங்கள் முதுகில் குத்தி விட்டார்’ என்று கூறியதாக வந்த செய்தியை வைத்தே ராஜீவ் கொலைக்கான ‘உள் நோக்கத்தை’ உருவாக்க நினைத்தார்கள். அதற் காகவே ‘வைகோ’வை சாட்சியாக்கினார்கள். ஆனால் வைகோ, சி.பி.அய். வியூகத்தை, நீதிமன்றத் திலேயே தகர்த்து எறிந்தார். 3 நாட்கள் அவர் சாட்சி யமளித்தார். சி.பி.அய். நடத்திய இந்த முறை கேடுகளை வைகோ நூலாக வெளியிட வேண்டும்” என்று வழக்கறிஞர் துரைசாமி கேட்டுக் கொண்டார். ராஜீவ் கொலை வழக்கில் கொளத்தூர் மணியையும் சி.பி.அய். சேலத்தில் கைது செய்து, கைவிலங்கிட்டு சென்னை கொண்டு வந்து பிறகு அடுத்த நாள் வழக்கிலிருந்து விடுவித்ததை நினைவுகூர்ந்த வழக்கறிஞர் துரைசாமி, ராஜீவ் கொலையில் காங்கிரசார் செய்த சதி துரோகங்களை ஜெயின் ஆணையத்திலிருந்து எடுத்துக் காட்டினார்.

கொளத்தூர் மணி

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தனது உரையில், “இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் தூக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று வழக்கு நடத்திய கார்த்திகேயன், இப்போது மரணதண்டனை வேண்டாம் என்கிறார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஆணையத்தின் தலைவராக இருந்து தூக்குத் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், தூக்குத் தண்டனை வேண்டாம் என்கிறார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து குண்டுவெடிப்பில் காயமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மரணதண்டனை வேண்டாம் என்கிறார். நீதிமன்றம் ஒரு வழக்கை சட்டம், சாட்சிகளின் அடிப்படையில் மட்டுமே பார்க்கிறது; தண்டனை வழங்குகிறது. குற்றத்துக்கும் தண்டனைக்குமிடையே சமூகம் இருக்கிறது. எனவே தீர்ப்பு பிழைபட வாய்ப்புகள் இருக்கும் என்பதால், மக்கள் பிரதிநிதிக்கு இறுதி முடிவு எடுக்கும் ஒரு வாய்ப்பு கருணை மனு என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இப்போது பஞ்சாபில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேராசிரியர் பில்லாவும், குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர் அல்ல. சதிக்கு உதவினார் என்பது குற்றச்சாட்டு. இவர் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டு ‘தடா’வின் கீழ் விசாரிக்கப் பட்டவர். இதே நேரத்தில், இவரோடு இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொருவர் தயாசிங் லெபோரி. இவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அதனால் அந்நாட்டு அரசாங்கம் அவரை ஒப்படைக்கும்போது ‘தடா’ சட்டத்தின் கீழ் விசாரிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனைக்கு எழுத்துப்பூர்வமாக இந்தியா ஒப்புதல் தந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரித்தது. அதனால், தயாசிங் அதே குற்றத்தில் ‘தடா’வின் கீழ் விசாரிக்கப்பட்டதால் விடுதலையாகிவிட்டார். பில்லா, தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கிறார்.

இந்திய அரசு இப்பிரச்சினையில் தமிழர்களை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு இரண்டு செய்திகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த மூன்று தமிழர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அதே நாளில், பாகிஸ்தானில் 16 பேர் கொலைக்குக் காரணமாக இருந்து தூக்குத் தண்டனைக்கு உள்ளாகி, அந்நாட்டு சிறையிலுள்ள சர் சப்தர்ஜிங் என்ற இந்தியருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்று வெளி உறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, நாடாளுமன்றத்தில் கூறுகிறார். இரண்டும் ஒரே நாளில் நடக்கிறது. மேற்கு வங்கத்துக்கும் பங்களாதேசத்துக்கும் இடையே தீஸ்த்தா நதி நீர் பிரச்சினையில் பங்களாதேசுடன் பிரதமர் மன்மோகன் சிங் செய்து கொள்ளும் ஒப்பந்தம், மேற்கு வங்கத்துக்கு எதிரானது என்பதால், மேற்கு வங்க மாநில முதல்வர் எதிர்க்கிறார். பிரதமரோடு பங்களாதேஷ் பயணத்தை முதல்வர் ரத்து செய்கிறார். இதற்கு இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இந்தியாவின் மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. கூட்டாட்சி அமைப்பை மதித்து செயல்படும் என்று கூறுகிறார். அதே நாளில் மற்றொரு நிகழ்வும் நடக்கிறது. இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிராக இலங்கையில் ஈழத்தில் சம்பூரில் ஒரு மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு, ‘பொருளாதாரத் தடை கோரிய’ தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது” என்று குறிபிட்டார்.

இந்த வழக்கிற்கு ‘தடா’ சட்டம் பொருந்தாது என்று தீர்ப்புக் கூறிய உச்சநீதிமன்றம் நியாயமாக ‘தடா’ வழக்கு என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்ட உயர்நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பியிருந்தால் இப்போது தூக்குத் தண்டனைக்கு உள்ளானவர்கள் விடுதலை பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். 26 பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் விதித்த தண்டனையிலிருந்து 19 பேரை உச்சநீதிமன்றம் காப்பாற்றியதுபோல் உயர்நீதிமன்றம் வேறு சிலரைக் காப்பாற்றியிருக்கக் கூடும். அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரும்போது முழுமையாக தூக்குத் தண்டனை இல்லாமல் போகும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

அமெரிக்காவில் 13 மாநிலங்களில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. மைலே, ரோடேதீவ் மாநிலங்களில் நிரபராதிகளை மரண தண்டனைக் குள்ளாக்கியதைக் கண்டறிந்ததால் தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்கின்றன.

1975 இல் அலகாபாத்தில் ஒரு வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு வரும் தனித்தனியாக மேல் முறையீடு செய்தபோது ஜிகாசிங் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். காஷ்மீராசிங் தொடர்ந்த வழக்கு நீதிபதி பகவதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மூன்றாவது நபர் ஹர்பான்சிங் தொடர்ந்த மேல்முறையீட்டில் - ஒரே வழக்கில் ஒருவருக்கு தூக்கு; மற்றவருக்கு ஆயுள் தண்டனை என்ற நிலையை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அப்போது சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை அனுப்பியது. இப்படி தூக்குத் தண்டனையை நிறைவேற்றும்போது அதே வழக்கில் வேறு எவருக்காவது தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை, சிறை நிர்வாகம் உறுதி செய்து கொண்டு, இல்லை என்றால்தான் தூக்கிலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் கூறியது. இப்போது ராஜீவ் வழக்கில் கொலைக்கு திட்டமிட்டவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்களை, விசாரிக்கவே இல்லை. செயல்படுத்தியவராக குற்றம்சாட்டப்பட்ட நளினிக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது. உதவியதாக குற்றம் சாட்டியவர்களுக்கு மட்டும் ஏன் தூக்குத் தண்டனை என்ற கேள்வியைத் தான் எழுப்புகிறோம். இந்தக் கருத்துக்களை எல்லாம் மக்களிடம் நாம் நேரடியாக சென்று அவர்களிடம் கூறவும், இதைக் கேட்ட நீங்கள் மற்றவர்களுக்கு இதை எடுத்துக் கூறி, விழிப்புணர்வையும் அதனூடாக ஒரு எழுச்சியையும் உருவாக்கவுமே இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார்.

வைகோ

நிறைவுரையாற்றிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எழுச்சியுரையாற்றினார். 3 தமிழர்களின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது யார்? எந்தப் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது? இதற்குப் பின்னால் மறைந்திருப்பது யார்? இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்று, மத்திய அரசையும் மாநில அரசையும் விளக்கம் கேட்டிருக்கிறது. உயர்நீதி மன்றத் துக்கு எவரும் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை. அமைதியான சூழலிலேயே வழக்கு நடந்தது என்று நிச்சயமாக தமிழக அரசு சொல்லும்; அதுதான் உண்மை. ஆனால் மத்திய அரசு, என்ன சொல்லப் போகிறது? இது தான் நான் எழுப்பும் கேள்வி. நான் முதன்முதலாக, இப்போது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன்.

நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நானோ, எனது குடும்பத்தாரோ விரும்பவில்லை என்று ஏற்கனவே சோனியாகாந்தி கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இப்போது மத்திய அரசு, சோனியாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர் ஒப்புதல் இன்றி பிரதமரோ, மத்திய அமைச்சரவையோ ஒரு துரும்பைக்கூட அசைக்காது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இப்போது, கருணை மனுவை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய அமைச்சரவை எடுத்த முடிவு தன்னிச்சையான முடிவு தானா? அல்லது, ‘நான் அமெரிக்காவில் இருக்கும்போதே தூக்கில் போட்டு விடுங்கள்’ என்று சோனியா சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் போனாரா? இப்போது மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது என்றால், ஏற்கனவே தூக்கிலிட விரும்பவில்லை என்று சோனியா கூறியது உண்மையானதா? அல்லது ஊரை ஏமாற்றவா? இந்தக் கேள்விக்கு காங்கிரசார் பதில் சொல்ல வேண்டும்.

அவர் சொன்னது உளப்பூர்வமாகத்தான் என்றால், இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமே நல்ல வாய்ப்பு. அதை ஏற்று தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை மதித்து, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய முன்வரவேண்டும் - என்று வைகோ அறைகூவல் விடுத்தார்.

பெரியார் திராவிடர் கழகத்தைப் பாராட்டிய அவர் ம.தி.மு.க., பெரியார் திராவிடர் கழகத்தின் இந்த செயல்பாடுகளுக்கு தோளோடு தோள் நிற்கும் என்று கூறினார். இரா. உமாபதி நன்றி கூற இரவு 11.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.



பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள்

தூக்குத் தண்டனைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் பரப்புரைத் தொடர் கூட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இரா. நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தமிழருவி மணியன், தி.வேல்முருகன் (பா.ம.க.), இரா. அதியமான் (ஆதித் தமிழர் பேரவை), உ. தனியரசு (சட்டமன்ற உறுப்பினா - கொங்கு தமிழ் இளைஞர் பேரவை), ஜவஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர் - மனிதநேய மக்கள் கட்சி), தியாகு (தமிழ்த் தேச விடுதலை இயக்கம்) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


நமது செய்தியாளர்