கடந்த தி.மு.க. ஆட்சியில் மூடநம்பிக்கைகள், சமூகக் கொடுமைகளான தீண்டாமைகள் போன்றவற்றை ஆராய  பகுத்தறிவுப் பேராசிரியர் டாக்டர் நன்னன், தி.க. பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களைக் கொண்ட சமூக சீர்திருத்தக் குழு ஒன்றை தி.மு.க. முதல்வர் கலைஞர் கருணாநிதி நியமித்தார். இந்தக் குழு “நான்கைந்து முறை கூடி பேசியதோடு சரி; பிறகு இந்தக் குழு என்னவானதென்றே தெரியவில்லை. அதே போன்று செயல்படக்கூடிய ஒரு குழுவை இந்த ஆட்சி அமைக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.இராமகிருட்டிணன் வலியுறுத்தி யுள்ளார்.


தமிழகக் கல்வி நிலை


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 74.04 சதவீதம். அய்ந்தாண்டு கல்விக்கு முன்பே 30 சதவீத குழந்தைகள் பள்ளியை விட்டு ஒதுங்கி விடுகிறார்கள். எட்டு ஆண்டுகள் வரை படித்து விட்டு ஒதுங்கி விடும் குழந்தைகள் 50 சதவீதம். தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 20 புள்ளி 86 சதவீதம். இப்போது - 2011 ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்படி 80.3 சதவீதம். அகில இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம்.


‘கார்ப்பரேட்’ கொள்ளை


இந்தியாவில் அரசுகள் ‘கார்ப்பரேட் நிறுவனங்கள்’ நலனுக்காகவே செயல்பட்டு வருகின்றன. மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்தியாவில் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும், இவர்களுக்காகவே தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் 6 நிதிநிலை அறிக்கைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்பட்ட வரிச் சலுகைகள் ரூ.21 லட்சம் கோடி. நாட்டின் வளங்களை இந்த நிறுவனங்கள் தாராள மாக சுரண்டி வருகின்றன. ஒரு தேர்தலில் போட்டியிட கோடிக்கணக்கில் பணம் செலவிட வேண்டியிருக்கிறது. கடந்த மே மாதம் நடந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் 825 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அறிவித்த  சொத்துகளின் மதிப்பு ரூ.2,128 கோடி. இதில் 231 பேர், இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 2006-2011 ஆம் ஆண்டில் முதல் தடவை காட்டிய மதிப்பைவிட சராசரியாக இவர்களுக்கு 169 சதவீதம் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 825 சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த சொத்துக்களை 825 நிலமற்ற ஏழைகள் அடைய வேண்டுமானால், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் அவர்கள் 2000 ஆண்டுகாலம் வேலை செய்தால்தான் இந்த 825 சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் அளவுக்கு எட்ட முடியும். ‘இந்து’ ஏட்டில் சாய்நாத் எழுதிய கட்டுரையில் (ஜூலை 8) இந்த புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

இரா. வடிவேல் - மா. ஃபிளாரன்ஸ் இல்லத் திறப்பு விழா


ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பெரியார் திராவிடர் கழகத் தோழர் இரா. வடிவேல் - மா. ஃபிளாரன்ஸ் இணையர் புதி தாக கட்டியுள்ள ‘ராசி இல்ல’த்தை 17.7.2011 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். விழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு ரூ.2000 வழங்கினார்.
சேலம் நகரக் கழகத் தோழர் இரா.வீரமணி, தனது தாயார் சாரதா அம்மையாரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் 8.7.2011 நினைவாக கழக ஏட்டிற்கு ரூ.1000/- வழங்கினார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி கழகத் தோழர் பொ.கிருட்டிணன் - லலிதா ஆகியோரது மகள் தமிழ்ச் செல்வியின் 11 ஆவது பிறந்த நாள் 12.7.2011 மகிழ்வாக கழக ஏட்டிற்கு ரூ.500 வழங்கினர்.
(நன்றியுடன் பெற்றுக் கொண் டோம் - ஆர்)