கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அது இரஷ்ய நாட்டின் திட்டம் என்பதற்காக தமிழ்நாடு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. கூடங்குளம் திட்டத்தால் மக்களுக்கு ஆபத்து வராது என்று விளக்கும் கட்டுரைகளை ‘தீக்கதிர்’ நாளேடு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆனால், இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. காரணம், அது பிரான்சு நாட்டு அணுமின் திட்டம் என்பதால்!  பிரான்ஸ் நாட்டின் ஆரிவா என்ற நிறுவனத்திடமிருந்து இந்தியா ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்துக்கு ஆறு அணு உலைகளை வாங்கியுள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜெய்தாப்பூர் நகரைச் சுற்றி விவசாயிகளும், மீனவர்களும் தங்கள் வாழ்விடங்களைக் காலி செய்யுமாறு, அரசு மிரட்டுகிறது. இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆரிவா நிறுவனம் தயாரித்துள்ள அணுஉலைகள் இதுவரை எங்கும் இயங்கியதில்லை. முதன்முதலாக ஜெய்தாபூரில்தான் செயல்படப்போகிறதாம். சொந்த நாடான பிரான்சிலேகூட அது இயங்கவில்லை. அதன் தொழில்நுட்பத்தை சோதித்துப் பார்க்காத நிலையிலேயே மன்மோகன் அரசு மராட்டிய மாநில மக்கள் மீது திணிக்கிறது, கூடங்குளத்தைப் போல்!

போராட்டக் குழுவில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், சீத்தாராம் எச்சூரி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கூடங்குளம் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் வெளிப்படையாக ஆதரிக்க வில்லை. ஜெய்தாபூருக்கு ஒரு நீதி; கூடங்குளத்துக்கு ஒரு நீதி போலும்!