பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்

தேவேந்தர் பால்சிங் புல்லார் என்ற சீக்கிய பேராசிரியரின் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு வழி திறக்கப்பட்டுள்ளதற்கு பெரியார் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிராக அய்.நா.வும் உலக நாடுகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், குடியரசுத் தலைவரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழக சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பஞ்சாப் பேராசிரியர் தேவேந்தர் பால்சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த மே 25 ஆம் தேதி தள்ளுபடி செய்துள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கடும் கண்டனத்துக்கு உரியது. ப. சிதம்பரம் உள்துறை அமைச்சகம் - இதற்கு பரிந்துரை வழங்கியிருக்கிறது.பேராசிரியர் தேவேந்தர் பால்சிங் புல்லார் (47) தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு சண்டிகர் நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இவரையும் மற்றும் இவரது நண்பர்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தேட ஆரம்பித்தனர். புல்லார் தலைமறைவாகிவிட்டார். இதனால் புல்லாரின் தந்தை மற்றும் அவரது மனைவியின் தந்தையான மாமனார், அவரது குடும்ப நண்பர் ஆகியோரை சட்ட விரோதமாகக் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்து கொன்று விட்டனர். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1993 ஆம் ஆண்டு புதுடில்லியில் டில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பயணம் செய்த காரில் குண்டு வெடித்தது. இதில் காங்கிரஸ் தலைவர் காயத்துடன் உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

சண்டிகர் வழக்கில் பேராசிரியர் புல்லாரைத் தேடி வந்த காவல்துறை, இந்த வழக்கையும் அவர் மீது போட்டு தேடத் தொடங்கியது. 1980, 1990 ஆம் ஆண்டுகளில் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் காவல்துறை சீக்கிய இளைஞர்களை மூர்க்கத்தனமாக வேட்டை யாடி வந்தது. பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் காவல்துறையின் கையில் சிக்கி விடாமல் தப்பிக்க, தேவேந்தர் பால்சிங் புல்லார் கனடா போக திட்டமிட்டார். போலிப் பெயரில் பயணம் செய்ததாக வழியில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, அங்கு ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜெர்மன் நாட்டின் அனுமதியோடு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.

தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். தடா சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டுமே சாட்சியாக ஏற்று, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரோடு குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தொடரப் பட்டது சதி வழக்கு. ஒரே ஒருவர் மட்டுமே எப்படி சதிக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும்? அதுவும் வழக்கை விசாரித்த 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வில், தலைமை நீதிபதி எம்.பி.ஷா, பேராசிரியர் புல்லாரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். ஏனைய இரண்டு நீதிபதிகள் ஒப்புதல் வாக்குமூல அடிப்படையில் தூக்குத் தண்டனை விதித்தனர்.

ஜெர்மன் நாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர், அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் ஜெர்மன் நாட்டின் சட்டப்படி தூக்குத் தண்டனை விதிக்க முடியாது. சிறையில் 16 ஆண்டுகளாக 22 மணி நேரம் தனிமையாக அடைத்து வைக்கப்பட்டதால், மனநிலை பாதிப்புக்குள்ளான புல்லார், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து புதுடில்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இதனால் அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உச்சநீதி மன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு, உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், உள்துறை அமைச்சகம், கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது பழிவாங்கும் உள்நோக்கம் கொண்டதேயாகும்.  புதுடில்லியில் 3000 சீக்கியர்கள் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் களையே தங்களுக்கு எதிராக சாட்சியமாக்கிடும் தடா சட்டம் என்ற காட்டுமிராண்டி சட்டத்தின் கீழ் முறையான விசாரணைகளின்றி வழங்கப்பட்டுள்ள இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டால் இந்தியாவின் நீதித்துறை உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கும் நிலை வந்துவிடும். மனித உரிமையாளர்கள் இதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

நீண்டகாலமாக பரிசீலனையில் இருக்கும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யத் தொடங்கி யிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். முளையிலேயே இந்த முயற்சிகள முறியடிக்கப்பட வேண்டும். பெரியார் திராவிடர் கழகம் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது.