சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணிகளோடு தேர்தல் களத்துக்கு வந்துள்ளன. 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., 63 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய ‘நெருக்கடிகளுக்கு’ உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் தி.மு.க. அணியே வெற்றி பெற்று வந்தாலும் முழுமையான பலத்துடன் தி.மு.க. மட்டுமே ஆட்சியமைக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தில் காங்கிரசுடன் பங்கு போட வேண்டிய கட்டாயத்தை காங்கிரசார் உருவாக்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் மக்களோடு தொடர்பில்லாத வேரற்றுப் போன கட்சி காங்கிரஸ், ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையை திட்டமிட்டு நடத்தியது. அக்கட்சி, முள்ளி வாய்க்காலில் கொடூரமான ஈழத் தமிழினப் படுகொலை நடந்தபோது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்ற அய்ரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டிய போது, அதைத் தடுத்து நிறுத்தியது இந்தியா தான் என்று இப்போது ‘விக்கி லீக்ஸ்’ இணையதளம் வழியாக அம்பலமாகியுள்ளது. தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத்தில் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தல் களத்துக்கு வந்துள்ள நிலையில் தமிழின உணர்வாளர்கள் துரோகிகளையும் அதற்கு துணை நின்றவர்களையும் ஆதரிக்க முன் வர மாட்டார்கள்.

ஜெயலலிதாவோ பார்ப்பன உணர்வோடு ‘இந்துத்துவா’ப் பண்புகளில் ஊறிப் போய் நிற்பவர். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு சேது சமுத்திரத் திட்டத்தையும் ‘இந்துத்துவ’ உணர்வோடு எதிர்த்தவர். ஈழத் தமிழர்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் ஆதரவாக பேசியவர்களை அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு சிறையில் அடைத்தவர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முயன்று தோல்வி அடைந்த நிலையில் இடதுசாரிகள் மற்றும் தே.மு.தி.க.வோடு தேர்தல் உடன்பாடு கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உறுதியாக குரல் கொடுத்து வந்த ம.தி.மு.க.வையும் அவமானப்படுத்தி, தமது கூட்டணியில் தொடாந்து நீடிக்க விடாமல் செய்துவிட்டார்.

தேர்தல் முடிவுக்கு  பிறகு ஜெயலலிதா அணி வெற்றி பெற்றால், காங்கிரசின் ஆதரவு தேவைப்பட்டால், காங்கிரசோடு அவர் அணி சேரவும் தயங்கமாட்டார். காங்கிரசும் அதற்கு தயாராகவே இருக்கும். காஞ்சி ஜெயேந்திரன் எனும் பார்ப்பன சங்கராச்சாரியை கொலை வழக்கில் கைது செய்த ஜெயலலிதாவின் துணிவை நாம் பாராட்டத் தான் வேண்டும். ஆனால், தி.மு.க.வோ, காஞ்சி ஜெயேந்திரன் மீதான கிரிமினல் வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆனாலும் கூட பார்ப்பனர் சங்கம் ஜெயேந்திரனை கைது செய்த ஜெயலலிதா வுக்கே ஆதரவு தெரிவித்துள்ளது,  பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான துக்ளக் சோ - பார்ப்பனர், பா.ஜ.கவை ஆதரிப்பது வீண் முயற்சி என்று கருதி ஜெயலலிதாவையே ஆதரிக்கிறார்.

இப்படி பார்ப்பனர்கள் தெளிவாக இருந்தும் தி.மு.க.வோ, பார்ப்பன எதிர்ப்பில் சமரசத்துக்கும் தடுமாற்றத்துக்கும் உள்ளாகி, காங்கிரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஈழத்தில் உச்சகட்டமான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சி சிங்கள அரசுக்கு திட்டங்களைத் தீட்டித் தந்து கொண்டிருந்தது. அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டால் தமிழினப் படுகொலையை நிறுத்தும் வாய்ப்புகள் உண்டு என்று கருதி காங்கிரசுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. அதற்காக கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது. எதிர்த்துப் போட்டியிட்டவர் அ.இ.அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக, அ.இ.அ.தி.மு.கவை ஆயுதமாகப் பயன்படுத்தி வாக்களிக்க பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது.

ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. ஆயுதமாக இல்லை; அரசியல் அதிகார சக்தியாக களத்தில் நிற்கிறது. எனவே நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட அதே பார்வையோடு சட்டமன்றத்தில் செயல்பட முடியாது. இந்த நிலையில்தான் இரண்டு அணிகளுக்குமே ஆதரவில்லை என்று முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க, பெரியார் திராவிடர் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் நிலவுகிறது. எனவே அங்கு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், அவர்களை வீழ்த்தக் கூடிய வலிமையான வேட்பாளருக்கு வாக்களிக்க கழகம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் அரசியலில் கொள்கைகளுக்கு இடமேயில்லை. கொடுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைகளே கொள்கைகள் என்ற நிலை வந்து விட்டது. ‘இலவசங்கள் -  பணம்’ இரண்டுமே ஜனநாயகத்தின் தூண்களாகி விட்டன. கொள்கையே இல்லாத தேர்தல் களத்தில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பைத் தவிர வேறு வழி இல்லையே!