சாதி அமைப்பு பார்ப்பனியத்தின் வெளிப் பாடு. சாதி அமைப்பு வலிமை பெறுகிறது என்றால் பார்ப்பனியத்தின் வலிமை உறுதி யாகிறது என்பதே ஆகும். சாதியின் கட்டமைப்பு உடைய வேண்டுமானால், சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமை களை மீட்டெடுத்து, மக்களை சமத்துவ மாக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட வேண்டும். இதன் காரணமாகத் தான் சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பெரியார் காங்கிரசில் இருந்த காலத்திலிருந்தே போராடினார்.

 

உரிமைகள் மறுக்கப்பட்ட ஒவ்வொரு சாதிக் குழுவும் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் குலத் தொழில்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வும், சாதியற்ற மனிதர்களாக முன்னேறிச் செல்லவும், ஒன்று திரண்டு போராடுவதில் நியாயம் உண்டு. ஆனால், இப்போது தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? ஜனநாயகம் என்பது சாதி நாயகமாக மாறிவிட்டது. சாதி அடிப்படையில் அரசியலில் மக்கள் அணி திரட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு சாதிக் குழுவும் அரசியல் பெயரை சூட்டிக் கொண்டு, ஓட்டு வேட்டைக்காக பயன் படுத்தப்படு கின்றன. நேரடியாக சாதி பெயரிலேயே உள்ள அரசியல் கட்சிகளும் வந்துவிட்டன. இந்த அரசியல் அணி திரட்டல் எதற்குப் பயன்படுகிறது? அந்தந்த சாதிக் குழுவில் ஒரு சில தலைவர்கள் அதிகாரங்களைக் கைப் பற்றுவதற்கு மட்டுமே பயன் படுகிறது. இந்த சாதிக் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரத் துக்கு வந்த பிறகு தங்களையும், தங்கள் ஆதரவாளர்கள் சிலரையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொள்வதில் துடிப்புக் காட்டு கிறார்களே தவிர, தங்கள் சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

 

ஓட்டு வங்கிகளுக்கு மட்டுமே இந்த சாதிக் குழுவினர் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒவ் வொரு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரும் பான்மை மக்கள் சமூக, பொருளாதார நிலையில் பின் தங்கியே வாழ்ந்துக் கொண் டிருக்கிறார்கள். ஓட்டுகளைக் கைப்பற்று வதற்கு சொந்த சாதி மக்களை திரட்டும் இவர்கள், அவர்களை மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கும் சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புகளை மாற்றி யமைத்திட வேண்டும் என்று  போராடு கிறார்களா? உள்ளத்தைத் தொட்டு பதில் சொல்லட்டும்!

 

இந்தியாவில் அதிகார வட்டத்துக்குள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் அரசியல் கட்சிகள், அது மாநிலக் கட்சி களானாலும் சரி; தேசியக் கட்சிகளானாலும் சரி; பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் பிடிகளில்தான் உள்ளன. கடந்த 20 ஆண்டு காலமாக சமூக பொருளாதார அரசியலை கவனித்தாலே இந்த உண்மை புரியும். இந்து மதத்துக்கு தலைமையை ஆக்கிரமித்துக் கொண்டு விட்ட பார்ப்பனர்கள், தங்கள் மேலாதிக்கத்துக்கு வெகு மக்களை அடிமைப் படுத்தி, தங்களின் மத அதிகாரத்தின் பிடிக் குள் அவர்களைக் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

 

சாதி, அரசியல் அணிகளுக்கு தலைமை யேற்றவர்களும், தங்கள் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு தங்களது சமூக மக்களின் விளிம்பு நிலை வாழ்வு பற்றிக் கவலைப்படாமல், வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

 

இரண்டிலுமே மேலோங்கி நிற்பது சுய நலமும், சுரண்டலும் தானே! இது பார்ப்பனியத்தின் மற்றொரு வடிவம் தானே!