முத்தமிழ் அறிவியல் மன்றம் கேள்வி 

சென்னை பல்கலையில் பெரியாரியல் பாடம் நீக்கப்பட்டது ஏன்?

 

நாகை மாவட்டத்திலுள்ள குத்தாலத்தில் இயங்கி வரும் முத்தமிழ் அறிவியல் மன்றம் இந்துஅறநிலையத் துறை என்ற பெயரிலுள்ள ‘இந்து’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ‘தமிழர் சமயத் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி, ஜன.23 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி அறநிலைய ஆட்சித் துறை ஆணையருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆணையர் பதிலளித்துள்ளார். இந்து சமயம் என்பது பொதுவான சொல் என்றும், தமிழர் சமயம் என்று மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அப்படி மாற்றுவதனால் என்ன பயன் என்பது பற்றி தீர்மானத்தில் விளக்கமில்லை என்றும் பதில் அனுப்பினார். அதற்கு முத்தமிழ் அறிவியல் மன்றம் அனுப்பிய பதிலில்,

 

“இந்து வேதத்தில் சூத்திரன், தஸ்யூ, தாசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூத்திரன் என்றால் இழிமகன் என்றும், தஸ்யூ என்றால் கொள்ளை அடிப்பவன் என்றம், தாசன் என்றால் அடிமை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்து மதம் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்துவதால் தமிழர் சமயம் என்று பெயர் மாற்றக் கோருகிறோம்” என்று ஆணையருக்கு பதில் அனுப்பப்பட்டது.

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை நீக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் முத்தமிழ் அறிவியல் மன்றம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை 23.5.2006 இல் வெளியிடப்பட்டது. அர்ச்சகருக்கான பயிற்சி வகுப்புகள் 14.5.2007 இல் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்கள் 34 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 55 பேரும், பிற்படுத்தப்பட்டோர் 76 பேரும், இதரர் 35 பேரும், ஆக 200 பேர் பயிற்சிப் பெற்றனர். பயிற்சி முடித்தும் 3 ஆண்டுகளாகியும் பயிற்சி முடித்தவர்கள் அர்ச்சகராக முடியாமல் தவிக்கின்றனர். தமிழக அரசு தடையை நீக்க முன் வரவேண்டும் என்று மற்றொரு தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது.

 

அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தோழர் வே. ஆனைமுத்து எழுதிய ‘பெரியாரியல்’ எனும்நூலை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் முத்தமிழ் அறிவியல் மன்றம் தீர்மானம் மூலம் வலியுறுத்தியுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் இந்த நூலை 2003-2004 முதல் தமிழ் பட்ட மேற்படிப்புக்கு அஞ்சல் வழியில் படிப்போருக்கு மட்டும் மூன்று விருப்பப் பாடங்களில் ஒன்றாக தேர்வுக்குரிய பாடமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுவிட்டது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தனது ஆளுகைக்குரிய அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் பட்ட மேற் படிப்பில் ‘பெரியாரியல்’ நூலை 2004-05 முதல் கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெரியாரியல் நூலை கட்டாயப் பாட மாக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.