ஜவகர்லால் நேரு பல்கலை பொதுக் கூட்டத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

புது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஈழப் பிரச்சினை தொடர்பான பொதுக் கூட்டம் கடந்த ஏப்.2 ஆம் தேதி நடை பெற்றது. ‘ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு’ இந்த பொதுக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தது. பல்வேறு நாடுகளில் குறிப்பாக, கிழக்கு ஆசியாவில் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கி, அவர்களின் நியாயமான உரிமைகளை மக்கள் மன்றத்தில் விவாதத்துக்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு, இந்த அமைப்பு கடந்த மார்ச் 2011 இல் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் - ஈழத்தில் - இந்திய ராணுவம் அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய படுகொலைகள் பாலியல் வன்முறைகளை விளக்கிடும் 39 பக்க ஆவணம் வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் பிமோல் அகோய்ஜம் நூலை வெளியிட்டதோடு, கூட்டத்துக்கும் தலைமை தாங்கினார். ஆளும் அரசு ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலை போராடும் தேசிய இனங்களுக்கு எதிராக வரையறுத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “நேர்மையான அரசியல் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையே பயங்கரவாதம்” என்றார். உரிமைகளுக்கான அரசியல் இயக்கங்களை சட்ட விரோதமாக சித்தரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாடலான ‘பயங்கரவாத’த்தை சிறீலங்காவின் தேசிய இன அடக்குமுறைகளை நியாயப்படுத்த - இந்தியா, ஒரு கவசமாக பயன்படுத்திக் கொண்டது. சிறீலங்காவில் நடத்தி முடிதத இன “அழித் தொழிப்பு’ முறையை நாகாலாந்திலும் நடத்து வோம்  என்று நாகா விடுதலை இயக்கத்தை, இந்தியா மிரட்டிக் கொண்டிருக்கிறது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கவுரவப் பேராசிரியர் எஸ்.சந்தோஷ் மற்றும் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சாகிப் அகமது, இருவரும், அண்மையில் ஈழத்தில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதிக்கு நேரில் சென்று வந்திருந்தனர். யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளி சிறைச் சாலையாகவே காட்சி அளிக்கிறது. மக்கள் ராணுவத்தின் பிடியில் கைதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இராணுவம் - இராணுவ அதிகாரத்தை மிகக் கொடூரமாக வெளிப்படையாக மக்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது என்று அவர்கள் கூறினர். இத்தகைய நெருக்கடியான சூழலில், ‘அறிவு ஜீவிகளாக’ வலம் வரும் சில குழுவினர், தங்களின் கடமைகளை கை கழுவி விட்டு, ராஜபக்சே, தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவார் என்று அரசியல் ஆரூடம் கணித்து  கொண்டிருக்கிறார்கள்.
சிறீலங்கா அரசில் அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் முழுதாக மறுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சார சுவடுகளையே அழிக்கும் திட்டமிட்ட முயற்சிகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு, உள்ளூர் வரலாறுகள் புதைக்கப்பட்டு வருகின்றன என்றார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய வரலாற்று சின்னங்களை அழித்து, அங்கே புத்தர் சிலைகளை அரசு நிறுவுவதை, மாணவர் சந்தோஷ், உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.
சத்யா சிவராமன் என்ற பத்திரிகையாளர் பேசுகையில் - இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் மோசமான தலையீடுகளை, இந்திய ‘அறிவாளி வர்க்கம்’ கண்டிக்காமல், மவுனப் பார்வையாளராக நின்றதை வன்மையாகக் கண்டித்தார். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை நடத்திய ராணுவ அழித்தொழிப்பில் இந்தியா தரகராகவும், இராணுவத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய நிர்வாகியாகவும், ரகசியமாக உதவிகளைக் குவித்த நண்பனாகவும் செயல்பட்டது; உலகத்தின் கண் முன் - சமாதானக் காவலனாக நாடகமாடிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழர்களுக்கு எதிராக யுத்தத்தை தொடரச் செய்த இந்தியா, போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றார் சிவராமன். ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைகளுக்கு சிறீலங்கா மட்டும் பொறுப்பல்ல; அதே பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டு என்று கூறிய அவர், இலங்கையில் இனப் படுகொலைக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் இயக்கம், தொடங்கப்பட வேண்டும் என்றார். இது தொடர்பாக - இந்தியாவின் பங்கினை வெளிப் படுத்தும் வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு இந்தியாவை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். “அண்டை நாட்டில், நடந்த இந்த இனப் படுகொலைகளைக் கண்டிக்காமல், அதை ஏற்றுக் கொண்டு விட்டால், அதே ஆபத்து, இந்தியாவிலும், நாளை திரும்பும் என்பதை மறந்து விட வேண்டாம்” என்று அவர் எச்சரித்தார். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடு ஈழத் தமிழர்களுக்கான விடுதலை, குரலும் இணைந்து ஒலிக்க வேண்டும். அதற்கான இயக்கம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது” என்றார் சிவராமன்.
தொடர்ந்து வினா - விடை நிகழ்ச்சி நடந்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மாநிலத்தின் ராணுவ ஒடுக்குமுறைகளைப் பகிர்ந்து கொண் டனர். ஈழப் போரில் இறுதி நாட்களில் இலங்கை இராணுவம் நடத்திய படுகொலைகளை சித்தரிக்கும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. சோமிதரன் என்பவர் இப்படத்தைத் தயாரித்து இருந்தார். அவரும் இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழர்களுக்கு நீதியும், சுதந்திரமும் கிட்டாத வரை, ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டது என்பது வீண் பேச்சே என்று இந்தப் பொதுக் கூட்டம் உறுதியாக பிரகடனம் செய்தது.