‘விடுதலை’ நாளேடு அறிவார்ந்த கூர்மையான வாதங்களை முன் வைத்து இன எதிரிகளைக் கலங்கடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், ‘விடுதலை’ இப்போது போராட்டப் பண்புகளை இழந்து சமரசங்களோடு தனி மனித துதிப்பாடலில் மூழ்கிப் போய் கிடக்கிறது. அந்தக் கழகமே உறுதியான கொள்கைப் பயணமும், லட்சியத் தெளிவுமின்றி சந்தர்ப்பவாத சேற்றில் மூழ்கிவிட்ட போது அதன் மோசமான பிரதிகளாகவே அந்த அமைப்பின் ஏடுகளும் - மாறி விடுகின்றன!

பெரியார் நூல்கள் நாட்டுடைமை பற்றி பெரியாரிய சிந்தனையாளர் தோழர் எஸ்.வி. ராஜதுரை, ‘தினமணி’யில் எழுதிய கட்டுரைக்கு ‘விடுதலை’ (3.3.2009) ஏற்கனவே எழுதிய பழைய சொத்தை வாதங்களையே மீண்டும் எழுதித் தீர்த்திருக்கிறது. தோழர் எஸ்.வி.ஆர். தனது கட்டுரையில் எழுப்பியுள்ள ஒரு கேள்விக்குக் கூட ‘விடுதலை’யின் மின்சாரத்தால் பதில் கூற முடியவில்லை. எஸ்.வி.ஆர். எழுப்பிய முக்கிய கேள்விகள் இவை தான்!

1. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு பெரியார் நூல்கள் நாட்டுடைமை பற்றியது அல்ல; பெரியார் ‘குடி அரசு’ ஏட்டில் எழுதியது, பேசியது பற்றிய முழுமையான தொகுப்பை வெளியிடுவது பற்றிய வழக்கு தான். காலவரிசைத் தொகுப்பு என்பது வேறு; நூல்கள் நாட்டுடைமை என்பது வேறு.

2. தலைப்பு வாரியாக பெரியார் கட்டுரைகளை வெளியிடுவது பெரியார் பற்றிய முழுமையான பரிமாணத்தை வெளிப்படுத்தாது. பெரியார் சிந்தனையில் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, மத மறுப்பு, பொருளாதாரம் தொடர்பான கருத்துகளைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. அவரது சிந்தனைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. எனவே, அவர் வாழ்ந்த சமூக அரசியல் பண்பாட்டுப் பின்புலத்திலிருந்து அவர் சிந்தித்த கருத்துகளை அந்தப் பின்புலத்தோடு காலவரிசைப்படி தருவதே சரியானது.

3. பெரியாரால் - ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துக்களின் அறங்காவலர்களாக சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்று சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சட்ட திட்டம் கூறுகிறது. இதில் பெரியாரின் - எழுத்தும் பேச்சும், எப்படி வரும்? தனது பேச்சையும், எழுத்தையும் பெரியார் ஏற்கனவே வாங்கி வைத்திருந்ததாக வீரமணி கூறுகிறாரா? இது பெரியாரை இழிவுபடுத்துவதல்லவா?

4. சுயமரியாதை சங்கத்தின் சட்டத் திட்டம் சுயமரியாதை சங்கத்துக்காக, சுயமரியாதை சங்கத்தின் நிதியிலிருந்து பெரியார் வாங்கிய சொத்துகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது. ஆனால், பெரியார் நடத்திய ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’, ‘ஜஸ்டிஸ்’ முதலிய ஏடுகள் ‘சுயமரியாதை பிரச்சார நிறுவன’த்தால் வெளியிடப்பட்டவையே அல்ல. அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது 1952 இல் தான்! பிறகு சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எப்படி உரிமை கோர முடியும்?

5. எழுத்துப்பூர்வமாக - ஒருவருக்கு ஒப்புதல் தந்தால் தான் பதிப்புரிமை கோர முடியும் என்று பதிப்புரிமை சட்டம் கூறுகிறது. பெரியார் - வீரமணிக்கு அப்படி எழுத்துப்பூர்வமாக பதிப்புரிமை வழங்கியுள்ளாரா? இல்லையே!

6. ஏறத்தாழ எட்டு ஆண்டுகால ‘குடிஅரசு’ம், இரண்டு ஆண்டுகால ‘விடுதலை’யும் தம்மிடம் இல்லை என்று ‘விடுதலை’யில் வீரமணியே அறிக்கை வெளியிடுகிறார். இதுதான் பெரியாரின் ‘அறிவுசார்ந்த சொத்தை’ - இவர் பாதுகாத்த லட்சணமா?

- இப்படி தோழர் எஸ்.வி. ராஜதுரை எழுப்பிய எந்தக் கேள்விக்கும் ஒருவரி பதில்கூட மின்சாரத்தின் கட்டுரையில் கிடையாது. பதில் சொல்ல வந்ததாக - பேனா பிடித்தவர்கள் ஒன்றுக்குக்கூட பதில் கூறாமல் திணறிப் போய் நிற்பது அவர்களின் பரிதாப நிலையையே படம்பிடித்துக் காட்டுகிறது; சரி விட்டு விடுவோம்.

வேறு என்ன கருத்துகளை அக்கட்டுரை, முன் வைக்கிறது? எல்லாமுமே பழைய பல்லவி. பெரியார் நூல்களை காலவரிசைப்படி - பெரிய பெரிய தொகுதிகளாக வெளியிட்டால் அது கண்டிப்பாக அலமாரியில்தான் தூங்குமாம்! வெகு மக்களுக்கு போய்ச் சேராதாம்! வெகு மக்களுக்கு சென்றடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமாம்! எந்த பதிப்பகத்தாருக்கும் இதுவரை தெரியாத ஆராய்ச்சியை நடத்தி, ‘மின்சார’த்தின் கட்டுரை விளக்கம் அளித்திருக்கிறது. 300 பக்கங்களுக்கு மிகைப்படாமல் இருந்தால் அது, வெகு மக்களுக்கு போய்ச் சேர்ந்துவிடுமாம்! அதுவே 301 பக்கங்களாகிவிட்டால், அது ‘கண்டிப்பாக’ அலமாரிக்குள் முடங்கிவிடுமாம்! 299 பக்கங்கள் வரை இருந்தால் மட்டுமே அது கடை கோடி பொது மக்களுக்கு போய் சேரும் என்ற திடுக்கிடும் ஆய்வுகளைக் கூறி ‘விடுதலை’ திணற வைத்துள்ளது. பெரியாரின் கருத்துகளை தலைப்பு வாரியாகத் தொகுத்து - இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளதாகவும், அக்கட்டுரை கூறுகிறது. பெரியாரியலை வெகு மக்களிடம் கொண்டு செல்லும் ‘சூட்சமம்’ பக்கங்களின் எண்ணிக்கையில் அடங்கியிருப்பதைக் கண்டறிந்துள்ள மின்சாரத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டாம்; அவர்கள் நடத்தும் ‘திராவிடன் புத்தக நிலையமே’ பதில் தந்திருக்கிறது.
தங்களின் நோக்கம் வெகுமக்களிடம் பெரியாரியலைப் பரப்புவதைத் தவிர, அறிவுஜீவிகளுக்கோ, ஆராய்ச்சியாளர்களுக்கோ அல்ல என்று மின்சாரம் எழுதுவதற்கும் இதில் பதில் கூறப்பட்டுள்ளது.

‘சாதி - தீண்டாமை’ எனும் தலைப்புகளில் வெளி வந்துள்ள 31 தொகுதிகளிலும் கடைசி பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு பாகமும் 300 பக்கங்களுக்கு மேல்! மக்கள் பதிப்பு... ஆய்வு மேற்கொள்ளும் மாணவ மணிகளே! மதிப்புமிகு வரலாற்று ஆசிரியர்களே கைவிளக்காய் பயன்படும் அய்யாவின் இந்த வழிகாட்டி நூலை வாங்கிப் பயன் அடையுங்கள்” - என்று அந்த விளம்பரம் கூறுகிறது. வரலாற்று ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ‘கை விளக்காக’ - வெளியிடுகிறோம் என்று விளம்பரம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் ‘வெகு மக்களுக்கு’ கொண்டு செல்வதே தமது நோக்கம் அறிவு ஜீவிகளுக்கு அல்ல என்று ‘மின்சாரங்கள்’ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 2005 ஆம்ஆண்டில் - பெரியார் சிந்தனைகளை 503 பக்கங்களில் தொகுத்து, திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது - மின்சாரத்துக்கு தெரியாது போலும்! கருத்தியல் தளம் ஏதுமின்றி சந்தர்ப்பவாத நோக்கத்தோடு, பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை தடைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு - எதையாவது ஒரு பதிலைக் கூற வேண்டுமே என்ற ‘நெருக்கடிக்குள்’ சிக்கி பேனாவைப் பிடிப்பதால் தான் இப்படி - முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

மற்றொரு ‘திடுக்கிடும்’ ஆராய்ச்சியையும் மின்சாரம் கட்டுரை முன் வைத்துள்ளது. பெரியார் காலத்தில் - அவர் வாழ்ந்த போது பெரியார் கருத்துகளைப் பற்றி கவலைப்பட்டவர்கள் தான். இப்போது பெரியார் கருத்துகளையே பேசத் தகுதி படைத்தவர்கள் என்கிறது அந்த ஆராய்ச்சி! பெரியார் காலத்துக்குப் பிறகு உணர்ந்து, பெரியாரியலைப் புரிந்து கொண்டு - அந்த தத்துவம் மக்களை சென்றடைய வேண்டிய அவசியத்தைப் புரிந்து, அதைப் பரப்புவதற்கு முன் வந்தால் பாராட்ட மாட்டார்களாம். நீ பெரியார் காலத்தில் என்ன செய்தாய்? உனக்கு என்ன தகுதி என்று கேட்பார்களாம். அப்படியே இருக்கட்டும்; ஒரு கேள்வியை கேட்கிறோம்; தி.மு.க. தோன்றிய காலத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு வரை பெரியாரை குறை கூறி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் தானே கலைஞர். அவரைப் பார்த்து இப்போது பெரியாரைப் பற்றிப் பேச உமக்கு தகுதி உண்டா? என்ற கேள்வியை மின்சாரங்கள் கேட்பார்களா?

அதே கலைஞர் கருணாநிதி - வீரமணிக்கு வழங்கிய பாராட்டுரைகளை தங்கள் தலைவருக்கான நற்சான்றிதழ்களாக இதே கட்டுரையில் எடுத்துக் காட்டி பெருமைப்படுகிறதே, மின்சாரத்தின் கட்டுரை! ஏன் இந்த முரண்பாடு! தமிழகத்திலே ‘விடுதலை’ நாளேடு ஒன்றினால் மட்டுமே “தமிழர் தலைவர்” என்று அழைக்கப்படும் இவர் தான், பெரியார் காலத்திலிருந்து இருந்து வருகிறாராம். எனவே, பெரியார் நூல்கள் பரவுவது பற்றி அவருக்கு மட்டுமே கவலை உண்டாம். மற்றவர்கள் எவரும் கவலைப்படத் தேவை இல்லை என்கிறது மின்சாரம் கட்டுரை! “என் புருசனுக்கு என்மீது இல்லாத அக்கரை உனக்கு என்னாடி?” என்கிற ‘குழாயடி’ தரத்துக்கு - ‘விடுதலை’யின் ‘அறிவார்ந்த’ வாதங்கள் சுருங்கிப் போய் விட்டனவே! அந்தோ பரிதாபம்!

பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது அல்ல பிரச்சனை. பெரியாரின் எழுத்து பேச்சுகள் கால வரிசைப்படி தொகுக்கப்பட வேண்டும். இதுதான் வழக்கு என்று எஸ்.வி.ராஜதுரை எழுதியதற்கு மின்சாரம் கூறும் பதில் என்ன? “பெரியாரின் நூல்களில் - அவரின் எழுத்துகள், பேச்சுகள் இல்லையா? இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோமே!” என்று பதில் கூறுகிறது கட்டுரை. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளட்டும்! அவை எல்லாம் பெரியாரின் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவையல்ல. பெரியார் நடத்திய ‘குடிஅரசு’, ‘புரட்சி’ போன்ற இதழ்களிலிருந்தும், ‘விடுதலை’ நாளேட்டிலிருந்தும் எடுக்கப்பட்டு, இப்போதுதான் முதன்முதலாக நூல் வடிவமே பெறத் தொடங்கியுள்ளன. தங்களின் வெளியீடு எதிலிருந்து தொகுக்கப்படுகிறது என்பதுகூட தெரியாமலேயே அவ்வளவு அவசரம் காட்டி பேனாவை எல்லாம் தூக்கிவிடக் கூடாது!

பார்ப்பன ஏடுகள் - பெரியார் கருத்தைத் திரிக்க வில்லையா என்று ஒரு கேள்வி. பார்ப்பனர்கள் எப்போதுமே பெரியார் கருத்தைத் திரித்துத் தான் கூறுவார்கள்! அப்படி திரிபுவாதங்கள் நடக்கும்போது முறியடிப்பதுதான் பெரியாரியலாளர்களின் வரலாற்றுக் கடமை! எவருமே பெரியார் கருத்துகளை ‘திரித்து’ விடாதபடி - பெரியார் நூல்களை, ஏடுகளை ‘சேப்டி லாக்கரில்’, ‘தமிழர் தலைவர்கள்’ பூட்டி விடக் கூடாது; அப்படி பூட்டி வைத்திருக்கும் போதே சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை பார்ப்பன ஏடுகள் திருத்தி வெளியிட்டுவிட்டதாக, ‘மின்சாரம்’ கட்டுரை கூறுகிறதே! அப்போது மட்டும் எப்படி ‘திருத்தல் வாதம்’ நடந்ததாம்? இதிலிருந்து ஒரு உண்மையை ‘மின்சாரங்கள்’ புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் நூல்கள் அரசுடைமையாகா விட்டாலும் திருத்தல் வாதம் நடக்கும்; அரசுடைமையானாலும் திருத்தல் வாதம் நடக்கும்; அப்படி திருத்தல் வாதங்கள் வரும் போது - அதை எதிர் கொண்டு முறியடிப்பதுதான் - உண்மையான பெரியாரியல்வாதிகள் கடமையாக இருக்கும். இத்தகைய ‘விவாதக் களங்கள்’ எதிர் நீச்சல் வழியாகத்தான் பெரியாரியலே - தனது வெற்றிப் பயணத்தை நடத்தி வந்திருக்கிறது. அதனால்தான் தன்னுடைய கருத்துகளுக்கு எப்போதுமே எதிரிகள் தான் விளம்பரப்படுத்தி வருகிறார்கள் என்று அறிவு ஆசான் பெரியார் கூறி வந்திருக்கிறார். விவாதங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகும் போதுதான் பெரியாரியல் மக்களிடம் சென்றடையும். பார்ப்பன இருட்டடிப்பைக் கிழித்து பெரியாரியம் வளர்ந்ததே - அவர்கள் காட்டிய எதிர்ப்பு - திரிப்புகளால் தான்.

பெரியார் கருத்தை - பார்ப்பனர்கள் மட்டுமா திரிக்கிறார்கள்; பெரியாரை - தங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டாடும் “தமிழர் தலைவர்”களும் திரிக்கிறார்களே? அடுக்கடுக்கான ஆதாரங்களோடு - ‘புரட்சி பெரியார் முழக்கம்’ அம்பலப்படுத்தி வருகிறதே; அதற்கெல்லாம் பதில் உண்டா? பாரதியார் பாடல்கள் திரிக்கப்பட்டுவிட்டதாக - பாரதியாரின் பெயர்த்தி குமுறுகிறாராம்! “இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள் ராஜதுரைகள்?” என்று சவால் விடுகிறது அந்தக் கட்டுரை! இதற்கு ராஜதுரை ஏன் பதில் வைத்திருக்க வேண்டும்? அதைத் தான் பாரதியின் பேத்தியே பார்த்துக் கொள்வாரே!

பெரியார் - தனித்தமிழ் நாடே கேட்கவில்லை என்று ‘தினமணி’யில் கி.வீரமணி கட்டுரை எழுதிய போது, வீரமணியின் திரிபுவாதத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி, ‘மரபும் - திரிபும்’ நூலை எழுதினாரே ராஜதுரை! 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூலுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக ‘விடுதலை’யோ, ‘தமிழர் தலைவரோ’ - மின்சாரமோ வாய் திறக்காதது ஏன்? பதில் கூறுவார்களா?

பெரியார் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை என்று, வீரமணி திரித்தாரா இல்லையா? அந்த திருத்தல்வாதத்தை எப்படி முறியடிக்க முடிந்தது? பெரியார் பேச்சு - எழுத்துகளைக் கொண்டுதானே! இந்த எழுத்தும் பேச்சும். பெரியார் பிறந்தகத்துக்குள் முடங்கி விட்டால் திரிப்பவர்கள் திரித்துக் கொண்டுதானே இருப்பார்கள்? இந்த ஆபத்துகள் நிகழக் கூடாது என்பதற்குத் தான் பெரியார் எழுத்து பேச்சுகளை ‘பிறந்தகத்தை’ விட்டு வெளியே கொண்டு வரவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது. தலைப்பு வாரியாகத் தொகுக்கிறோம் என்று கூறுகிறவர்களைக் கேட்கிறோம்; பெரியார் தனித்தமிழ் நாடு பற்றி பேசிய ஏராளமான பேச்சுகளை தனித் தலைப்பாகத் தொகுத்து வெளியிடுவீர்களா?

‘தினமணி’ பார்ப்பன நாளேட்டில் எழுதலாமா? ‘தினமணி’ வெளியிடுகிறது என்றாலே, அதன் நோக்கம் புரியவில்லையா என்று மின்சாரம் கேட்கிறார். ‘தினமணி’ பார்ப்பன ஏடு தான். அந்த பார்ப்பன ஏட்டுக்கு பெரியார் ‘தனிநாடு’ கேட்கவில்லை என்று இதே வீரமணி கட்டுரை எழுதவில்லையா? பார்ப்பன இந்துத்துவ சக்திகளை மகிழ்விக்க ஜெயலலிதா ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதை ஆதரித்து நீதிபதி வேணுகோபால் ‘தினமணி’க்கு கட்டுரை எழுதி, அந்தக் கட்டுரையை ‘தினமணி’க்கு நன்றி தெரிவித்து, ‘விடுதலை’ மறு வெளியீடாக வெளியிடவில்லையா?

தனது வாதத்துக்கு வலிமை சேர்க்க வரலாற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு தாவுகிறது மின்சாரம் கட்டுரை! அது ‘பெரியார் பொன்மொழிகள்’ நூல் தடை செய்யப்பட்டு, பெரியார் கைது செய்யப்பட்ட வரலாறு. சரி; இந்த வரலாற்று நிகழ்வாவது இவர்களின் வாதங்களுக்கு வலிமை சேர்க்கிறதா என்றால், அதுவும் இல்லை. திருச்சி திராவிட மணி பதிப்பக சார்பில் 1947 இல் வெளியிடப்பட்டது ‘பொன் மொழிகள்’. பெரியார் அனுமதியோடுதான் - இந்த நூலை அந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை பெரியாரே நீதிமன்றத்தில் கூறியுள்ளார். எனவே பெரியார் தனது காலத்திலேயே பிற நிறுவனங்கள் தமது நூலை வெளியிட அனுமதித் துள்ளார் என்பதும், தான் மட்டுமே வெளியிட கருத வில்லை என்பதும் தெளிவாகிறது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் பெரியார் மற்றொரு கருத்தையும் கூறினார்:

“‘பொன்மொழிகள்’ நூலில் இடம் பெற் றுள்ளவை பொறுக்கி எடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டவை. அதிலுள்ள வாசகங்கள் நுணுக்கமாகப் படித்துப் பார்த்து கவலை கொள்ளவில்லை. அவைகள் என்னால் எழுதப்பட்ட, பேசப்பட்டவை தானா என்பதும் எனக்குத் தெரியாது. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அவைகள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் என்னால் சொல்ல முடியாது” என்று நீதிமன்றத்தில் கூறிய பெரியார், இப்படி பொறுக்கி எடுத்து தொகுக்கப்பட்டதால் - இப்போது, அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்பதை இவ்வாறு கூறுகிறார்: “பெரும்பாலும் அவைகள் அக்காலங்களில் பயிற்சியில்லாத இளைஞர்களால் நெட்டெழுத்திலே எழுதப்பட்டவைகள். மேலும் அவைகள் வெளியிடு பவர்களின் கருத்துக்கேற்றபடி வெளியிட்டிருக்க லாம். எனவே அவைகளிலிருந்து தொகுக்கப் பட்ட இத் தொகுப்பு நான் அன்று என்ன கருத்துடன் சொல்லியிருப்பேனோ அதைக் கொண்டிருக்க முடியாது” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் - எந்த சமூகப் பின்னணியில் எத்தகைய அரசியல் சூழலில் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குத் தான் காலவரிசைத் தொகுப்பு வரவேண்டும் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது. காலச் சூழல் - சமூக அரசியல் பின்னணியிலிருந்து துண்டித்து, கருத்து களை மட்டும் தலைப்பு வாரியாக பிரித்து வெளி யிடுவது சரியான புரிதலுக்கு இட்டுச் செல்லாது என்பதையே பெரியாரின் இந்த நீதிமன்ற வாக்கு மூலமே சான்றாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. “அன்று என்ன கருத்துடன் சொல்லியிருப்பேனோ” என்று பெரியார் கூறியிருப்பதுதான் இங்கே ஆழமாகக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். பெரியார் கூறுவதற்காவது மதிப்பளித்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் கட்டுரையாளர்களுக்கு பதிலாக முன் வைக்க விரும்புகிறோம்.

கால்பந்து விளையாட்டில் - பந்தை விட்டுவிட்டு விளையாடுகிறவர் காலை உதைப்பது போல் எஸ்.வி. ராஜதுரை அவர்களையும், அவரோடு துணையாசிரியராக இருந்தது பெரியாரியம் பற்றிய ஆழமான தமிழ் ஆங்கில நூல்களை வெளியிட்டவருமான வ.கீதாவையும், மிகவும் கீழ்த்தரமாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வ. கீதா - எஸ்.வி. ராஜதுரையின் ‘பார்ப்பனத் தோழி’யாம்! தரம்தாழ்ந்த எழுத்து! வ.கீதா பிறப்பால் பார்ப்பனர் தான்; ஆனாலும் பெரியாரியல்வாதி. பெரியாரியலுக்கு மகத்தான பங்களிப்புகளை அறிவுத்தளத்தில் வழங்கியவர். (தோழர் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதாவின் பெரியாரியல் பங்களிப்பு குறித்து தோழர் ஒருவர் எழுதியதை 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்) - பெரியாரியலுக்கு இவர்கள் வழங்கிய பங்களிப்பில் ஒரு சிறு அளவாவது கி.வீரமணி அறிவு தளத்தில் வழங்கியது உண்டா?

“நான் ஒரு பாப்பாத்தி தான்” என்று சட்ட மன்றத்தில் ஆணவத்தோடு அறிவித்து, இந்து பார்ப்பனிய கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட, ஜெயலலிதாவை ‘சமூகநீதி காத்த வீராங்கனையாக்கி’ 12 ஆண்டு காலம் தோளில் சுமந்து திரிந்தவர்கள், பெரியாரியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனரைக் குறை கூறத் தகுதி உண்டா? கலைஞர் கருணாநிதிக்கும் வீரமணிக்கும் ‘வழக்கறிஞராக’ நின்று கட்டுரை எழுதும் சின்னக் குத்தூசி யார்? அவரும் ஒரு பார்ப்பனர் தானே? அவரது ‘முரசொலி’ கட்டுரைகளை ‘விடுதலை’ வெளியிடுகிறதே! ஆந்திர நாத்திகர் கோரா - பார்ப்பனர் தானே? அவரை பெரியார் திடலுக்கு அழைக்கவில்லையா? இப் போதும் அவரது மகன் நடத்தும் நாத்திகர் மாநாடுகளுக்கு - வீரமணி போவதில்லையா? ‘நக்கீரன்’ வார ஏட்டில் “இந்து மதம் எங்கே போகிறது?” என்று அக்னிஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரி எழுதி வந்த கட்டுரையை வாரம் தவறாமல் ‘விடுதலை’யும் வெளியிட வில்லையா? தாத்தாச்சாரியார் - என்ன “சூத்திரரா”?

பெரியார் நூல்களைப் பரப்புவது பற்றி, “யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறுகிறது. மின்சாரத்தின் கட்டுரைத் தலைப்பு; தி.மு.க. கூட்டணியில் ‘கலைஞரின் இதயத்தில் சீட்டு’ வாங்கிக் கொண்டு சோனியாவின் தூதுவர்களாக புறப்படும் “தன்மானத் தமிழர் தலைவர்களுக்கும்” அவரது அரசவை பாராட்டுரையாளர்களுக்கும் வேண்டுமானால் பெரியார் நூல்கள் சிந்தனைகள் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான பெரியாரியல்வாதிகள் கவலைப்படத்தான் செய்வார்கள். முனை மழுங்கிய வாதங்களை எழுப்பிப் பயன் இல்லை.

வேதங்களைப் பார்ப்பனர்கள் அச்சில் ஏற்றாமல், தங்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து வைத் தார்கள். எனவே அதற்கு ‘மறை’ என்று பெயர் சூட்டப்பட்டது. மக்களிடம் வேதத்தை கொண்டு செல்ல பார்ப்பனர்கள் மறுத்த காரணம் - அது தங்களின் சுரண்டும் உடைமை என்பதால் தான். வேத எதிர்ப்பாளரான பெரியாரின் சிந்தனைகளை தங் களுக்குள் முடக்கிட துடிப்பதும்கூட பார்ப்பனியம் தான். பெரியாரியம் பார்ப்பனர் சுரண்டலுக்கான வேதம் அல்ல; பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைப் பெட்டகம்; அது மக்களிடம் தான் வரவேண்டும்! மின்சாரங்கள் பெரியாரியலை ‘வேத’மாக்க முயல வேண்டாம்.

- இராவணன்