இ.சி.ஆர் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரை சாலை சென்னை மக்களின் பெருமையாக முன்னிறுத்தப்படுகிறது. சென்னையின் மேல் நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள்  விடுமுறையைக்  கழிக்க செல்லும் இடமாக இது மாறியிருக்கிறது. ஒரு சிலருக்கு புத்தாண்டு கொண்டாட செல்லும் இடம், மேலும் சிலர் அலுவலகங்களும் பெரிய வீடுகளும் கட்ட ஏற்ற இடம் என்று நினைக்கிறார்கள். அந்தப் பகுதிக்கு உள்ள பணமதிப்பு காரணமாக அங்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டுமென்று சிலர் நினைக்கிறார்கள், அதற்காக எதைச் செய்யவும் துணிகிறார்கள். எல்லாம் இருக்கட்டும். நமக்கும் அந்த இடத்துக்கும் ஏதாவது முக்கிய தொடர்பு இருக்கிறதா? உண்மையில் அந்த இடம் நமக்கெல்லாம் எப்படி உதவிக் கொண்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்திருப்போமா.

நாம் சாப்பிடும் காய்கறிகளும் தானியங்களும் இங்குதான் பயிர் செய்யப்படுகின்றன. ஆனால் அது இன்னும் எத்தனை நாளுக்கு நடக்கும் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது. சென்னையில் குவியும் மக்கள், அவர்கள் நாள்தோறும் விரயம் செய்யும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதால், சென்னையின் தண்ணீர்த் தேவை மற்ற இடங்களைவிட பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இதனால் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் புதிதாக ஒரு வியாபாரம் உருவாகி உள்ளது. சென்னையின் செயற்கை தண்ணீர் பஞ்சத்தை காரணமாக வைத்து, சில தனியார் நிறுவனங்கள் இந்த கிராமங்களில் பயிர் வளர்க்க பயன்படுத்தப்படும் தண்ணீரை உறிஞ்சி, சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றன.

உதாரணத்துக்கு சேலையூர் ஏரியை எடுத்துகொள்வோம். அதை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்களுக்கு அதில் இருந்துதான் பாசனத்துக்கான தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் இந்த ஏரியை தனியார் நிறுவனங்கள் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இது ஒரு உதாரணம் மட்டுமே.

விவசாயத்துக்கான தண்ணீரையும், கிராம மக்களுக்கான குடிநீரையும் சுரண்டுவதுடன், அதை மிக அதிக விலையில் விற்பனை செய்து கோடி கணக்கில் லாபம் ஈட்டுகின்றன இந்த  தனியார் நிறுவனங்கள். பொதுச்சொத்தான தண்ணீரை விற்பனைக்கு எடுப்பதை தடுப்பதற்காக அரசு ஒரு புதிய சட்டம் இயற்றி  உள்ளது. ஆனால் அதில் வழங்கப்படும் தண்டனை குறைவாக இருப்பதால் இந்த சட்டத்தால் பெரிய பிரயோஜனம் இல்லை. மீறி கைது செய்யப்பட்டாலும், உரிமையாளர்களுக்கு பதிலாக சாதாரண ஊழியர்களே தண்டிக்கப்படுகிறார்கள்.

மற்றொரு பக்கம் இந்த தண்ணீர் சுரண்டலின் எதிர்விளைவுகள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்தப் பகுதிக்கு மிக அருகே கடல்  இருப்பதால், நிலத்தடி நீருடன் கடல்நீர் கலக்க ஆரம்பித்துவிட்டது. இப்பொழுதும்கூட அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நின்றபாடில்லை. மிச்சம் உள்ள கொஞ்சநஞ்ச தண்ணீரையும் அவை எடுத்துகொண்டிருக்கின்றன.

இந்த கொள்ளையை அங்குள்ள விவசாயிகள்கூட உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான் இதில் பெரும்சோகம். விவசாய செலவுகள் உயர்ந்துவிட்டன, தொடர்ந்து கடன் வாங்கி விவசாயம் பார்க்க இயலாத சூழலில் விவசாயிகள் உள்ளனர். இவற்றைச் சமாளிக்க முடியாத அளவுக்கு விவசாயத்தில் வருமானம் குறைந்து, விலைவாசியும் ஏறிவிட்டதால் வறுமை அவர்களை நெருக்குகிறது. வேறு வழியின்றி தங்கள் கிணறுகள், நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சொற்பத் தொகைக்கு விற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தங்களிடம் உள்ள தண்ணீர் தீர்ந்தவுடன் நிலத்தையும் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, சென்னைக்கு கூலி வேலை தேடி வந்துவிடுகிறார்கள் இந்த விவசாயிகள். கட்டியிருந்த கோவணமும் பிடுங்கப்பட்ட நிலைதான் அவர்களுடையது. இந்த தண்ணீர் வியாபாரம் தொடரும் பட்சத்தில் சுற்றி இருக்கும் கிராமங்களில் விவசாயம் செய்வதறகு ஒரு சொட்டு  தண்ணீர்கூட இருக்கப்போவதில்லை.

இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏனென்றால், 2021ஆம் ஆண்டில் சென்னையின் மக்கள்தொகை ஒரு கோடியை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.  அதனால் தண்ணீருக்கான தேவை இன்னும் மோசமாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னைக்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 12,000  லட்சம்  லிட்டர்  தண்ணீர் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் பல பிரச்சினைகள் உருவாகலாம்.

ஆனால் எல்லாமே முடிந்து போய்விட்டது என்று அர்த்தமல்ல. அதிவேகமாக அழிந்து வரும் விவசாய நிலங்களைக் காப்பாற்றி, அந்த நிலங்களின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு காலங்களைக் கடந்த பாரம்பரிய முறைகளை பயன்படுத்த வேண்டும். விவசாயிகளின் உரிமையை காப்பதற்கு அரசு சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சட்டத்தை மீறி தண்ணீரை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். சென்னையை சுற்றி இருக்கும் மிகப் பெரும் நீர்நிலைகளான பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களை குப்பை தொட்டியாக பயன்படுத்தவதை தடுத்து நிறுத்தி, அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கும் நமக்கும் தேவையான தண்ணீரை காப்பற்ற வேண்டும்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நம் மரணத்துக்கு நாமே காரணம் ஆகிவிடுவோம். ஒரு விஷயத்தை கடைசியாக யோசிப்போம், வாழ்க்கையின் எந்த கட்டத்திலாவது நம்மால் பணத்தை சாப்பிடமுடியுமா?

Pin It