முதுபெரும் பெரியார் தொண்டர் நாகை எஸ்.எஸ். பாட்சா, தமது 82 ஆம் வயதில் 17.8.2010 அன்று காலை 6.30 மணியளவில் நாகையிலுள்ள வெங்கடேசுவரா மருத்துவமனையில் முடிவெய்தினார். பெரியார் வாழ்ந்த காலத்தில், பெரியார் இயக்கத்தின் கோட்டையாக விளங்கிய நாகை திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தை, முழுப் பெறுப்பேற்று வழி நடத்தியவர். பெரியாரியல் சிந்தனை யாளராகவும், பெரியார் காலத்தில் சிறந்த பேச்சாளராகவும், களப்பணியாளராகவும் செயல்பட்டவர் தோழர் பாட்சா. தந்தை பெரியார் நடத்திய 3மாத பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சிப் பெற்றார். சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் 9 மாத சிறைத் தண்டனை பெற்றவர். அவருக்கு ரூசோ, சாக்ரடிஸ், யூரி ஜாகரின் என்ற மூன்று மகன்களும், வாலண்டினா என்ற மகளும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள். 

பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும், பெரியாரின் கொள்கைகளை ஏற்று ஒரு நாத்திகராகவே வாழ்ந்தார். இஸ்லாம் மார்க்கத்துக்கு அழைத்தவர்களிடம், பிற மார்க்கங்களில் தலையிடுவதை நபிகளே கூடாது என்று கூறும்போது நீங்கள், என்னை கட்டாயப்படுத்தக் கூடாது. என்னுடைய மார்க்கம் பெரியார் மார்க்கம் என்று ஆணித்தரமாக பதிலளித்து வந்தார். 2007 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி, பெரியார் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். (அவரது உரை அடுத்த இதழில் வெளிவரும்) முடிவெய்திய செய்தி அறிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயாளர் விடுதலை இராசேந்திரன், தாமரைக்கண்ணன், இராவணன் மற்றும் கழகத்தினரோடு அவரது நாகை இல்லம் சென்று கடந்த 22ஆம் தேதி   குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பெரியாருக்குப் பிறகு கி.வீரமணியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த தோழர் எஸ்.எஸ். பாட்சா, கி.வீரமணி தலைமையிலிருந்து வெளியேறி, மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு தலைமையில் இணைந்து செயல்பட்டு வந்தார். பெரியார் கொள்கைப் படையின் தளபதியாக செயல்பட்ட ஒரு கொள்கை வீரரின் மறைவுக்கு பெரியார் திராவிடர் கழகம், வீர வணக்கத்தை உரித்தாக்குகிறது.