‘திருவாளர் 15 லட்சம்’ (கி.வீரமணி) நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தமிழில் உருவாக்கிய ‘பெரியார்’ படம், இப்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான அனுமதியை ‘திருவாளர் 15 லட்சம்’ நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’தான் வழங்கியிருக்கிறது.

தெலுங்கில் ‘பெரியார்’ படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?“பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்”

‘விடுதலை’ நாளேட்டிலேயே - தெலுங்கு மொழியில் - இந்தத் தலைப்பை அவர்களே படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியில் ‘பெரியார்’ படம் என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, சாதி ‘வாலை’ யும் ஒட்ட வைத்து பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளதை மறைத்து விட்டார்கள்.

இந்த தெலுங்கு படத்தின் அறிமுக விழா வுக்கு, ‘திருவாளர் 15 லட்சமும்’ கலந்து கொள்கிறாராம். சரி; இப்போது ‘விடுதலை’க்கு ஒரு கேள்வி! பெரியார் நூல்களை தங்களைத் தவிர வேறு எவரும் வெளியிடக் கூடாது என்று - நீதிமன்றம் வரை போய் மூக்குடை பட்டு நிற்கும் இவர்கள், அதற்காக முன் வைத்த வலிமையான வாதம் என்ன தெரியுமா? சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு நிறுவனம், ‘தமிழர் தலைவர்’ என்ற பெயரை மாற்றி ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் சூட்டிவிட்டதாம்! வெளியீட்டு உரிமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தால், வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புக்காகப் போராடிய பெரியார் பெயருக்குப் பின்னால், இப்படி சாதி போடுகிற கேவலம் நடந்திருக்குமா, என்று ‘விடுதலை’ கேட்டது!

அப்படி எழுதிய “பத்தரை மாற்றுக் கொள்கைத் தங்கங்கள்” தான் இப்போது தங்கள் உரிமைகளின் கீழ் உள்ள பெரியார் படத்தை ஆந்திர சந்தையில் விற்று காசாக்க - பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் மாற்ற அனுமதித்திருக்கிறார்கள். ‘விடுதலை’ எழுத்தாளர்களே! இதற்கு என்ன பதிலை கூறப் போகிறீர்கள்?

“ஆந்திராவில், ‘நாயக்கர்’ என்று போட்டால் தானே படத்தை ஓட்ட முடியும். அந்த சூட்சமத்தைப் புரிந்த காரணத்தால்தான் தமிழர் தலைவர், இப்படி அருமையான முடிவை எடுத்திருக்கிறார்கள்! இது தமிழர் தலைவரைத் தவிர வேறு எவரால் முடியும்?” என்று விளக்கவுரை எழுதுவீர்களோ? அய்யோ பாவம்!