2010 ஆம் ஆண்டுக்கான இந்திய திரைப்படங்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழாவை ஜூன் 3, 4, 5 தேதிகளில் இனப் படுகொலை தலைநகரான கொழும்பில் நடத்துவதற்கு இந்தி திரைப்படத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு விழாக் குழுவின் விளம்பரத் தூதுவராக நடிகர் அமிதாப்பச்சான் பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் இந்த விழா பற்றிய ஏற்பாடுகளுக்காக இனப் படுகொலையாளன் இராஜபக்சேயின் விருந்தினராக கொழும்புச் சென்று அங்கே அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்தினராகத் தங்கியுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. விழா நடைபெறும் நாட்டை இந்தியாவின் வெளியுறவுத் துறையினர் இந்தியாவின் சர்வதேச உறவுகளை முன் வைத்து முடிவெடுக்கிறார்கள். இதன்படி இவ்வாண்டு இந்த விழாவை முதலில் தென்கொரியா நாட்டில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் தென் கொரிய அதிபரின் பிரதிநிதி இந்தியா வந்திருந்தபோது இந்த முடிவு எடுக்கப் பட்டது. கடைசி நேரத்தில் இந்திய ஆட்சியின் உயர் மட்டத்தில் இந்த விழாவை கொழும்பு நகரில் நடத்த முடிவு செய்தனர். இலங்கையில் இராஜ பக்சே தமிழர் போராட்டத்தை ஒடுக்கி, அமைதி தவழும் ஆட்சியை நடத்துவதாக உலக நாடுகளை நம்பச் செய்வதற்கும், இராஜபக்சே போர்க் குற்றவாளியே என்ற குற்றச்சாட்டு உலகநாடுகளில் வலிமையடைந்து வருவதை திசை திருப்புவதற்கும் இந்தியாவின் ஆட்சியாளர்கள், இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். 

தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் “அபிவிருத்தி திட்டங்களை” நிறைவேற்றுவதற்கான வர்த்தகத்துக்கு இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கான வாய்ப்புக் கதவுகளைத் திறந்து விடுவதற்கும், இந்த சதித் திட்டம் அரங்கேறவுள்ளது. 

•                     அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரித்து, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது இலங்கை அரசு என்று அறிவித்துள்ளது. 

•                     இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அய்ரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு ஏற்றுமதிக்காக வழங்கி வந்த வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி - பிளஸ் வரிச் சலுகை) ரத்து செய்துவிட்டன. 

•                     இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான ஆலோசகர் பதவியை ஏற்குமாறு ராஜபக்சே இந்தியாவின் ‘இன்போசிஸ்’ நிறுவனத் தலைவரான என்.ஆர்.நாராயணமூர்த்தி எனும் பார்ப்பனரைக் கேட்டுக் கொண்டார். அங்கே ராணுவம் நடத்திய தாக்குதல்களால் நாராயண மூர்த்தியே கடந்த 2009 ஆம் ஆண்டு, பிப். 18 ஆம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார். 

•                     அதேபோல் இந்தியாவின் விவசாய விஞ்ஞானியாக பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனரான எம்.எஸ். சாமிநாதன்கூட, வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ‘பசுமைத் திட்டங்களை’ உருவாக்கிட இலங்கை அரசு விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டார். 

இப்படி மனிதநேயமற்ற பார்ப்பனர்கள்கூட இலங்கை அரசோடு தங்களைத் தொடர்புபடுத்திடத் தயங்கி நிற்கும்போது இந்தியாவின் இந்தித் திரைப்படத் துறை வெளியுறவு அமைச்சரும் இலங்கை அரசும் இணைந்து நடத்தும் கூட்டுச் சதித் திட்டத்தை நிறைவேற்ற மகிழ்ச்சியுடன் முன் வந்திருக்கிறது. 

இத் திட்டத்தின்படி கொழும்பு நகரில் ‘சர்வதேச ஆடை அணி வகுப்புக் காட்சி’ (ஃபேஷன் ஷோ), இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் ஒரு நாள் வர்த்தகக் கூட்டம் டி.20 கிரிக்கெட் விளையாட்டு, நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவற்றோடு பார்ப்பன இயக்குனர் மணிரத்தினம் தயாரித்துள்ள ‘இராவணன்’ திரைப்படமும் திரையிடப்பட இருக்கிறது. இப்போது தமது திரைப்படம் கொழும்பில் திரையிடப்படப் போவதில்லை என்று இயக்குனர் மணிரத்தினம் அறிவித்துள்ளார். இப்படிப்பட்ட அறிவிப்புகளால் இந்த நிகழ்வுக்கு தமிழர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகளை அடக்கி, முனை மழுங்கச் செய்யலாம் என்ற உள்நோக்கத்துடனேயே இத்தகைய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், இந்தித் திரைப்படத் துறையினரும், இந்தியத் தொழில் முதலாளிகளும், டெல்லி ஆட்சியும், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது நடத்தும் கொழும்பு திரைப்படத் திருவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை மெமோரியல் ஹால் அருகே கடந்த மே 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்கள் நடத்தும் ‘தமிழரைக் காப்போம்’ என்ற அமைப்பு, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

கழக சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று, இந்திய அரசையும், இந்தி திரைப்பட உலகினரையும் கண்டித்து விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். தமிழ்த்  தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, கவிஞர் தாமரை, திரைப்பட இயக்குனர்கள் ராம், கவுதமன், பொறியாளர் செந்தில் உள்ளிட்ட பலரும் பேசினர். காலை 10 மணிக்கு தொடங்கி, ஆர்ப்பாட்டம் ஒரு மணி வரை கொளுத்தும் வெயிலில் நடந்தது. சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தாதே; யுத்த குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசே இந்தித் திரையுலகமே துணை போகாதே! திரைப்படக் கலைஞர்களே! விருது வழங்கும் விழாவைப் புறக்கணியுங்கள்! என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.