சாதி, தீண்டாமைக்கு எதிராக கொளுத்தும் வெயிலில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு வாரங்கள் நிறைவடைந்து, மூன்றாவது வாரத்தில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூகத்தின் மிகப் பெரும் நோய் சாதியும், அந்த அமைப்பு பிரிக்க முடியாத இரும்புச் சங்கிலியாய் பிணைத்து வைத்துள்ள தீண்டாமை ஒடுக்குமுறையுமாகும். இங்கே ஏழை, பணக்கார வர்க்கங்களைக்கூட தீர்மானிக்கும் சக்தியாக சாதியமைப்பே இருக்கிறது. அண்மையில் இந்தியா முழுதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், இந்தக் கருத்தையே உறுதிப்படுத்துகிறது. (The Human Development in India: Chellenges for a Society in Transition) குடும்பத்தின் வருமானம், நிலம், விவசாய வருமானம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட இந்த ஆய்வில், பல்வேறு சமூகக் குழுக்களிடையே உள்ள வேறுபாடுகள் கணக்கிடப்பட்டன. வாழ்வாதாரங்கள் கிடைப்பதற்கும், சாதிக்கும் இடையே உள்ள தொடர்புகளை இந்த ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மிகவும் கீழ்நிலையிலே ஆதிவாசிகளும், தலித்துகளும் மிகவும் முன்னேறிய நிலையிலே முன்னேறிய பிரிவு சாதி மற்றும் மைனாரிட்டிப் பிரிவினரும், இடைப்பட்ட நிலையிலே பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் முஸ்லீம்களும் உள்ளதாக ஆய்வு உறுதி செய்கிறது. எனவே வர்க்க ஏற்றத் தாழ்வுகளுக்கே சாதியே அடிப்படையாக இருப்பதை இந்த ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது.

சாதியமைப்பை இந்தியாவில் பார்ப்பனிய பனியா ஆதிக்கத்தைப் பேணும் இந்திய அரசு கட்டிக்காத்து வருவதோடு, அதை ஒழிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறி, அங்கு வளமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்கள்கூட சாதியைக் கைவிடவில்லை. இதனால், சாதியம் என்ற பார்ப்பனியம், உலக நோயாக பரவிக் கிடக்கிறது. பிரிட்டனில் இன வேறுபாடுகளைத் தடுப்பதற்காக சமத்துவச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது. பிரிட்டனில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் பார்ப்பனர் மற்றும் உயர்சாதி இந்துக்கள், சாதியைப் பிடிவாதமாக பின்பற்றி வருவதால் இந்தச் சட்டத்தில் சாதி பாகுபாட்டையும் இணைக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

இது பற்றி பிரிட்டனில், மனித உரிமை ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டாலும், அப்படி கருத்து ஏதும் கேட்கப்படவில்லை. பிரிட்டனிலுள்ள பார்ப்பன உயர்சாதியினர், இந்தச் சட்டத்தில் சாதியைச் சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்திய காரணத்தினால், அவர்களின் கருத்துதான் பிரிட்டினில் வாழும் இந்தியர்கள் கருத்தாகவே கருதி, பிரிட்டிஷ் அரசும் பார்ப்பனியத்துக்கு அடிபணிந்து விட்டது. பிரிட்டன், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தின் இளைய சமூகத்தினர், சாதி விட்டு காதலித்து திருமணம் செய்ய விரும்பியபோது அதைத் தடுத்து வருவதாகவே செய்திகள் வருகின்றன. (ஏப். 18 இல் ‘இந்து’ நாளேட்டில் இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை பிரிட்டனிலிருந்து அரவிந்த் சிவராமகிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார்).

சாதி இந்தியாவில் மட்டுமே இருந்த நிலை மாறி, வெளிநாடுகளுக்கு பார்ப்பன உயர்சாதியினரும் அந்த பாகுபாட்டை தூக்கிக் கொண்டு போய்விட்டதால், சாதி, இப்போது இந்தியாவையும் தாண்டிய பிரச்சினையாகி விட்டது. அய்.நா.வின் மனித உரிமைக்கான ஆணையாளராக இருப்பவர் தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழரான நவநீதம் (பிள்ளை) எனும் பெண். அவர் உலகம் முழுதும் 260 மில்லியன் மக்களிடம் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. இதில் 170 மில்லியன் மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் நடந்த அய்.நா.வின் இனவெறி எதிர்ப்பு மாநாட்டில், இந்தியாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட சாதிஒழிப்பு அமைப்புகள் டர்பன் சென்று சாதியையும், இனப் பாகுபாடாகக் கருத வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். (அதில் பெரியார் திராவிடர் கழகமும் பங்கேற்று இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது) இந்தியா இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் அய்.நா.வும் ஏற்கவில்லை.

மீண்டும் அய்.நாவின் மனித உரிமை ஆணையம் 2010-11 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை செயல்பாடுகளுக்கான திட்டங்கள் பற்றி ஆய்வறிக்கை ஒன்றை தயார் செய்தது. அதில் சாதி பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருந்ததை இந்தியா ஏற்கவில்லை. சாதியை அய்.நா. தனது ஆவணத்தில் கொண்டு வரவே கூடாது என்று ஜெனிவாவில் உள்ள (ஜெனிவாவிலும், நியுயார்க்கில் உள்ளதுபோல் அய்.நா. அலுவலகம் செயல்படுகிறது) இந்திய அலுவலகத்துக்கு டெல்லியிலிருந்து கட்டளைகள் பறந்தன. திட்டமிட்டு அய்.நா.வின்160 பக்க ஆவணத்தில் சாதியும், இனப் பாகுபாடே என்ற கருத்து முற்றாக புறந்தள்ளப்பட்டுவிட்டது. 160 பக்க ஆவணத்தில் 3இடங்களில் மட்டுமே சாதி என்ற பெயர் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவுதான். நேபாளத்தில் மட்டும் சாதி மிகக் கடுமையாக உள்ளதாக அய்.நா.வின் செயல்திட்ட ஆவணம் குறிப்பிடுகிறது.

இந்தியாவின் பார்ப்பன ஆட்சி, இப்படி ஒரு நிலை எடுத்திருந்தாலும், நேபாளத்தில், இப்போது நடக்கும் இடதுசாரிகள் கட்சி, சாதி வேறுபாட்டையும், இனவேறுபாட்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்றும், எனவே நேபாளத்தில் சாதிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்.நா.வுடன், இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நேபாளத்தின் இந்த அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறோம். நேபாளத்தில் 2007 ஆம் ஆண்டு வரை இந்து அரசே அதிகாரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும், இந்தியாவின் பார்ப்பன ஆட்சி, இங்கேயும் சாதியமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, உலகில் பரவி நிற்கும் சாதியமைப்பையும் கட்டிக் காப்பதற்கு, அய்.நாவின் தலையீட்டிலிருந்து சாதிக் கொடுமையை ஒதுக்கி வைப்பதற்கான, அத்தனை தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆட்சிகள் மாறினாலும்,ஆளும் பார்ப்பனர்களிடம் தங்கியுள்ள அதிகாரங்கள் மட்டும் மாறாமல், அப்படியே நீடிப்பதை உணர முடியும். சாதியால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி வழங்க இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டால், “சாதியைப் பார்க்கிறார்களே?” என்று கூச்சல் போடும் பார்ப்பனர்கள், வேறு நாடுகளுக்குப் போனாலும் சாதியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதையும் அய்.நா.வின் தலையீட்டைத் தடுப்பதையும் கவனித்தால் சாதி, சமூக ஒடுக்குமுறையாளர்களின் வலிமையான ஆயுதமாக விளங்குவதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில்தான் தமிழகத்தில் வேறு எந்த அமைப்பும் செய்ய முன்வராத கசப்பான தொண்டை சமூகத்தின் நோய் தீர்க்க பெரியார் திராவிடர் கழகம் தன்மேல் சுமந்து கொண்டு செய்து வருகிறது.

சாதி - தீண்டாமைக் கொடுமைகளை மக்கள் மன்றத்தில் விளக்கி, விழிப்புணர்வூட்டும் இந்தத் தொண்டு மகத்தானது; பாராட்டத்தக்கது. எதிர்கால சாதி ஒழிப்பின் சரித்திரப் பக்கங்களில் இந்தப் பயணங்களின் பதிவுகளை மறைக்க முடியாது; பெரியார் தொண்டர்களின் பயணம் தொடரட்டும்!