கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், எப்போதும் தயார் நிலையில் இருக்கும் போர்ப்படை! எந்த ஒரு பிரச்சினையானாலும் சில மணி நேர அறிவிப்புக்குள்ளே ஆர்ப்பாட்டத்துக்கும் மறியலுக்கும் தயாராகி விடுவது அவர்களின் தனித்துவமான போர்க் குணம்.

கோவை மாநகரில் தமிழர்கள் உரிமைகளுக்காக முதல் போர்க்குரல் பெரியார் திராவிடர் கழகத்திடமிருந்துதான் ஒலிக்கும். மலையாளிகள் கோரப் பிடியில் சிக்கித் தவித்த ரயில்வே பிரிவை மீட்டு, சேலம் கோட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய பெருமை கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்துக்கே உண்டு. பின்னர், அனைத்துக் கட்சிகளும் இந்த நியாயமான உரிமைப் போராட்டத்துக்கு வரச் செய்ததே பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தொடர் போராட்டங்கள் தான்.

கழகத்தின் பொதுச்செயலாளர் செயலூக்கி கோவை இராமகிருட்டிணன் வழிகாட்டுதலில் இயங்கிக் கொண்டிருக்கும் இதே கழகச் செயல் வீரர்கள்தான் அவரது தலைமையில் வாகனத்தையே மறித்து, ஈழப் போராட்டத்தின் வரலாற்றில் கழகத்தின் போர்க் குணத்தை உலகுக்கே வெளிச்சப்படுத்தியவர்கள்.

மக்களை ஈர்க்கும் போராட்ட வடிவங்களைத் தேர்வு செய்வதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். தமிழ்நாடு முழுதும் அம்பேத்கர் பிறந்த நாளை வழமைபோல் சிலைகளுக்கு மாலை போட்டு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இவர்கள் மட்டும் அதை ஒரு முக்கிய கோரிக்கைக்கான போராட்ட வடிவமாக்கினர். அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடாமல் அலட்சியப்படுத்தும் மத்திய அரசுக்கான போராட்டமாக அம்பேத்கர் உருவத்தை முகமாக்கி அணிந்து போராடினார்கள்.

இதுதான் கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம்; போராட்டம் பற்றிய செய்தி இதோ! மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் நடிகர் மம்முட்டி நடித்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற “பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்” திரைப்படத்தை 12 ஆண்டுகளாக திரையரங்குகளில் திரையிடாமல் மத்திய அரசு முடக்கி வைத்திருப்பதைக் கண்டித்து உடனடியாக திரையிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோவையில் 13.4.2010 அன்று கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டினன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் அம்பேத்கர் உருவ முகமூடி அணிந்து பங்கேற்றனர்.

பங்கேற்ற அமைப்பினர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர் வழக்கறிஞர் வெண்மணி, மூத்த வழக்கறிஞர் சி. முருகேசன், அருந்தமிழர் விடுதலை இயக்க இளவேனில், நாம் தமிழர் இயக்க வழக்கறிஞர் ஆனந்தராசு மற்றும் கவிஞர் ரகுபதி, ஆதித் தமிழர் பேரவை மற்றும் விடுதலைச் சிறுத்தையினரும் பங்கேற்றனர். கழக மாநகர செயலாளர் வே. கோபால், அலுவலக பொறுப் பாளர் சா. கதிரவன், மாநகர அமைப்பாளர் இ.மு.சாஜித், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம், கலங்கல் வேலு, து.இராமசாமி, ரஞ்சித் பிரபு,நிர்மல்குமார், தம்பு, நாகராசு, தமிழரசன் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.