திராவிடர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்த ‘சிந்து சமவெளி’ தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப் பட்டன. கடவுளே கோபம் கொண்டு அந்தப் பகுதியை அழிதது விட்டதாக புரளிகள் பார்ப்பனர் களால் கிளப்பப்பட்டன. சிந்து சமவெளி அழிக்கப் பட்டது எப்படி? 

“இந்தியாவில் ஒன்றும் இல்லை. இந்தியாவுக்கு என்று பழங்கால சரித்திரமோ, பாரம்பரியமோ வரலாறோ கிடையாது. கி.மு. 1000 இல் ஆரியர்கள் பிரவேசம் செய்த பிறகுதான் இந்தியாவில் நாகரிகம் என்ற ஒன்று மிளிரவே ஆரம்பித்தது. அதன் பின் தான் நகரங்கள் தோன்றின. அப்படி முதலில் தோன்றிய நகரம் அசோகரின் தலைநகரமாக விளங்கிய பாட்னா என்ற பாடலிபுத்திரம்” என்று உலக சரித்திர ஆராய்ச்சி யாளர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். 

ஆனால், 1921 இல் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இந்திய தொல்லியல் ஆய்வில் பணியாற்றி வந்த தாஸ் பானர்ஜி என்ற அதிகாரி, சிந்து சமவெளியில் கி.பி. 200 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு புத்தமத ஸ்தூபியை ஆராய்ந்து கொண்டிருந்தார். அருகே எதேச்சையாக தோண்டிய போது சில படிக்கட்டுகள் தெரிந்தன. அனுபவம் நிறைந்த பானர்ஜியின் நாடித் துடிப்புகள் அதிகமாயின. மேலும் ஆர்வத்துடன் தோண்டத் தோண்ட அவர் கண் முன்னே அற்புதமான ஒரு நகரம் தோன்றியது. உலகையே ஆச்சரியத்தில் நிமிர்ந்து உட்கார வைத்தது. 

பாபிலோனியா, எகிப்துக்கு இணையாக இந்தியா வும் பண்டைய நாகரிகத்தில் கொடி கட்டிப் பறந்த நாடு என்கிற தகவல் பரவிய உடனே, உலகின் பல பகுதி களிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பரபரப்போடு இந்திய வடமேற்கு பகுதிக்கு வந்து குவிந்தார்கள். 

பானர்ஜி வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளியில் சந்தேகத்தை எழுப்பக்கூடிய சில மேடுகளும், இடிபாடுகளும் இருப்பது பற்றி ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்புகள் எழுதி வைத்தார்கள். 1826 இல் அங்கு வந்த சார்லஜ் மேஸன் என்ற இராணுவ அதிகாரி, ‘இந்தப் பகுதியில் பூமிக்கடி யில் கோட்டைகள்  இருப்பதாக தெரிகிறது’ என்று குறிப்பு எழுதினார்.

1831 இல் பிரிட்டிஷ் மன்னர் அனுப்பிய ஐந்து குதிரைகளை மகாராஜா ரஞ்சித் சிங்குக்கு பரிசாக கொடுப்பதற்காக அலெக்சாண்டர் பர்ன்ஸ் எனும் தூதர் பஞ்சாப் வந்தார். அப்படியே சிந்து சமவெளிக் கும் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அங்கு புதைந்துபோய் இருந்த சுவர்களையும், படிக்கட்டுகளை யும் பார்த்து, பர்னஸ் புருவங்களை உயர்த்தினார். பக்கத்து கிராமத்தில் இருந்த மக்களிடம் விசாரித்தார். “இங்கே பெரிய ராஜ்ஜியமே இருந்ததாம். அந்த ராஜா ஏதோ தப்பு பண்ணிட்டாராம். கடவுளுக்கு கோபம் வந்து, அந்த ஊரை அழிச்சிட்டதா எங்க கொள்ளு தாத்தாங்க காலத்தில் இருந்து சொல்வாங்க’ என்று கிராம மக்கள் கூறினார்கள். 

அதன்பின் அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டனர். கிராம மக்கள் அங்கிருந்த கற்களை எடுத்துக் கொண்டு சென்று வீடுகள் கட்டவும், சுவர்கள் எழுப்பவும் பயன்படுத்தினர். 1856 இல் பிரிட்டிஷ் நிர்வாகமும் அதே தவறை செய்தது. லாகூர் - முல்தான் பகுதிகளை இணைக்க ரெயில் பாதை அமைக்கப்பட்டபோது தண்டவாளத்துக்கு இடையில் போடுவதற்கு கற்கள் தேவைப்பட்டன. உடனே சிந்து சமவெளியில் வெளிப்பட்டிருந்த சுவர்களை உடைத்து கற்களை ரெயில் பாதையில் 100 மைல் தூரத்துக்குப் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் கூட லாகூர் - முல்தான் இரயில் பாதைதான் உலகின் மிகப் பழமையான ரெயில் பாதையாகும். 

இப்படியாக தொடக்கக் கால சிந்து சமவெளி அதன் பெருமை உணராமல் சுயநலத்துக்காக பயன் படுத்தப்பட்டது. அதன் பின்னரே அதன் மகத்துவம் தெரிந்தது.

- நன்றி: ‘இன்று ஒரு தகவல்’,  ‘தினத்தந்தி’, அக்.21