19.10.2010 செவ்வாய் மாலை 6 மணிக்கு, மதுரை மாவட்டம் அண்ணா நகர் நவீன் பேக்கரி அருகில், பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அ. பெரியசாமி தலைமையேற்றார். மாநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை சேகர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக தூத்துக்குடி பால். அறிவழகன், ‘மந்திரமா, தந்திரமா?’ நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்களின் மோசடிகளை விளக்கினார்.  இந்தப் பகுதியில் கழகத்தின் முதற் கூட்டமும், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் பெரியார் இயக்கக் கூட்டமும் இதுதான் எனக் குறிப்பிட்ட தோழர் தமிழ்பித்தன், கழகம் நடத்திய போராட்டங்களைப் பற்றி விளக்கமாக பேசினார். 

தொடர்ந்து தூத்துக்குடி பால். பிரபாகரன், பெரியார் கொள்கை என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்ல என்பதையும், ஏன் கடவுள் மறுப்பை பேசுகிறோம் என்பதை பற்றியும் விரிவாக உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமுதாய பிரச்சினை களையும், எந்தெந்த காலகட்டத்தில் எப்படிப்பட்ட நிலையை பெரியார் எடுத்தார் என்பதையும், அப்படிப்பட்ட பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க கழகம் செய்து வரும் பணிகள் பற்றியும் நீண்ட உரையாற்றினார். லேசான மழை பெய்த பொழுதும் இறுதி வரை பொது மக்கள் கவனமாக செய்திகளை கேட்டறிந்தனர். 

கருத்தரங்கம் 20.10.2010 புதன் அன்று மாலை 5 மணிக்கு மதுரை மகபூப்பாளையம், மீனாட்சி திருமண மண்டபத்தில், தமிழ்ப் புலிகள் அமைப்பின் சார்பாக, அம்பேத்கர் பார்வையில் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. புதிய புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இம்மானுவேல், பேரவை பொதுச் செயலாளர் பூ.சந்திர போசு, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறப்பினர் என் வரதராஜன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில் : 

“உள் இடஒதுக்கீடு என்று ஒன்று வந்தவுடன், ஏற்கனவே  தாங்கள் அனுபவித்து வந்த இடங்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தோடு, அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று சொல்லி, தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இது மிக நீண்டகாலமாக இடஒதுக்கீடு என்று துவங்கிய காலத்திலிருந்து ஆதிக்கச்சாதிகள் செய்து வருகிற வேலைதான். 1885 ஆம் ஆண்டு காங்கிரஸ் தொடங்கப் பட்டதன் நோக்கம் இந்திய அரசு பணிகளை இந்திய மயமாக்கு என்ற கோரிக்கையோடு தான் ஆங்கிலேயர்கள் அதை வழங்கினார்கள். ஆனால், இந்தியர்களுக்கு என்று வாங்கி அதை பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவித்தனர். இதை சில ஆண்டுகளுக்கு பின்னாள் தெரிந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டனர். அப்போதே உள் ஒதுக்கீடு தொடங்கி விட்டது. 

அதன் பின்னர் தான் பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை குறிப்பாக தென்னாட்டில் நீதிக்கட்சித் தலைவர்கள் வைத்தார்கள். அப்போது இந்துக்களை பிரிக்காதே. இந்துக்களுக்குள் பிளவு ஏற்பட்டு விடும் என்று சொல்லப்பட்ட போது, சென்னை மாகாணத்தில் மக்களை எட்டுப் பிரிவாக பிரிக்கிறார்கள். இஸ்லாமியன், கிருத்துவன், ஐரோப்பியன் ஆகிய எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்துக்களையும், பார்ப்பனர், பார்ப்பரனல்லாதார், தீண்டப்படாதார் என பிரித்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நீதிக்கட்சி கொண்டு வந்ததுதான் “வகுப்புவாரி உரிமை” . அது இப்போது இருப்பதைபோல் அல்லாமல் நூறு சதவீதமும் பிரித்து வழங்கப்பட்டது. இப்படி ஒதுக்கீடு வருகிறபோது முதலில் பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்கிற பொழுது பார்ப்பனரல்லாதார் எதிர்த்தார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனி ஒதுக்கீடு கேட்கிறபொழுது பிற்படுத்தப்பட்டவர்கள் எதிர்த்தார்கள். இப்பொழுது அருந்ததியருக்கு தனி ஒதுக்கீடு என்கிற போது அதை தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள். இப்படி அனுபவித்து கொண்டிருக்கும் ஆதிக்கவாதியாக இருப்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.