மாறி வரும் புதிய சூழலைப் புரிந்து கொள்ளாமல், 1940 ஆம் ஆண்டு சிந்தனைப் போக்குகளிலேயே இந்தியாவின் இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஆய்வு சொற்பொழிவில் ஒப்புக் கொண்டுள்ளார்.

 “ஜாதி என்ற அமைப்பு தானாக மறைந்து விடும். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வர்க்கம்தான் முக்கியம் என்று நினைத்து சாதிய அமைப்பு முறையின் வலுவைக் குறைத்து மதிப்பிட்டதன் பலனை இடதுசாரிகள், இப்போது அனுபவித்து வருகிறார்கள்” என்றும், அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 பிரிட்டிஷ் மார்க்சிஸ்ட் சிந்தனையாளரும், வரலாற்று ஆசிரியருமான விக்டர் கீர்னன் நினைவு உரையை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரகாஷ் காரத் நிகழ்த்தும்போது, இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டார்,. 1938 முதல் 1946 வரை கீர்னன், இந்தியாவில் வாழ்ந்தவர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, பிளவுபடவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வந்த அவர், இந்தியாவில் இடதுசாரித் தலைவர்களையும் தொண்டர்களையும் “காபிக் கடை அறிவு ஜீவிகள்” என்று அவர் கேலி செய்து வந்ததாக பிரகாஷ் காரத் கூறினார்.

 “இந்தியாவில் இப்போது ஏற்பட்டு வரும் சமூக அரசியல் மாற்றங்களை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாறி வரும் சூழ்நிலைக்கேற்ற சித்தாந்தமோ, உத்தியோ, இடதுசாரிகள் வசம் இப்போது இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

 1968 ஆம் ஆண்டில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது முதன்முதலாக கீர்னன் சாதித்ததை நினைவு கூர்ந்தார், காரத். “இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து நீங்கள் வருகிறீர்கள்? இது, அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. இரண்டாவது கேள்வி, நீங்கள் எந்த ஜாதி? என்பதாகும். நான் ஜாதியைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், ‘மேனன்’ என்று கூறியவுடன், அவர் சிரித்துக் கொண்டே கேட்டார். “ஆக எல்லா மேனன்களையும் போல், நீங்களும் அய்.ஏ.எஸ். ஆகப் போகிறீர்களா?” நான் பதில் சொன்னேன். “இந்தியாவில் இரண்டு வகை மேனன்கள் உண்டு; ஒரு வகையினர் அய்.ஏ.எஸ்.கள்; மற்றொரு வகையினர் கம்யூனிஸ்டுகள்” என்று கூறினேன். இருவரும் வாய்விட்டு சிரித்தோம்” என்று காரத் குறிப்பிட்டார்.

(செய்தி: ‘இந்து’ அக்.24, ‘தினமணி’ அக்.25)