சென்னை மாவட்டக் கழகம் காதலர் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு வழங்கிய துண்டறிக்கை

 

காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே உருவாகி விடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.

“காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருந்திருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத் திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்க வேண்டும்.” - தந்தை பெரியார்

காதல் பற்றின் காரணமாக

ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;

அன்பின் அடிப்படையில்

அரவணைக்கத் தூண்டுவது.

குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில்

தேங்குவது அல்ல;

சமுதாயம் என்ற பெருவெளியில்

பிரகாசிப்பது.

உடல் உறவு அதற்கொரு

தொடக்கம்;

மனிதநேயம் அதன் சிகரம்;

ஆதலினால் காதல் செய்வீர்,

உலகத்தீரே.

- கவிஞர் இன்குலாப்

 

எல்லாவற்றிலும்

எனக்குப் பிடித்ததையே

நீ

தேர்ந்தெடுத்தாய்

உனக்குப் பிடித்ததையே

நான் தேர்ந்தெடுத்தேன்

அதனால்தான்

நட்பு

நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

- கவிஞர் அறிவுமதி.

 

“என்னை நீயாக்காமல்

இருப்பாயா.... நீ”

- கவிஞர் இளம்பிறை

 

அறிவார்ந்த காதலை வரவேற்போம்

சாதி - மதம் பலகோடி மைல்களுக்கு

அப்பால்

வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்

வடமொழி புரோகிதம்

ஏலம் கூவும் வரதட்சணை

என்ற மடமைகள்

நமது வாழ்க்கையை தீர்மானிக்க

வேண்டாம்.

சம உரிமையும் - நட்பும்

காதல் வாழ்க்கையின்

பண்புகளாகட்டும்!

- பெரியார் திராவிடர் கழகம்