பெரியார் உயிருடன் இருந்திருப்பாரேயானால், அவருடைய கருத்துகளைப் பரப்புவதற்கு தடை கோரும் வழக்கை, நீங்கள் தொடர்ந்திருக்கவே முடியாது என்று - “குடி அரசு” வழக்கை விசாரிக்கும் மூத்த நீதிபதி எப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, வீரமணி வழக்கறிஞரிடம் கூறினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணனுக்கு எதிராக ‘குடி அரசு’ ஏட்டில் பெரியார் எழுதிய - பேசிய எழுத்துகளை வெளியிடத் தடைகோரியும், ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டும் கி.வீரமணி தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் பிப்.16 அன்று நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, எஸ். கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கி.வீரமணியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், பெரியார் 1952இல் ‘விடுதலை’யில் எழுதிய ஒரு தலையங்கத்தில், அறக்கட்டளையின் சொத்துகளாக, ஒரு லட்சம் ரூபாய் அச்சகம், நூல்கள், அதன் விற்பனை உரிமை என்று எழுதியிருப்பதையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினார்.

மற்றொரு சான்றாக வே. ஆனைமுத்து எழுதிய பதிப்புரையை எடுத்துக் காட்டினார். திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் வே. ஆனைமுத்து தொகுத்து, பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதிகளாக பெரியார் இருந்த காலத்திலே தொகுத்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. அதில் வே. ஆனைமுத்து எழுதிய முன்னுரையில் பெரியாரிடம், அவரது எழுத்துகளைக் காட்டி ஒப்புதல் பெற்றதாகவும், பெரியார், அதை வெளியிட தனக்கு பதிப்புரிமை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கி.வீரமணியின் வழக்கறிஞர், ஆனைமுத்து முன்னுரையை எடுத்துக் காட்டி, பெரியார் பதிப்புரிமை வழங்கியதால்தான், ஆனைமுத்து, பெரியார் சிந்தனைகளை வெளியிட முடிந்திருக்கிறது என்று வாதிட்டார். நீதிபதிகள் இந்த வாதங்களை ஏற்கவில்லை.

முதலில், பெரியார், ‘விடுதலை’ தலையங்கம் பற்றி குறிப்பிட்ட நீதிபதி இப்ராஹீம் கலிஃபுல்லா, பெரியார் ‘விடுதலை’யில் எழுதிய தலையங்கத்தை சட்டப்பூர்வமான ஆவணமாக கருத முடியாது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், அதில் பெரியார் குறிப்பிடும் நூல்கள் அறக்கட்டளையின் சொத்து என்று வாதிட்டால், எந்த நூல்களைக் குறிப்பிடுகிறீர்கள்? இப்போது இவர்கள் (பெரியார் திராவிடர் கழகத்தினர்) வெளியிட்டுள்ள, பெரியார் எழுத்து-பேச்சுக்கள் அந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டதா? பெரியார் நடத்திய பத்திரிகையிலிருந்து தானே எடுக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி கேட்டார்.

வே. ஆனைமுத்து எழுதிய முன்னுரை பற்றி குறிப்பிட்ட நீதிபதி, இது பெரியார் தமக்கு பதிப்புரிமை தந்ததாக, ஆனைமுத்துவே எழுதியது தான். பெரியார் ஆனைமுத்துவுக்கு பதிப்புரிமை எழுதிக்கொடுத்த ஆவணம் ஏதும் இல்லை. அப்படியே எழுதித் தந்ததாக, வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும், அது ஆனைமுத்துக்கு வழங்கப்பட்ட ஒன்று. அவ்வளவுதான். அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய நீதிபதி, நான்கு கேள்விகளை வீரமணி வழக்கறிஞரிடம் முன் வைத்தார்.

குடிஅரசு - ஆசிரியர் யார்? குடிஅரசு - உரிமையாளர் யார்? ‘குடிஅரசு’க்கான உரிமைகள், கி. வீரமணியின் அறக்கட்டளைக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்று, ஆவணம் இருக்கிறதா? பெரியார், தனது எழுத்துக்களை, தமது அனுமதியின்றி, எவரும் பயன்படுத்தக் கூடாது என்று, கைப்பட எழுதி வைத்துள்ளதற்கு சான்று உண்டா? இந்த நான்கு கேள்விகளுக்கும், ஆவணங்கள் இருந்தால், காட்டுங்கள். அதுதான் இந்த வழக்கு என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“எங்களால் தொகுக்கப்பட்டவற்றைத்தான், அப்படியே பெரியார் தி.க.வினர் வெளியிட்டிருக்கிறார்கள். எனவே அது எங்களுக்கு உரிமையானது” என்று வீரமணி வழக்கறிஞர் வாதிட்டபோது, “பெரியாரின் பேச்சு-எழுத்துகளுக்கு எவருமே உரிமை கோர முடியாது என்பதே, இந்த வழக்கில் இப்போதுள்ள சட்ட நிலை. நீங்கள்‘குடிஅரசு’க்கு ஆசிரியர் இல்லை. நீங்கள் ‘குடிஅரசு’க்கு உரிமையாளர் இல்லை. இந்த நிலையில் உங்களுக்கு உரிமை இல்லாத மற்றவருடைய எழுத்துக்கு, நீங்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? எனவே நான் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கும் பதில் வேண்டும். மீண்டும் மீண்டும் கூறியதையே கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கண்டிப்பாகக் கூறினார்.

பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிட்டுள்ள ‘பெரியார் சிந்தனைகள் தொகுப்பு’, பெரியாரின் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டதா என்பதை, எங்கள் நூலகத்திலுள்ள நூல்களைப் பார்த்துதான் கூற முடியும் என்றும், அதற்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும் கூறி, வீரமணியின் வழக்கறிஞர் வாதத்தை முடித்துக் கொண்டார்.

நீதிபதி கிருபாகரன், கி. வீரமணியின் வழக்கறிஞரிடம், “பெரியார்,கொள்கையைப் பரப்புவதற்கே அறக்கட்டளையை நிறுவினார். நீங்கள் செய்ய வேண்டிய வேலையைத் தானே, இவர்களும் (பெரியார் திராவிடர் கழகத்தினர்) செய்கிறார்கள். அது பெருமை தானே? தனது தள்ளாத 90 ஆவது வயதிலும் பெரியார், தனது கொள்கைகளைத்தானே பிரச்சாரம் செய்தார்? பெரியார் நூல்கள் அரசுடைமையாகாததுதான், பெரும் வேதனை (unfortunate) பெரியார் இந்த நாட்டுக்கே சொந்தமானவர். எத்தனையோ நூல்கள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளபோது, நாட்டின் மிகச் சிறந்த பகுத்தறிவைப் பரப்பிய தலைவரின் நூல்கள், நாட்டுடைமையாக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி எம். இப்ராஹிம் கலிஃபுல்லா கூறும்போது, “பெரியார் மிக உன்னதமான உயர்ந்த தலைவர் (Such a greatman) அவர் உயிருடன் இருந்தபோது நாங்கள், அறிவுரீதியாக முதிர்ச்சிப் பெறாத பருவத்தில் இருந்து விட்டோம். அவருடன் பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. பெரியார் உயிருடன் இருந்திருந்தால், நீங்கள் இப்படி பதிப்புரிமை கோரி, நீதிமன்றத்துக்கே வந்திருக்க முடியாது” என்று கூறினார்.

பெரியார் அறக்கட்டளையின் சொத்துதான் ‘குடிஅரசு’ என்ற வீரமணியின் வழக்கறிஞர் வாதத்துக்கு, வழக்கறிஞர் துரைசாமி விளக்கமளிக்கையில், “பெரியார் நிறுவியது அறக்கட்டளையே (Trust) அல்ல; பெரியார் நிறுவியது ஒரு ‘சொசைட்டி’தான்” என்று. பெரியார் நிறுவிய சொசைட்டி விதிகளை சுட்டிக்காட்டி, தெளிவுபடுத்தினார். அத்துடன் சொத்துகளை “அறக்கட்டளைக்கு” ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் (Deed) வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். நீதிபதிகள் அதை ஏற்றுக் கொண்டனர்.

கழகத்தின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தியாகராசன், வீரமணியின் வழக்கு மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களே (Prayer) தெளிவற்றதாக இருப்பதை சுட்டிக்காட்டினார். ‘குடிஅரசு’ பத்திரிகையின் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் பெரியார் மட்டுமே இருக்கவில்லை. இந்தப் பொறுப்பில் பெரியாரைத் தவிர, வேறு பலரும் இருந்திருக்கிறார்கள். பதிப்புரிமை சட்டத்தின்படி, ஒருவர் எழுத்துப்பூர்வமாக பதிப்புரிமையை தந்தாக வேண்டும். அப்படி எழுத்துப்பூர்வமாக தராத நிலையில் பதிப்புரிமை கோரவே முடியாது. பெரியார் தனது சொசைட்டியை உருவாக்கிய காலத்தில் உள்ள பதிப்புரிமை சட்டப்படி பதிப்புரிமை எழுதித் தந்தால்கூட - அது, 25 ஆண்டுகாலத்துக்கு மட்டுமே செல்லும். பெரியார் தமது ‘சொசைட்டி’யை உருவாக்கியது 1952 இல் தான். ஆனால், அதற்கு முன்பே ‘குடிஅரசு’ பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்ல, பெரியார் நிறுவிய சொசைட்டியின் விதிகள்கூட எதிர்காலத்தில் வாங்கக்கூடிய சொத்துக்களுக்குத்தான் உரிமை கோருகிறது. ‘வாங்கக்கூடிய சொத்து’ என்ற வரையறைக்குள் பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை எப்படி வர முடியும்? பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ வாங்கக்கூடிய சொத்தா? (to be purchased property) அல்லது சிந்தனைப் படைப்பா? (created) பெரியார் எழுத்தும் பேச்சும், சொத்துக்கள் அல்ல; சிந்தனை படைப்புகள்; தங்களால் தொகுக்கப்பட்டதையே பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. பெரியாரின் குடிஅரசில் வெளிவந்த கட்டுரைகள்தான், அப்படியே பிரதி எடுக்கப்பட்டு எங்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தொகுப்பு என்ற வரையறைக்கு இடமே இல்லை. அவர்களிடம் இருப்பதுபோலவே எங்களிடமும் ‘குடிஅரசு’ இதழ்கள் இருக்கின்றன. அதிலிருந்துதான், பெரியாரின் கட்டுரைகள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன” என்று கழக சார்பில் நீதிபதி வாதிட்டார்.

கழகத்திடமிருந்த ‘குடிஅரசு’ தொகுப்புகள் நீதிபதிகளின் பார்வைக்காக வழங்கப் பட்டன. புதிய காப்புரிமை சட்டம் 1957 இல் தான் அமுலுக்கு வந்தது. பெரியார் 1952லேயே ‘அறக்கட்டளையை நிறுவிட்டார். அதனால் தான் ‘காப்புரிமை’யை எழுதித் தரவில்லை என்று வீரமணி வழக்கறிஞர் வாதிட்டார். 1957க்குப் பிறகு, 1973 வரை பெரியார் வாழ்ந்துள்ளாரே. பதிப்புரிமை தமக்கு வேண்டும் என்று கருதியிருந்தால், எழுதியிருக்க மாட்டாரா என்று நீதிபதி எஸ்.கிருபாகரன் கேட்டார்.

வழக்கு விசாரணை பிப்.17 ஆம் தேதியும் தொடருகிறது. வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ, வழக்கறிஞர் கிளேடியல் ஆகியோர் மூத்த வழக்கறிஞருக்கு சட்டரீதியான உதவிகளை வாதத்தின்போது வழங்கினர். வழக்கறிஞர் குமாரதேவன், அமர்நாத் மற்றும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாவட்ட தலைவர் தபசி குமரன், கழகத் தோழர் மயிலை சுகுமார் ஆகியோர் நீதிமன்றம் வந்திருந்தனர்.