‘புதிய ஜனநாயகம்’ ஏடு பெரியார் திராவிடர் கழகத்தை கொச்சைப்படுத்துவதில் பேரார்வம் காட்டி எழுதி வருகிறது.‘தினமலர்’ பார்ப்பன நாளேட்டின் பாணியில் ‘புலி ஆதரவாளர்கள்’என்று கழகத்தினரையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போரையும் கிண்டல் செய்கிறது.

“சென்னை இராயப்பேட்டையில் பெரியார் தி.க.வினரை, தி.மு.க. குண்டர்கள் கடுமையாகத் தாக்கி, பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர். பல பெ.தி.க. தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். இவை எல்லாம் இப்போது மறப்போம் மன்னிப்போம் என்பதாகிவிட்டன. அண்மையில் இராயப்பேட்டையில் பெரியார் தி.க. நடத்திய பொங்கல் விழாவிற்கு, தங்கள் மீது தாக்குதலை நடத்திய “ஈழத் துரோகிகளை” தி.மு.க.வின் பொறுப்பாளர்களிடமே மேடை அமைப்பு போன்றவற்றுக்கு நன்கொடை பெற்றுக் கொண்டு, அவர்களோடு சேர்ந்து கோலாகலமாகப் பொங்கல் விழாவை நடத்தி முடித் துள்ளனர். ‘அது அரசியல்; இது தமிழரின் விழா’ என்று நாக்கைச் சுழற்றி விளக்கமும் அளிக்கின்றனர்” என்று எழுதுகிறது, ‘புதிய ஜன நாயகம்’! (பிப்ரவரி2010)

பெரியார் திராவிடர் கழகம் ‘நாக்கைச் சுழற்றி’ அளித்த அந்த விளக்கத்தில், என்ன தவறு இருக் கிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தால், அதில் ‘எழுத்து நாணயம்’ இருந்திருக்கும். அந்த நேர்மை கூட ஜனநாயகத்தில் புதிய பாதையைத் தேடி புரட்சி நடத்த வந்தவர்களிடம் இல்லாமல் போய்விட்டது. நாமும் அதே பாணியில் பதில் சொல்வது என்றால், இப்படித்தான் கூற வேண்டும்.“அடக்குமுறை”, “பொய் வழக்கு”, “அலைக் கழிப்பு”களை சந்தித்து வலியைத் தாங்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் - தமிழின ஓர்மையைப் பேணும் கவலைக் கொண் டவர்கள். எனவே களப்பணியில் தமிழர்களோடு கை கோர்க்கும் நேரத்தில் கைகோர்த்தும், போர்க்கொடி உயத்த வேண்டிய நேரத்தில் நெஞ்சு நிமிர்த்தியும் போராடுவார்கள். பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் செயல் களத்தில் தமிழர்கள் இணைவதை சிதைக்கத் துடிப்பார்கள். சமூகத்தைக் கூறுபோட்டு, தனது அதிகாரத்தை செலுத்துவது தான் பார்ப்பனியம்! புதிய ஜனநாயகத்தின் பார்ப் பனியம் பெரியார் தி.க. மீது நஞ்சைத்தான் கக்கும்.

தமிழ்நாட்டில் ஒரே ‘அக்மார்க்’ புரட்சி யாளர்கள் தாங்கள் மட்டுமே என்பதை பறை யடித்து, பிரச்சாரம் செய்யும் ‘விடுமுறை நாள்’ புரட்சியாளர்களுக்கு காவல்துறையின் அடக்கு முறைகளை சந்திக்கும் அவசியமுமில்லை. அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவே‘புரட்சி’ செய்கிறார்கள். இவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை சந்திக்காத ‘தேச பக்தர்கள்’ தேசவிரோத சட்டங்கள் இவர்களை நெருங்காது. அடக்குமுறை சட்டங்கள் இவர் களிடம் வாலை சுருட்டிக் கொள்ளும்! அடக்குமுறை சட்டங்களே பாயாத புரட்சியாளர்கள்! பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் அந்த அடக்கு முறை களை சந்திக்கிறார்கள். அரசு அடக்கு முறைகளோடு இந்த‘பாதுகாப்புப் புரட்சி’யாளர்களின் அவதூறுகள் வேறு!

‘தினமலர்’, சுப்ரமணியசாமி, ‘இந்து’ ராம், ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்,இராமகோபாலன் வகையறாக்களின் ஒலி குழலாக விடுதலைப் புலிகளை கிண்டல் கேலி செய்து கொண்டு பிரபாகரனை ‘சமூக பாசிஸ்ட்’ என்று கூறிக் கொண்டு தனது ‘புரட்சிகர’ அடையாளத்தை வெளிப்படுத்துவதில் புதிய ஜனநாயகத்துக்கு அப்படி ஒரு குதூகலம்!

இந்த ‘அகில இந்திய புரட்சியாளர்கள்’ தமிழ் நாட்டில் குற்றக் கூண்டில் ஏற்றாத கட்சிகளோ, இயக்கங்களோ, அமைப்புகளோ இல்லை. அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், பெரியார் இயக்கங்கள், சுற்றுச் சூழல் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மார்க்சிய லெனினியக் குழுக்கள் என்று அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும்,இயக்கங்களையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, சகட்டுமேனிக்கு சாடுவதே இவர்களின் மக்கள் புரட்சி. புதிய ஜன நாயகத்தின் பார்வையில் ம.க.இ.க./வி.வி.மு/பு.மா.இ.மு./பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளில் இடம் பெறாத எவரும் சந்தர்ப்ப வாதிகள்/சமூகத் துரோகிகள்/பாசிஸ்டுகள்/எதிர் புரட்சியாளர்கள்.

இவர்கள் வழமையாக நடத்தி வரும் புரட்சிகள் தான் என்ன?தஞ்சையில் ஆண்டுக்கு ஒரு முறை தமிழ் இசை விழா; இப்போது அதுவும் சில ஆண்டுகள் காணாமல் போய் விட்டது. மற்றொரு புரட்சி. சில கூட்டங்களில் போய் உட்கார்ந்து கொண்டு, திடீ ரென்று எழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்புவது; இதே போன்ற ஒரு ‘புரட்சி’க்கு பெரியார் திராவிடர் கழகத்தையும் அழைத்தார்கள். சென்னைக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வந்த நேரம். சென்னை தேனாம் பேட்டை காமராசர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இதேபோல் ‘புரட்சி’நடத்த பெரியார் திராவிடர் கழகத்தினரை சந்தித்தார்கள். நாமும் தோழர் களுடன் கலந்து பேசி தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தோம். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சந்தித்தனர்.‘புரட்சி’யின் அக ‘புறச்’ சூழல்களை அலசி ஆராய்ந்துவிட்டு, “இந்த‘புரட்சி’ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோம்; இந்துத்து வாதிகள் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்து தயாராக வந்திருப்பார்கள்; அதை நாம் அலட்சியப்படுத்திட முடியாது அல்லவா?எனவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது மோடிக்கு எதிராக பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அதில் பெரியார் திராவிடர் கழகம் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் இடம் பெற்றிருந்தது. ‘அக்மார்க்’புரட்சியாளர்கள் இஸ்லாமியர்களோடு இணைந்து நிற்க முடியாது. அது வகுப்புவாத அமைப்பு என்று கூறிவிட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தாங்கள் ஆதரிக்க வும் இல்லை; எதிர்க்கவும் இல்லை என்று இவர்கள் கூறு கிறார்கள். இட ஒதுக்கீடு கொள்கை புரட் சிக்கு பாதகமான அம்சங்களை உள்ளடக்கி புரட்சியைத் தடுக் கிறது என்கிறார் கள். நிலவும் சமு தாயப் பொருளா தார அரசியல் அமைப்பின் கீழ் மக்கள் வெறுப் படைந்து கலவரம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, ஆட்சி செய்வோரே இந்தக் கொள்கையைக் கொண்டு வந்தார்கள் என்றும், அது நிறுவனமாக்கும் ‘ஆட்சி யாளர்களின் கொள்கை’ என்றும் கூறுகிறார்கள். இது திராவிடர் கழகத் தினரோ, நீதிக்கட்சியினரோ போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களாலேயே புகுத்தப் பட்ட கொள்கை என்று விளக்கங்களை அள்ளி வீசு கிறார்கள். (புதிய ஜனநாயகம், ஜூலை2006)

ஆக, அரசு நிறுவனங்களை உறுதிப்படுத்தும் எந்த நடவடிக்கையும் புரட்சிக்கு எதிரானது என்பது இவர்களின் வாதம். இவர்களே - தில்லை கோயிலை மீண்டும் தீட்சதர் கைப்பற்றாமல் தடுக்க... அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க.... உச்சநீதிமன்றம் போவதற்கு வழக்கு நிதி தாரீர்! என்று வழக்கு நிதி திரட்டு கிறார்கள். ‘இந்த வழக்கு நிதி கோரும் அறிக்கையில்,இவர்களால் குற்றக்கூண்டில்நிறுத்தப்பட்டுள்ள கட்சிகள்,இயக்கங்களைச் சார்ந்தவர் தரும் நிதியை ஏற்க மாட்டோம் என்று அறிவிப்பு ஏதுமில்லை; பெரியார் தி.க., நன்கொடை வாங்கினால்தான் சந்தர்ப்பவாதம்; புரட்சியாளர்களுக்கு அது பொருந்தாது போலும்.

இதேபோல் பெரியார் திராவிடர் கழகம் உச்சநீதிமன்றம் போயிருக்குமானால், அரசு சுரண்டல் நிறுவனங்களிடம் நீதி கேட்கப் போராடும் இவர்கள் சந்தர்ப்பவாதிகள். கோயில்கள் என்ற நிறுவனத்தைக் காப்பாற்று கிறவர்கள் என்று புதிய ஜனநாயகத்தில் அனல் பறக்க எழுதியிருப்பார்கள். ஆனால் புரட்சியாளர்கள் என்றால், நீதிமன்றம் போகலாம்; அதற்காக கட்சி, மத, இயக்க வேறு பாடின்றி நிதி திரட்டலாம்.

இப்போது உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதை உறுதி செய்யக் கிளம்பி விட்டோம் என்று மார்தட்டுகிறவர்கள், அன்று தி.மு.க. அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும், புதிய சட்டத்தை, 2006 ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது என்ன எழுதினார்கள்?

• மதம் என்பது தனி நபர் பிரச்சினை. அது நிறுவனமாக இருந்து கொண்டு எந்தப் பிரிவு மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று இந்திய அரசியல் சட்டம், மதச் சார்பற்றதாக ஆக்கப்படும் வரை நீதிமன்றம் போய் எந்தப் பயனும் கிடைக்காது.

• உச்சநீதிமன்றமே ஆகம விதிகளுக்கு விளக்கம் கூறும் பார்ப்பனப் புரோகிதர்களாக செயல்படு கிறது. இதை அரசியல் சட்டமும் ஏற்கிறது. இந்த அரசியல் சட்டத்தை, இங்குள்ள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் மதச்சார்பற்ற சட்டம் என்று கொண்டாடுகிறார்கள்.

• அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஒரு சீர்திருத்தச் சட்டம் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் இந்த சீர்திருத்தத்தை சட்டத்தின் மூலம் மட்டுமே நிலைநாட்டிட முடியுமா?முடியாது. சமுதாயத்தின் ஆதரவைப் பெறாத எந்த சீர்திருத்தச் சட்டமும் வெற்றி பெறாது.

• 1972 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் கொண்டு வரப்பட்டது. என்ன பயன் கிடைத்தது? 2006 ஆம் ஆண்டு வரை பார்த்தால் மொத்த சமூகமும் முன்பைவிட பார்ப் பனியத்தை உள்வாங்கி, எங்கும் பார்ப்பன மயமாய் இருக்கிறது.

- என்று சட்டங்களையோ, நீதிமன்றங்களையோ நம்பக் கூடாது என்று2006 ஆம் ஆண்டில் எழுதியது இவர்கள்தான்! (புதிய கலாச்சாரம்,ஜூலை 2006) அவர்களே இப்போது உச்சநீதி மன்றம் போவதற்கு வழக்கு நிதி திரட்டி தங்கள் ‘சந்தர்ப்பவாதமற்ற’, ‘புரட்சிகர வளர்ச்சிப் போக்கை’ கடைவிரித் திருக்கிறார்கள்!

கவிஞர் இன்குலாப்பையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஈழப் படுகொலைக்கு துணை நின்ற துரோகத்தை ஏற்க மறுத்து தி.மு.க. ஆட்சி வழங்கிய கலைமாமணி விருதை, தன்மானத்துடன் திருப்பி அனுப்பிய கவிஞர் இன்குலாப். இதுபற்றி, ‘புதிய ஜனநாயகம்’ இப்படி எழுதியிருக்கிறது.

“பொருள் அற்ற கலைமாமணியை உதறிய இன்குலாப், ஈழத் தமிழனின் அழிப்பை நடத்திய மத்திய அரசின் செம்மொழி ஆய்வு மய்யத்தில், தனது திட்டம் ஒன்றுக்காக, அண்மையில் இரண்டரை லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதை ஏன் திருப்பிக் கொடுக்க வில்லை?” என்ற “அறிவார்ந்த” கேள்வியை எழுப்புகிறது.

தமிழ் செம்மொழி நிறுவனம், மத்திய அ ரசின் நிதி உதவியோடு தமிழ்நாட்டில் இயங்குகிறது. கவிஞர் இன்குலாப், பேராசிரியர் மங்கை,பேராசிரியர் மில்லி ஆகியோரடங்கிய ‘மரப்பாச்சி’ என்ற நாடக இயக்கம், நாடக ஆய்வு நடத்தவும், சங்ககால இலக்கியங்களை நாடகமாக்கவும் ஒரு திட்டத்தை இந்நிறுவனத்தின் முன் வைத்து,அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பெற்றது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவிப்புக்கு முன்பே, இதற்கானஅனுமதி கிடைத்துவிட்டது. செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டதையே ஏற்கக்கூடாது என்றும், செம்மொழி நிறுவனத்தின் கீழ் எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதுதான் உண்மையான ‘புரட்சி’ என்றும், ‘புதிய ஜனநாயகம்’ கூறுகிறதா, என்பது நமக்குப் புரியவில்லை.

ஈழத் தமிழினத்துக்கு துரோகம் செய்த இந்தியாவில், அதற்கு துணை நின்ற தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி நடக்கும் போது, புலி ஆதரவாளர்கள் வாழலாமா? மூச்சு விட்டுக் கொண் டிருப்பதே சந்தர்ப்பவாதமல்லவா? என்றுகூட புதிய ஜனநாயகம் அசைக்க முடியாத ஆணித்தரமான கேள்விகளை எழுப்பலாம். கலைமாமணி விருதை திருப்பி அனுப்பியவர் தனது பென்சன் பணத்தைத் திருப்பி அனுப்புவாரா, என்றுகூட கேட்கலாம்! தமிழ்நாட்டு சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ்காரர்கள் கூட இப்படியெல்லாம் கேள்வி கேட்டால்,மக்கள் நம்மை சந்தேகிப்பார்கள் என்று தயங்கி நிற்கும்போது, ‘புதிய ஜனநாயகம்’ அதற்கே உரிய புரட்சிகரமான வீரத்துடன், ‘நான் கேட்கிறேன் பார்’ என்று வெளியே வந்திருக்கிறது.

“பன்னாட்டு நிறுவனங்கள் தரும் ஊதியத்தை நான் ஏற்க மாட்டேன்;ஒடுக்குமுறை அரசு அமைப்பின் கீழ் நான் குடிமகனாக இருக்க மாட்டேன்; ஒடுக்குமுறை அரசு நிறுவனத்தில் ஊழியராக பணி செய்ய மாட்டேன்; அப்படியே பணி செய்தாலும், அதற்கு ஊதியம் பெற மாட்டேன்” என்ற முடிவுகளுக்கு எல்லாம் ‘புதிய ஜனநாயக’வாதிகள் வந்து விடமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். காரணம் மற்றவர்களை மட்டுமே கேள்விகளைக் கேட்டு குற்றக்கூண்டில் நிறுத்தும் சுத்த சுயம்பிரகாச புரட்சியாளர்கள் அல்லவா?

பெரியார் திராவிடர்கழகம் வீண் சர்ச்சைகளில், நேரத்தை விரயமாக்காமல், அதற்கான செயல் திட்டங்களில் களப்பணியைத் தொடரவே விரும்புகிறது. பெரியார் திராவிடர் கழகத்தின் மீது பொறுப்பற்ற வீண் அவதூறுகளையும், வசவுகளையும், வீசியே தீருவோம் என்று புதிய ஜனநாயகம் முடிவெடுத்து விட்டால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்!