சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் 27.11.2009 அன்று அம்பேத்கர் நோக்கில் சாதியம் தோன்றிய சமூக வரலாற்றை விளக்கி பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ஆற்றிய உரை இது.

நான்கு வருண அமைப்பு இறுக்கமான ஒன்றாக இல்லாதிருந்து பின்னர் இறுக்கமான சாதியாக மாற்ற மடைந்ததை அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இம்முயற்சியில் முதல்கட்டமாக வருணம் சாதியாக மாறியதன் வரலாற்றுப் பின்புலத்தை வெளிப் படுத்தியுள்ளார்.

கி.மு. 185 இல் புஷ்யமித்திரன் என்ற பிராமணப் படைத் தளபதி மௌரிய பரம்பரையில் வந்த தன் மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க மரபை நிறுவினான். இதை புஷ்யமித்திரன் என்ற தனி மனிதனின் செயலாக அம்பேத்கர் பார்க்கவில்லை. புஷ்யமித்திரனின் இச்செயலை ‘பிராமணியப் புரட்சி’ என்று அடைமொழியிட்டு அழைக்கும் அம்பேத்கர், ‘புஷ்யமித்திரனின் புரட்சி புத்த சமயத்தைத் தூக்கியெறிவதற்காக பிராமணர்கள் தூண்டி விட்ட அரசியல் புரட்சி’ என்கிறார்.

புஷ்யமித்திரனைக் கருவியாகக் கொண்டு பிராமணியம் வெற்றி பெற்ற பின்னர் மேற்கொண்ட தீச்செயல்களைப் பின்வரும் ஏழு தலைப்புகளில் அம்பேத்கர் (1995:172-173) பட்டியலிடுகிறார்:

1. ஆட்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் பிராமணனுக்கு உரிமை உண்டு என்பதை அது நிலைநிறுத்தியது.

2. பிராமணர்களைத் தனிச் சலுகைகள் பெற்ற ஒரு வகுப்பாக அது ஆக்கியது.

3. அது வர்ணத்தைச் சாதியாக மாற்றியது.

4. வெவ்வேறு சாதிகளிடையே போராட்டங்களை யும் சமூக விரோத உணர்வையும் அது உரு வாக்கியது.

5. அது, சூத்திரர்களையும் பெண்களையும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளியது.

6. படிப்படியான ஏற்றத் தாழ்வு முறையை அது தோற்றுவித்தது.

7. மரபொழுங்குகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், நெளிவு சுழிவானதாகவும் இருந்த சமூக அமைப்பை அது மாற்றிச் சட்டத்துக்கு உட்பட்ட தாகவும் கடுமையானதாகவும் செய்தது.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவை அனைத்தையும் அவர் விளக்கியிருந்தாலும் இக் கட்டுரையின் தலைப்புடன் தொடர்புடைய‘வர்ணத்தைச் சாதியாக மாற்றியது’ என்ற தலைப்பில் அவர் கூறியுள்ள செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

“வருணதரும் முறையைச் சாதியாக உருமாற்றம் செய்ததுதான் பிராமணியம் தனது வெற்றிக்குப்பின் முதன்மையாக ஈடுபட்ட மிகப் பெரிய சுயநல நோக்குள்ள செயலாகும்” - என்று குறிப்பிடும் அம்பேத்கர் (1995:186) தன் கூற்றை “பிராமணியம் வருணத்தைச் சாதியாக மாற்றியது என்று நான் கூறும்போது அந்தஸ்தையும் தொழிலையும் பரம்பரையாக வருவதாக அது மாற்றிவிட்டது என்பதையே குறிப்பிடுகிறேன்” - என்று விளக்குகிறார். இம்மாற்றமானது ஒரே காலத்தில் நிகழவில்லை என்றும் பின்வரும் மூன்று கட்டங்களாக அது நிகழ்ந்தது என்றும் கூறுகிறார். (மேலது: 188)

1. முதல் கட்டத்தில் ஒருவருடைய வருணம் - அதாவது,அந்தஸ்தும் தொழிலும் ஒரு குறிப்பிட்ட கால அளவே நீடித்தது.

2. இரண்டாவது கட்டத்தில் ஒருவரது வருணம் அவரது ஆயுட்காலவரை நீடித்தது.

3. மூன்றாவது கட்டத்தில் பரம்பரை அடிப்படையில் வரும் சொத்து போல் வருணம் ஆகிவிட்டது.”

இனி இம்மூன்று கட்டங்கள் குறித்துக் காண்போம்.

முதல் கட்டம்

ஒருவரின் வருணம் ஒரு யுகம் அளவுக்கு - அதாவது, நான்காண்டு காலம் வரை முதல் கட்டத் தில் நீடித்தது. நான் காண்டுகள் முடிந்தபின் ‘மன்வந்தரம்’ என்பது நிகழ்ந்தது. இதன்படி குழு வொன்று நேர்காணல் நிகழ்த்துவது போல் செயல்பட்டு சிலருடைய வருணத்தை நீடிக்கச் செய்தது. சிலருடைய வருணத்தை மாற்றியது. இது சிலருக்கு வருண உயர்வையும், சிலருக்கு வருணத் தாழ்வையும் வழங்கியது. ஒருவருடைய வருணம் நான்காண்டுக்கால அளவு கொண்டதாக இருக்க வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பதை மன்வந்தரம் முடிவு செய்தது.

இரண்டாவது கட்டம்

இரண்டாவது கட்டத்தில் வருணத்தை முடிவு செய்யும் இடமாகக் குருகுலம் மாறியது. கல்வி பயின்று முடிந்தபின் உபநயனம் என்ற சடங்கிற்கு மாணவன் ஆட்படுத்தப்பட்டான். இச்சடங்கில் மாணவனது வருணம் என்ன என்பதை குரு தீர்மானித்தார்.

தன்னிடம் மாணவன் பெற்ற பயிற்சியின் அடிப்படையிலேயே குரு மாணவனின் வருணத்தை முடிவு செய்தார். அவர் முடிவு செய்த வருணம் அம்மாணவனது ஆயுட்காலம் வரை நீடித்தது.

மூன்றாவது கட்டம்

குருகுல முறையில் குருவால் முடிவு செய்யப்படும் வருணம் ஒருவனது ஆயுட்காலம் வரை நீடித்தது. பிராமணியத்துக்கு நிறைவளிக்கவில்லை. இதற்கான காரணத்தை, “இந்த முறையில், ஆசாரியர் ஒரு பிராமணனின் குழந்தையைச் சூத்திரனாக இருப்பதற்குத்தான் தகுதியுடையவன் என்று அறிவிக்கக்கூடிய நிலை இருந்தது. இத்தகைய ஒரு முடிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் பிராமணியத்துக்கு இயல்பாகவே அக்கறை ஏற்பட்டது. வருணம் பரம்பரையாக வரவேண்டும் என்று அது விரும்பியது. வருணத்தைப் பரம்பரையாக வருவதாகச் செய்தால்தான் பிராமணர்களின் குழந்தைகள் சூத்திரர்களாக அறிவிக்கப்படாமல் காப்பாற்ற முடியும்.” (மேலது: 191)

என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். தன் நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறையாக ‘உபநயனம்’ சடங்கைச் செய்யும் உரிமையைக் குருவிடமிருந்து பறித்து தந்தைக்குப் பிராமணியம் வழங்கியது. உபநயனம் செய்யும் உரிமை பெற்ற தந்தை தன் வருணத்தையே குழந்தைக்குக் கொடுப்பது எதிர்பார்க்கக் கூடியதே. இம்முறையினால் வருணம் என்பது பரம்பரைச் சொத்து போலானது.

“வருணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத் தைக் குருவிடமிருந்து எடுத்துவிட்டுத் தந்தையிடம் அதைக் கொடுத்த தன் மூலம்தான் பிராமணீயம் இறுதியாக வருணத்தைச் சாதியாக மாற்றியது.” (மேலது: 192) என்று கூறும் அம்பேத்கர் தன் கருத்தை மேலும் வலியுறுத்தும் வகையில்,

“இதுதான் வருணம் சாதியாக மாறிய கதை. கிடைத்துள்ள ஆதாரங்களிலிருந்து உரு வாக்கப்பட்டதாகும். முன்பே கூறிய காரணங் களினால் இதன் எல்லா விவரங்களும் நாம் விரும்பும் அளவுக்குச் சரியாக இல்லாம லிருக்கலாம். ஆயினும் மேலே விவரித்துள்ளது போன்ற கட்டங்களிலும் வழிகளிலும் தான் வருணம் மறைந்துபோய் அதன் இடத்தில் சாதி வந்திருக்க வேண்டும். இதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.” (மேலது: 192)

என்று எழுதியுள்ளார். இறுதியாக வருணத்தைச் சாதியாக மாற்றியதன் நோக்கம் குறித்து,

“பிராமணர்களுக்குப் பண்டைக்காலம் முதல் இருந்து வந்த உயர்ந்த அந்தஸ்தை, ஒவ்வொரு பிராமணனுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் அவர்களின் தன்மைகளையோ தகுதிகளையோ கருதாமல், சிறப்பு உரிமை யாக்குவதே இதன் நோக்கம்.வேறுவிதமாகச் சொன்னால், பிராமணர்களில் சிலருக்கு அவர் களுடைய சிறப்பியல்பு காரணமாகக் கிடைத் திருந்த உயர்ந்த அந்தஸ்துக்கு ஒவ்வொரு பிராமணனையும் அவன் எவ்வளவு இழி தகைமை கொண்டவனாக இருந்தாலும், உயர்த்தி வைக்க வேண்டும் என்பதே நோக்கம். பிராமண சமுதாயம் முழுவதையும் ஒருவர்கூட விடுபடாமல் உயர்ந்தோர் என்று ஆக்கும் முயற்சி இது.” என்று விளக்கியுள்ளார். (மேலது: 192)

தீண்டாமையின் தோற்றம்:

நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவர்ணர்கள்’ என்ற பெயரில் வருணமற்றவர்களாக ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட இம்மக்கள் பிரிவை‘சண்டாளர்’ என்ற பெயரில் மனு அழைத்தார்.

மனுவுக்கு முன்பாகவே வருணங்களும் சாதிகளும் உருப்பெற்றுவிட்டதைக் குறிப்பிடும் அம்பேத்கர். தீண்டாமை என்பது மனுவின் பங்களிப்பு என்பதை வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே மனுதர்ம சாஸ்திரத்தை 1927 டிசம்பரில் நெருப்பிட்டுக் கொளுத்தினார்.

மனுதர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை அவர் வெளிப்படுத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும்,

“சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்குப் பிரதானமாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில் அது அவருக்கு இரண்டாம் பட்சமானதாகவே இருந்தது. சதுர் வருணத்திற்குள் இருப் போரிடையான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார். ஒருவன் பிராமணனா, சத்திரியனா, வைசியனா அல்லது சூத்திரனா என்பது பலருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரிவினை. இந்தப் பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தி அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். இந்தப் பிரிவினை அவரிடமிருந்து தோன்றியதல்ல. மாறாக, மனுவிடமிருந்து ஒரு புதிய பிரிவினை தோன்றிற்று. (1) சதுர் வருண அமைப்புக்குள் இருப்பவர்கள் (2) சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள் என்பதே இந்தப் பிரிவினை. இந்தப் புதிய சமூகப் பிரிவினை மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின் பண்டைத் தர்மத்துக்கு அவரது புதிய சேர்ப்பு இது. இந்தப் பிரிவினை அவருக்கு அடிப்படையானதாக, மூலாதாரமானதாக,இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால், அவர்தான் இந்தப் பிரிவினையை முதலில் உருவாக்கியவர். அதற்கு தனது அதிகார முத்திரை அளித்து அதனை அங்கீகரித்தவர்.” என்று அம்பேத்கர் (1997:232) விளக்கமளித்துள்ளார்.

அம்பேத்கரின் பங்களிப்பு

இந்தியச் சாதிமுறையின் தோற்றத்தை அதைத் தாங்கி நிற்கும் புனித நூல்களின் வாயிலாகக் கண் டறிந்தது அம்பேத்கரின் குறிப்பிடத்தக்க பணியாகும். இத் தேடலின் தொடர்ச்சியாக இந்து சமயம் என்பது சாதி அமைப்பின் மேல் கட்டப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார். இம்முடிவின் அடிப்படையிலேயே, “நான் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்தேன். இதைத் தடுத்து நிறுத்துவது என்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன். நான் இறக்கும் போது இந்துவாக இறக்க மாட்டேன்.” என்ற அவரது புகழ் பெற்ற யால்டா பிரகடனம் அமைந்தது.

27.11.2009 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை அம்பேத்கர் பொருளாதார ஆய்வு மையம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.

நன்றி: ‘உங்கள் நூலகம்’, ஜன. 2010