காதலர் தினத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் கழுதைகளுக்கு திருமணம் செய்துள்ளார்கள். கழுதைகள் மணமக்களாக மாலையுடன் இருக்க, வேத புரோகிதப் பார்ப்பனர் மந்திரம் ஓதினால், கழுதைகள் அந்த புரோகிதனிடம் என்ன கேட்டிருக்கும்? ஒரு கற்பனை தான்.....
 
கழுதை : ஏய், நீ யாரப்பா? ஏன் இப்படி எல்லாம், எங்களுக்கே எரிச்சல் ஏற்படும்படி கத்தறே; நெருப்பை மூட்டி புகையை போடுறே; எதுக்காக எங்கள இங்கே இழுத்து வந்திருக்கீங்க?

புரோகிதன் : இன்று காதலர் தினம்; அதை நாங்கள் எதிர்க்கிறோம். அதுக்காக உங்களை பிடிச்சு வச்சு கல்யாணம் செய்யறோம்.
 
கழுதை : அப்படியா? இப்படி எங்களைக் கட்டாயப்படுத்தி, இழுத்து வந்து, கல்யாணப் பந்தலிலே கட்டிப் போட்டு வச்சிருக்கீங்களே. இதேபோலத்தான் ஒவ்வொருவரும் கழுதையாகவே இருக்கணும்னு, மக்களுக்கு சொல்ல வர்றீங்களா?

புரோகிதன் :அடே, கழுதையே, நீ கூட, இப்படி எல்லாம் பேசுவீயோ? திமிராகப் பேசாதே!
 
கழுதை : திமிராகப் பேசுறது நீயா? நாங்களா? உன்னுடைய திமிர் எங்களுக்கு தெரியாதா?

புரோகிதன் : என்ன திமிர், சொல்லேன் பார்ப்போம்.
 
கழுதை : ‘சூத்திரனை’ இழிசாதிக்காரன்னு அவன் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு, அவன் பணம், பருப்பு, அரிசி, எல்லாம் வாங்கிகிட்டு, அவனுக்கு புரியாத மொழியிலே பேசுறே! அதை காலம் காலமா கேட்டுகிட்டு, சொரணையற்று கிடக்கிறான், உங்க தமிழன். அந்தத் திமிரில் எங்களிடமும் பேசறே!

புரோகிதன் : அட திமிர்பிடித்த கழுதையே! உன்னிடம் பேசறதுக்கு நேரமில்லை. நான் மந்திரம் ஓதுவதைக் கேட்டுக்கோ. சீக்கிரம் சுபமுகூர்த்தத்தை முடிச்சுட்டு, அடுத்த தேவைக்கு கிளம்பனும். (புரோகிதன் மந்திரம் ஓதுகிறான்).
 
“ஸோமப்ரதமோ, விவிதே கந்தர்வோ விவித
உத்தர த்ருதியோ அக்நிஷ்டே பதி:
தூரியஸ்தே மநுஷய ஜா”
 
கழுதை : யோவ்! நிறுத்து; நிறுத்து. காது கிழியுது. இப்போ என்ன சொல்றே! இதுக்கு என்ன அர்த்தம்?

புரோகிதன் : ஏய் கழுதை, நானும் ஆயிரக் கணக்கில் முகூர்த்தங்கள் நடத்தி வச்சிருக்கேன். ஒரு பயல்கூட அர்த்தம் கேட்டதில்லை. உனக்கு அவ்வளவு துணிச்சல் வந்துடுச்சா?

கழுதை : நாங்க உங்க மக்களைப்போல, மானங் கெட்டவங்க இல்ல; மானமுள்ள கழுதைகள் நினைச்சுக்கோ. முதலில் அர்த்தத்தைச் சொல்லு.

புரோகிதன் : காசு கொடுக்கிறவன்கூட அர்த்தம் கேட்கிறதுல்ல. நீ எல்லாம் கேட்க வந்துட்டே! சொல்றேன் கேள். “பெண்ணே உன்னை சோமன் முதலில் அடைந்தான்; பிறகு கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உன்னை ஏற்றுக் கொண்டான்; நான்காவதாக மனித ஜாதியில் பிறந்த இந்த கணவன் உன்னை அடைகிறான்” - இதுதான் நான் சொன்ன மந்திரத்தின் அர்த்தம்.
 
கழுதை : அடேய் புரோகிதா? அது யாருடா சோமன், கந்தர்வன், அக்னி? இப்படி கண்ட கண்ட ‘தேவன்’களோட எல்லாம் எங்களை ஏன் தொடர்புபடுத்துகிறாய்? நாங்கள் கழுதைகள்; கழுதைகளோடுதான் சேர்வோம்; கழுதைகளோடு தான் உறவு வச்சுக்குவோம்; உங்க வேதத்துல சொல்றதுபோல கண்டவர்களோடும் அலைய மாட்டோம். இந்த மந்திரத்தை எல்லாம் எங்களிம் விடாதே. எங்களுக்குன்னு ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லு.
புரோகிதன் :அதெல்லாம், உங்களுக்கு எல்லாம் எங்களிடம் மந்திரம் ஏதும் இல்லை; வாயை மூடு.
 
கழுதை : பிறகு ஏண்டா, எங்களை இழுத்து வந்து கல்யாணம் பண்ணிப் பாக்குறீங்க. ஆமாம், சூத்திரர்கள் வேதத்தை ஓதக்கூடாதுன்னு நீ தானே எழுதி வச்சிருக்கே. பிறகு, ஏன், சூத்திரர் வீட்டுக்குப் போய் வேதம் ஓதி, பணம் வாங்குறே? பணம் கிடைச்சா, எதை வேண்டுமானாலும் செய்வீயோ!

புரோகிதன் : மானங்கெட்ட மனிதர்கள் அழைக்கிறார்கள், போகிறோம். வியாபாரம் நடக்குது, உனக்கென்ன வலிக்குது?
 
கழுதை : அதையெல்லாம் மானங்கெட்டவங்களோடு வச்சுக்க. நாங்கள் மானமுள்ள கழுதைகள்; தெரியுமா?

புரோகிதன் : மூட்டை தூக்குற கழுதே நீ, நாலுகால் பிராணி நீயா மானத்தைப் பற்றி பேசுறே! உனக்கு என்ன யோக்கியதை இருக்கு?
 
கழுதை : எனக்குத்தானப்பா, யோக்கியதை இருக்கு. எப்படின்னு கேக்குறீயா? சொல்றோம் கேள். நாங்கள் உங்கள் சட்டத்தின் குடிமக்கள் அல்ல; உங்களுடைய அடிமைச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. நாங்கள் இந்துக்கள் அல்ல; அதனால் எங்களிடம் பிராமணாள் கழுதை கிடையாது. ‘சூத்திர’க் கழுதை கிடையாது. சாதிக் கழுதைகள் கிடையாது, பூணூல் போட்ட கழுதை கிடையாது நாமம், விபூதி போட்டால் உதைப்போம்!
 
எங்களுக்கு கோயில் கும்பாபிஷேகம் கிடையாது; நாள், நட்சத்திரம், ஜாதகம் கிடையாது. ஆவி, ஆத்மா கிடையாது. எங்களிடம் சங்கராச்சாரிகள் இல்லை. அதனால், வரதராஜப் பெருமாள்கள் சாக வேண்டி யதும் இல்ல; அரசியல் கட்சிகள் கிடையாது; ஏமாத்தற தலைவர்கள் கிடையாது; ஓட்டு கேட்க ஓட மாட்டோம்; ஓட்டுக்கு பணம் தர வேண்டிய அவசியமில்ல. ஆயிரம் ரூபா நோட்டாக இருந்தாலும், அதை எங்க வாயிலே போட்டு மென்று தின்னுடுவோம்; குட்டிச்சுவர் எல்லாம் எங்கள் தெருதான். நாங்க சுதந்திரமானவங்க...

உழைச்சுப் பிழைக்கிறவங்க. மூட்டை தூக்குறவங்க. புரிஞ்சுதா? நாங்க இந்தியனும் இல்ல; இந்துவும் இல்ல. உன்னுடைய சட்டத்தை எங்ககிட்ட கொண்டு ஏங்கடா வர்றீங்க....!

புரோகிதன் :தேச விரோதியே! தேசத் துரோகியே! நீ மட்டும் மனுஷனாயிருந்தா, தேசப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ளே தள்ளியிருப்போம், தெரியுமா? கழுதையா பிறந்துட்டே, தப்பிச்சுட்டே!
 
கழுதை : நல்லவேளையா கழுதையாகவே பிறந்தோம்; பிரம்மாவின் எந்த உறுப்பிலேயிருந்தும் பிறக்கலே; எங்க அம்மா வயித்துல பிறந்தோம்; தப்பிச்சோம். எங்களை கழுதையாகவே வாழ விடுங்கப்பா! எங்களை பிடித்து கட்டாயப்படுத்தி, ஏன், கல்யாணம் நடத்தி, வேதமந்திரங்களை ஓதி, எங்களை அவமானப்படுத்துறீங்க?  நாங்க பெண் கழுதைகளை ஆண் கழுதைகள் அடக்கியாள்கிறோமோ? சாதிப் பேரைச் சொல்லி வன்முறை செய்யறோமா? உங்கள் காதல் எதிர்ப்புக்கு நாங்கள் தான் கிடைச்சோமா?

டேய் புரோகிதா! நல்லா கேட்டுக்க; இன்னும் எத்தனை காலம், தான் இப்படி ஏமாற்றிப் பிழைப்பீங்க! போ! போய், உனது இந்து சட்டம், வேதம், புராணம் எல்லாவற்றையும் கொண்டுவந்து போடு; எங்களுக்கு தீராப் பசி! எல்லாவற்றையும் தின்று, மென்று விழுங்கி, மலமாக கழிக்கிறோம். அப்போதாவது புத்தி வருதா பார்க்கிறோம்!
 
கழுதை கட்டை உடைத்துக் கொண்டு, கத்திக் கொண்டே ஓடியது. பார்ப்பான் வேத மந்திரமும் அதோடு சேர்ந்து ஒலித்தது.

- கோடங்குடி மாரிமுத்து