சாலை ஓர சுவர்களைப் பார்த்தால் அதில் பெரிய பெரிய எழுத்துகள்! இப்போதெல்லாம் வெற்றிட சுவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இந்த சுவர்கள் வாய் திறந்து பேசுமானால்..... ஒரு கற்பனை: 

நாங்கள் தான் சாலை ஓர சுவர்கள் பேசுகிறோம். சுவர்கள் பேசுமா? என்று பகுத்தறிவுடன் கேட்பீர்களே! கல்லும், மண்ணும், காரையும், சுண்ணாம்பும், சிமெண்டும், கருங் கல்லுமாக உள்ள சுவர் பேசுமா என்று கேட்கிற நீங்கள், அதே கல்லால் ஆன சிலைகளை நம்புகிறீர்களே! அந்த சிலைகளுக்கு சக்தி இருப்பதாக பூசை செய்கிறீர்களே! அந்த சிலைகள் பேசா விட்டாலும் பேசுவதாக, எவராது கூறினால், உடனே நம்பி ஓடுகிறீர்களே! அங்கே மட்டும் உங்கள் பகுத்தறிவுக்கு ‘டாட்டா’ காட்டி விட்டீர்களா? சரி போகட்டும். 

இப்போதெல்லாம், கடவுள்களைவிட எங்களின் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும் எங்களைக் கவனிப்பார்கள். சுண்ணாம்பு அடிப்பார்கள். வேட்பாளர் பெயரையும், சின்னங்களையும் எழுதிக் குவிப்பார்கள். இப்போது காலம் முழுதும் எங்கள் மீது எழுத்துகள், சுவரொட்டிகள். இதை நினைத்தால்தான், எங்களுக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஒவ்வொரு தலைவரின் பெயரை மட்டும் மாய்ந்து மாய்ந்து எழுதி வைக்கிறார்கள். அந்தத் தலைவர்களுக்கு அவர்கள் தருகிற பட்டங்களோ சொல்லி மாளாது. உலகப் புரட்சித் தலைவர்களின் பெயர்களை எல்லாம், தங்களுக்கு பட்டமாக்கிக் கொள்கிறார்கள். இந்தப் பெயர்களையும், பட்டங்களையும் தாங்கி தாங்கி, நாங்கள் நொந்து நூலாகி விட்டோம். அப்படியே உடைந்து விழுந்து விடக்கூடாதா என்று சலிப்பே வந்து விட்டது. இந்தப் “புரட்சி”ப் பெயர்களை எழுதுவதற்கு முன்பதிவு வேறு நடக்கிறது. நாட்டு மக்களுக்கே அடையாளம் தெரியாத அமைப்புகளைக்கூட நாங்கள் நன்றியோடு தாங்கிக் கொண்டு இருக்கிறோம். 

இவை மட்டுமா? மக்களை சாதியால் கூறுபோடவும், எங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். உத்தமபுரத்திலிருந்து திருச்சி கத்தோலிக்க கல்லறை வரை, தீண்டாமைக்காக பயன்படுத்தப்படுவது, எங்களைத்தான். எங்களையே குறுக்காக போட்டு, பிணங்களைக்கூட இந்த பாழாய்ப் போன மனிதர்கள் பிரித்து புதைக்கிறார்கள். மனிதர்களின் இந்த வெறிபிடித்த காட்டுமிராண்டித்தனத்துக்கு நாங்கள் பயன்பட வேண்டுமா என்று கவலைப்பட்டோம். கண்ணீர் வடித்தோம். “அடே மானுடர்களே! புரட்சிப் பட்டங்களையும், போலிப் பெருமைகளையும், பெயர்களையும் விளம்பரப்படுத்தத்தானா நாங்கள் கிடைத்தோம்; ஏதாவது மக்களுக்குப் பயன்படும் கருத்துகளை எழுதக் கூடாதா? அப்படி எழுதுவதற்கு எல்லாம் இந்த நாட்டில் எவருமே இல்லாமல் போய்விட்டார்களா, என்று ஏங்கினோம். இப்போது எங்களுக்கே அதிர்ச்சி; திடீரென்று இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக - கருப்புச் சட்டையுடன் வந்தார்கள்; எங்கள் மீது சுண்ணாம்பு அடித்தார்கள். ‘வந்துட்டாங்கய்யா; இன்னொரு தலைவர் பெயர் எழுத வந்துட்டாங்கய்யா’ என்று நொந்து போனோம். 

ஆனால், என்னே அதிசயம்; கொள்கைகளை கோரிக்கைகளை எழுதத் தொடங்கி விட்டார்கள். தீண்டாமைக்கு எதிராக போராட்டம் என்று எழுதுகிறார்கள்;  தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடப் போகிறார்களாம். ஆகா, என்ன மகிழ்ச்சியான அறிவிப்பு! இப்படி எல்லாம் கொள்கைகளையும், போராட்டங்களையும் எழுதுவதற்கும் எங்களைப் பயன் படுத்துகிறவர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது, நாங்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறோம்! 

எண்ணிச் சில நாட்களிலே - திரும்புகிற இடமெல்லாம் சாதி தீண்டாமைக்கு எதிரான பரப்புரைக் களமாக எங்களை மாற்றிக் காட்டிய இந்த இளைஞர்கள் கரங்களை முத்தமிடுகிறோம். எந்தத் தீண்டாமைக்காக எங்களை சாதி வெறி மனிதர்கள் பயன்படுத்துகிறார்களோ, அதே அநீதிக்கு எதிராகவும் எங்களை போராட்டக் கருவிகளாக மாற்றி விட்ட தோழர்களே, உங்களை பாராட்ட வார்த்தை இல்லை. 

கட்சிகளும், ஏடுகளும் இருட்டடிக்கும் உங்கள் போராட்டத்தை, மக்களிடம் கொண்டு போக, எங்களைப் பயன்படுத்திய கொள்கைச் சுடர்களே! உமது தொண்டு தொடர வாழ்த்துகிறோம். வெற்று புகழாரங்களுக்கும், போலி விளம்பரங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நாங்கள், ஒரு கொள்கைப் பாசறைக்குப் பயன்படுகிறோமே என்று நிமிர்ந்து நிற்கிறோம். 

ஒன்றை மட்டும் சொல்கிறோம்; நெடுஞ்சுவர்களாகிக் கிடக்கும் மனிதர்களைவிட கொள்கைகளையும் போராட்டங்களையும் சுமந்து நிற்கும் நாங்கள் எவ்வளவோ மேலானவர்கள்!

ஆமாம், கொள்கைக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நீங்கள் பெருமை சேர்த்து விட்டீர்கள், தம்பிகளே!

- கோடங்குடி மாரிமுத்து