மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது, தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழக மீனவர்களை அடித்துக் கொல்வது; தாக்குவது; துப்பாக்கியால் சுடுவது; மீன் வலைகளை நாசப்படுத்துவது என்று சிங்களக் கப்பல்படையின் அட்டூழியம் தொடர்கதையாகவே இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், உயிரைப் பலி கொடுத்தும், தடுத்து நிறுத்த முடியாத தி.மு.க. ஆட்சி, இதைத் தட்டிக் கேட்பவர்களை ‘தேசத்தின் விரோதிகள்’ என்று குற்றம்சாட்டுகிறது. ஓராண்டுக்கு வெளியே வர முடியாத தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கைகளில் தூக்கிக் கொண்டு, கோரத் தாண்டவமாடுகிறது.
 
கடந்த காலங்களில் பார்ப்பன முதல்வர் ஜெயலலிதா, இதேபோல்‘பொடா’ சட்டத்தைப் பயன்படுத்தி, தமிழின உணர்வாளர்களை சிறைப்படுத்தி மகிழ்ந்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மனித உரிமையாளர்களைப் போல் வேடம் போட்டுக் கொண்டு ஜெயலலிதாவைக் கடுமையாக தாக்கிப் பேசியது, இதே தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தான். எதிர்கட்சியாக இருக்கும்போது மனித உரிமையாளர்களாக நடிப்பவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன், அடக்குமுறைச் சட்டங்களை கரங்களில் தூக்கிக் கொண்டு நிற்பதை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
1976 ஆம் ஆண்டு அன்றைய இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி, ‘மிசா’எனும் அடக்குமுறை சட்டத்தில் தி.மு.க.வினரை சிறையிலடைத்தபோது, ‘மிசா’ எதிர்ப்பு வீரர்களாக - தி.மு.க. பவனி வந்தது. மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையானவர்களின் பெயர்களோடு ‘மிசா’ என்ற அடைமொழியை ஒட்ட வைத்துக் கொண்டார்கள். ‘மிசா’ ஒழிந்து ‘தடா’ வந்தபோது, தி.மு.க. அதை எதிர்த்தது. அப்போது - தி.மு.க. எதிர்கட்சி. பிறகு தி.மு.க. மீண்டும் ஆளும் கட்சியாக வந்தபோது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, மாநில அரசுகளே அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியபோது, உடனே‘பொடோ’ என்ற மாநில அளவிலான அடக்குமுறை சட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது - இதே கலைஞர் கருணாநிதி தான். (30.5.1998) மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் போனபோது, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன்,ஒப்புதல் தராமல் விளக்கம் கேட்ட நிலையில், அம்மசோதா சட்டமாகாமல் தடைபட்டுப் போனது. மீண்டும் 2002 ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது, ‘பொடா’ எனும் அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்தது (மார்ச் 18, 2002). நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இந்த சட்டம், மாநிலங்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக தோற்கடிக்கப்பட்டது. பிறகு, இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டி,சட்டத்தை நிறைவேற்றினார்கள். அப்போது மத்தியில் பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்த தி.மு.க. ‘பொடா’வையும் ஆதரித்தது. பிறகு பார்ப்பன ஜெயலலிதா ‘பொடா’வைப் பயன்படுத்தி, பழ. நெடுமாறன்,வை.கோ. உள்ளிட்டோரை கைது செய்தபோது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க. ‘பொடா’ எதிர்ப்பாளராக வலம் வந்தது.
மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது ‘பொடா’ சட்டம் இல்லாமல் போய்விட்டது. எனவே ‘பொடா’வுக்கு மாற்றாக விசாரணையின்றி பிணை வழங்க முடியாமல் சிறையில் அடைக்கும், ஆள்தூக்கி சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பிடித்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
 
ஏற்கனவே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பல தோழர்கள் மீது தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக பாய்ந்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றமே நீக்கம் செய்து அறிவித்தது. கோவை நீலாம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இராணுவ வாகனங்கள் மறிக்கப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தி.மு.க ஆட்சி‘தேசபக்தி’ பீறிட்டு ஏவினாலும்கூட, மத்திய உள்துறை அமைச்சகமே தலையிட்டு ரத்து செய்ததை நினைவுபடுத்துகிறோம்.
 
ஒரு காலத்தில் திராவிட நாடு பிரிவினை கேட்ட கட்சி தி.மு.க. பிரிவினை கேட்கும் அமைப்புகள், தேர்தலில் போட்டியிட தடை வரலாம் என்ற நிலை வந்தபோது 1962 இல் திராவிட நாடு பிரிவினையைக் கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். ஆனால்,பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்றார். அடக்குமுறை சட்டங்களையும் அண்ணா எதிர்த்தார். அண்ணாவின் வழி வந்த தி.மு.க.வின் சட்ட அமைச்சர் துரைமுருகனோ,இறையாண்மைக்கு எதிராக பேசுவோருக்கு தனிச்சட்டம் கொண்டுவரப் போவதாகக் கூறி, தனது ‘அதீதமான’ தேசபக்தியை வெட்கமின்றி வெளிப்படுத்துகிறார்.
 
அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக அதிகார அரசியல் என்ற ஒரே குறிக்கோளுடன், தன்னுடைய கொள்கை அடையாளங்களை படிப்படியாக அழித்துக் கொண்டே வரும் தி.மு.க., இப்போது கொள்கை அழிவின் விளிம்பு நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
 
இந்திய ஒருமைப்பாட்டையும், இந்து பார்ப்பனியத்தையும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டவர் ஜெயலலிதா. ஆனால்,பெரியார், அண்ணா பெயரைக் கூறிக் கொண்டிருக்கும் தி.மு.க.வோ,ஜெயலலிதாவையும், கதர்ச்சட்டைக்காரர்களையும் விஞ்சக்கூடிய தேச பக்தர்களாக மாறி நிற்பது பச்சையான கொள்கை துரோகம்.
 
நல்லவேளை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால், “கொலை வாளினை எடடா; மிகு கொடியோர் செயல் அறவே” என்ற வரிகளுக்காக, வன்முறையைத் தூண்டுகிறார் என்று அவரையும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் பிடித்துப் போட்டு, இவர்கள் மத்திய அரசிடம் நற்சான்றிதழ் வாங்கி வைத்திருப்பார்கள்.
 
தமிழ்நாடு மீனவர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக எதிரிகளை எச்சரிக்கை செய்யக்கூடிய கருத்துகளை வெளியிடுவது கூட தி.மு.க. ஆட்சியில் தேச விரோதமாக்கப்பட்டுவிட்டது. இராஜபக்சே இதற்காக பூரித்து மகிழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
 
தோழர் சீமானைப் பொறுத்தவரை இவை எல்லாம் அவருடைய வளர்ச்சிக்கு ஒரு உரமாகவே பயன்படும் என்பதே நமது கருத்து. அடக்குமுறையால் தோழர் சீமானை புடம் போட்டு வார்த்து எடுக்க தி.மு.க.வே முடிவு செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. அதுவும் நன்மைக்குதான்.
 
ஆனாலும், ஒட்டுமொத்த தமிழினத்தையே தலைகுனிய வைத்துள்ளது இந்த அடக்குமுறை சட்டம். சீமான் என்ற தனிமனிதருக்கு எதிரான அடக்குமுறையாக இதைப் பார்க்காமல்,தமிழினத்தின் உரிமைக்கு குரல் கொடுப்போருக்கு எதிரான அச்சுறுத்தலாகவே இதைக் கருத வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிரான கண்டனங்கள் - இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும்.