நேபாளத்துக்கு ‘புனித’ பயணம் புறப்பட்ட ராஜபக்சே - திருப்பதி ஏழுமலையானையும் தரிசித்தாராம். ஏழுமலையான் கோயில் பார்ப்பனர்கள், பூர்ண கும்ப மரியாதையுடன் ராஜபக்சேயை வரவேற்றனராம்! வெட்டிய தமிழன் தலைகளை - திருப்பதி உண்டியிலில் காணிக்கையாக்குவதற்குக்கூட ராஜபக்சே தயாராக இருப்பார். அப்போதும் ‘இவாளின்’ பூர்ண கும்ப மரியாதை கிடைக்கலாம்; செத்தது தமிழன் தானே! ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால், ‘மனிதப் படுகொலைகளை நடத்திய ரத்த வெறியனே!’ என்று கேட்டிருப்பான்! ஏழுமலையான் அப்படி கேட்க மாட்டான் என்பது ராஜபக்சேவுக்கு நன்றாக தெரியும். பேசும் சக்தி பெற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே ராஜபக்சேவிடம் கேட்காத போது - ஏழுமலையானா கேட்கப் போகிறான்! ஏழுமலையான் கேட்காவிட்டாலும் சரி; தி.மு.க. - காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்காவிட்டாலும் சரி; அமெரிக்காகாரன் கேட்க ஆரம்பித்து விட்டான்!

ராஜபக்சே நடத்திய மனித உரிமை மீறல்களை 68 பக்க அறிக்கைகளாக தயாரித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து விட்டான். அதில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை நடந்த 170 மனித உரிமை மீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில், ராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை போர்க் குற்ற விசாரணையை தொடங்கிவிட்டதாம்! கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வருமாறு ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அழைப்புப் போய்விட்டதாம்! அமெரிக்காவின் இந்த கிடுக்கிப் பிடியில் இலங்கை அரசு அச்சம் அடைந்திருப்பதாக இலங்கை வட்டாரங்கள் கூறுகின்றன.

“ஓகோ, ஏழுமலையான் தரிசனத்தினால் கிடைத்த ‘ஆசி’ அமெரிக்காவில் வேலை செய்யத் தொடங்கிவிட்டதா” என்று ஒரு ‘பெரியாரிஸ்ட்’ கேட்கிறார். நியாயமான கேள்வி தான்! ஆனாலும் - சிங்கள ராணுவத்துக்கும், ராஜபக்சேவுக்கும் ஆதரவாக சாட்சிகள் இல்லாமலா போய் விடுவார்கள்! ‘இந்து’ ராம், சுப்பிரமணிய சாமி, எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன், விஜய நம்பியார் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. ‘இந்து’ ராம் இப்போதே சாட்சிக்கு தயாராகி விட்டார். அமெரிக்கா விசாரணை தொடங்கியிருக்கும் செய்தியை தனது ஏட்டில் வெளியிடாமல், பத்திரமாக சுருட்டி, கோட்டுப் பைக்குள் சொருகிக் கொண்டுவிட்டார் ‘மவுண்ட் ரோடு மகா விஷ்ணு’.

“உரிமைகளை மீறியது விடுதலைப்புலிகள் தான்; அவர்களே கொன்றுவிட்டு பழியை எங்கள் மீது போடுகிறார்கள்” என்று வழக்கம் போல், புலிகள் மீதே பழியைப் போடுங்கள்; என்று இந்துவும், எம்.கே.நாராயணனும் அடி எடுத்துக் கொடுத்தாலும், விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லையே! இப்போது அந்த பல்லவியை பாட முடியாதே! என்ன செய்வது? பார்ப்பன - மலையாள அதிகாரிகளுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லையே என்ற கவலை இப்போதுதான் பீறிட்டு நிற்கும்! ஆனாலும்கூட - தமிழக முதல்வர் கலைஞரிடம் இதற்கு ஒரு துருப்பு சீட்டு இருக்கிறது; அது என்ன? அதுதான் “சகோதர யுத்தம்” எனும் துருப்புச் சீட்டு. அந்தத் துருப்புச் சீட்டு, இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு உதவிடுமா? நமக்குத் தெரியாது! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! சர்வதேச குற்றவாளிக் கூண்டில் - ராஜபக்சே கும்பலும், அதற்கு முட்டுக் கொடுத்த பார்ப்பன மலையாளிகள் கும்பலும் ஏற்றப்படும் காலம் வந்தே தீரும்! உணர்ச்சியுள்ள தமிழன் அதுவரை ஓயவே மாட்டான்! ஏழுமலையானோ, எட்டு மலையானோ எந்த மலையானும் வந்து காப்பாற்ற மாட்டான்!

- கோடங்குடி மாரிமுத்து