“உங்களுடைய கழுத்தில் உள்ள துளசி மாலை ஈட்டிக்காரரின் பிடியிலிருந்து உங்களை மீட்காது. நீங்கள் இராமனைப் பற்றிப் பாடல்களைப் பாடுவதால் நிலப் பிரபுவிடம் இருந்து குத்தகையில் சலுகை கிடைத்து விடாது. ஒவ்வொரு ஆண்டும் பந்தர்பூருக்கு நீங்கள் புண்ணிய யாத்திரை போவதால் மார்ச் கடைசியில் உங்களுக்கு ஊதியம் ஏதும் கிடைக்காது. சமூகத்தில் பெரும்பாலோர் இதுபோன்ற அர்த்தமற்ற கற்பனைகளிலும், மூடநம்பிக்கைகளிலும் மாயைகளில் மூழ்கி இருப்பதால்தான், சுயநலம் கொண்ட புத்திசாலிகள், சமூகத்திற்கு எதிரான தங்களின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு தாராளமான வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கின்றன.

- அண்ணல் அம்பேத்கர் (பிறந்த நாள் ஏப்.14)

ஏழுமலையான்காலடியில்....

இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அவ்வப்போது விண்ணில் இராக்கெட்டுகளை செலுத்தி வருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி.சாட் 4 என்ற ராக்கெட்டை செலுத்தப் போகிறார்கள். இதில் சிறப்பு அம்சம், இந்த இராக்கெட், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜனிக்’ எனும் எரிப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதுவரை, இந்த கிரையோஜனிக் எரி பொருளுக்கு வெளிநாடுகளையே இந்தியா சார்ந்திருந்தது. இந்த நிலையில், விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் இராதாகிருஷ்ணன் என்பவர் 10 ஆம் தேதி காலை குடும்பத்துடன் திருப்பதி சென்றார். திருப்பதி ஏழுமலையான் காலடியில் ஜி.எஸ்.எல்.வி. - டி3 இராக்கெட்டுக்கான திட்ட அறிக்கையை ஏழுமலையான் பாதத்தில் வைத்து இராக்கெட் வெற்றிகரமாக பறக்க, ஏழுமலையான் ஆசியை வேண்டியிருக்கிறார். இது ஏடுகளில் வந்துள்ள செய்தி.

ஏழுமலையான் நினைவுடனேயே வீடு திரும்பிய விஞ்ஞானி உறங்கப் போகிறார். ஏழுமலையான் கனவில் வந்து பேசினால்.......

விஞ்ஞானி : திருப்பதி ஏழுமலையானே! ஏடு கொண்டலவாடா! இதோ, உன் பக்தன், இஸ்ரோ விஞ்ஞானி குடும்பத்தோடு வந்திருக்கிறேன்....

ஏழுமலையான் : அப்படியா! எந்த விஞ்ஞானியாக இருந்தாலும் என்னிடம் வந்து தானே ஆக வேண்டும்; என்ன வரம் வேண்டும், விஞ்ஞானி?

விஞ்ஞானி : விஞ்ஞானிகளாகிய நாங்கள் வானத்தில் இராக்கெட் ஒன்றை ஏவப் போகிறோம். இதற்கான எரிபொருளை உள்நாட்டிலே தயாரித்துள்ளோம். நாங்கள் பாடுபட்டாலும், அது வெற்றிகரமாக பறப்பது, உன் சக்தியில் தானே இருக்கிறது? எனவே இராக்கெட் வெற்றிகரமாக பறக்க ஆசி வழங்க வேண்டும்; பக்தன் யாசிக்கிறேன்.

ஏழுமலையான் : அட, நீ வேற! என்னுடைய உண்டியலிலேயே கணக்கில் வராத கருப்புப் பணம் கத்தை கத்தையாக வந்து விழுகிறது. இப்போது கள்ள நோட்டுகளும் வந்து விழத் தொடங்கிவிட்டன. ‘லட்டு’ பிரசாதம் தயாரிப்பில் லஞ்ச ஊழல், எனக்கே மெட்டல் டிடெக்டர் பாதுகாப்பு, இவைகளையே என்னால் தடுக்க முடியவில்லை. தேவஸ்தானம் தான் எனக்கே கண்காணிப்பு ஏற்பாடுகளையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இராக்கெட் வெற்றிகரமாக பறக்க நான் என்ன செய்ய முடியும்? இராக்கெட் பற்றி எல்லாம் எனக்கென்னப்பா, தெரியும்!

விஞ்ஞானி : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, பகவானே! தாங்களே இவ்வுலகைப் படைத்தீர்; தங்கள் பொற்பாதங்களில் தான் இவ்வுலகமே அடக்கம்!

ஏழுமலையான் : அப்படியெல்லாம் பேசாதே! உலகமே எனக்குள் அடக்கம் என்றால், இந்த கிரையோஜினிக் எரிபொருளை, உலக நாடுகளிலிருந்து வாங்க வேண்டிய நிலை உங்களுக்கு வந்திருக்குமா? அதை உருவாக்கும் சக்தியை அப்போதே உங்களுக்கு வழங்கியிருக்க மாட்டேனோ?

விஞ்ஞானி : நாங்களே இதை உருவாக்குகிறோமா என்று பார்ப்பதற்கு இவ்வளவு காலம் எங்களுக்கு சோதனை வைத்திருக்கிறாய், என்றே நாங்கள் நம்புகிறோம், சாமி!

ஏழுமலையான் : அப்படியா, என் சக்தி மீது உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? உண்மையிலேயே நம்புகிறீர்களா? அப்படியானால், ஒரு கேள்வி கேட்கிறேன்.

விஞ்ஞானி : கேளுங்கள், சாமி.

ஏழுமலையான் : விண்வெளி ஆய்வு திட்டங்கள், ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா? அதை, வேறு நாட்டுக்கு தருவது தேசத் துரோகம்தானே. அப்படி ஒரு ரகசியத் திட்டத்தை என் காலடியில் கொண்டு வந்திருக்கிறாயே, இதை நான் வேறு ஒரு நாட்டுக்கு சொல்லிவிட்டால் என்னவாகும்? நீ தேசத் துரோக வழக்கைச் சந்திக்க வேண்டும். இருந்தும் என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? அப்படி எல்லாம் திட்டத்தின் ரகசியத்தை வெளியிடும் சக்தி எனக்கு இல்லை என்பது உமக்கு உறுதியாகத் தெரிந்ததால்தானே?

விஞ்ஞானி : என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கு நான் எந்த பதிலை கூறினாலும், ஒன்று தேசத் துரோகி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வம்பில் மாட்டிவிடலாமா ஏழுமலையானே? தேடி வந்த பக்தனை இப்படி சோதிக்கலாமா?

ஏழுமலையான் : பதறாதே பக்தா! உன் கவலை எனக்குப் புரியாமல் இல்லை. விஞ்ஞானம் வளர்வதால் எங்கே எமது சக்தியை மக்கள் நம்பாமல் திருந்தி விடுவார்களோ என்று பயந்துதான், நீங்கள், எம்மிடம் வந்திருக்கிறீர்கள் என்பது எமக்குப் புரியாமல் இல்லை. எம் மீது மக்கள் கொண்டுள்ள பொய்யான நம்பிக்கைகள் தொடர வேண்டும்; மக்கள் முட்டாள்களாகவே இருக்கவேண்டும் என்ற தங்களது நல்ல எண்ணத்தை மெச்சுகிறேன். இனி அடுத்த முறை திட்ட அறிக்கையை என் காலடியில் சமர்ப்பிக்க வரும்போது எல்லா விஞ்ஞானிகளையும் அழைத்துவா. அப்படியே திரும்பும்போது எல்லோரும் மொட்டை போட்டுக் கொண்டு போய் மொட்டைத் தலையோடு, ‘இராக்கெட்டை’ அனுப்புங்கள். அப்போதுதான் இராக்கெட்டுக்குள்ளேயே பகவான் சக்தி இருப்பது மக்களுக்கு தெளிவாகப் புரியும். மக்களை எல்லாம் முட்டாள்களாக்கும் வேலையை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் விஞ்ஞான மனப்பான்மை ராக்கெட்டைவிட வேகமாக பரவும்.

விஞ்ஞானி : அப்படியே ஆகட்டும், சுவாமி.

ஏழுமலையான் : கடைசியாக ஒன்று. இராக்கெட் வெற்றிகரமாக பறந்தால், என் சக்தியால் பறந்தது என்று கூறுங்கள். ஏதேனும் கடலில் விழுந்து எரிந்து போனால், திட்டத்தில் கோளாறு என்று கூறுங்கள். என் சக்திக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது தெரிகிறதா?

விஞ்ஞானி : அப்படியே பார்த்துக் கொள்கிறோம் சாமி. உங்களை நாங்கள் காப்பாற்றாமலா விட்டு விடுவோம்; நிச்சயம் கைவிட மாட்டோம். இது இராக்கெட் மேல் சத்தியம்; சத்தியம்; சத்தியம்...!

(விஞ்ஞானி உளறிக்கொண்டே உறக்கம் கலைந்து திடீரென்று எழுகிறார். மொட்டை போட்டு விட்டோமோ என்று பதறிப் போய் தலையைத் தடவிப் பார்க்கிறார். அப்பாடா, முடி இருக்கிறது. நிம்மதிப் பெருமூச்சு வந்தது.)

 

-கோடங்குடி மாரிமுத்து

Pin It