இனத்துக்கு ஆபத்து என்றால், களத்தில் ஓடி வந்து நிற்கும் இயக்கம் பெரியார் திராவிடர் கழகம். இது ஏதோ வீண் பெருமைக்கான வார்த்தைகள் இல்லை. தமிழின உணர்வாளர்களின் உறுதியான கருத்து. பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்வீரர்கள் எப்போதும் களப்பணியில் நிற்பவர்கள்! சிறைக்கு அஞ்சாதவர்கள்; இந்திய ராணுவத்தின் வாகனங்களையே மறித்துப் போராடி அதற்கான விலையைத் தந்தவர்கள்! பெரியார் சிலை மீது மதவெறி சக்திகள் கை வைத்தபோது, கொதித்தெழுந்தவர்கள்; அடக்குமுறை சட்டங்களை சந்தித்தவர்கள். தேச பக்திக்காக ஆட்சி நடத்துவோரால் தேச விரோதிகளாகமுத்திரை குத்தப்பட்டு, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டு வருவோரும் பெரியார் திராவிடர் கழகத்தினர்தான். பெரியார் திராவிடர் கழகத்தில் இணைவதைப் பெருமையாகக் கருதி பல ஊர்களில் எத்தனையோ தோழர்கள், பெரியார் திராவிடர் கழகத்தின் கொடியை ஏற்றிக் கொண்டு, தங்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

நெருக்கடியான பிரச்சினைகள் என்று வந்தால், அடுத்த சில மணி நேரங்களிலே போராட்டக் களத்தில் வந்து நிற்கும் போராட்ட வீரர்களை இந்த இயக்கம் பெற்றுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் எலும்புருக்கி சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்போது, ‘கணபதி ஹோமம்நடக்கப் போகிறது என்ற செய்தி வந்தது. அடுத்த சில மணி நேரங்களிலே கழகத்தின் எதிர்ப்பு துண்டறிக்கையும், சுவரொட்டிகளும் மருத்துவமனை வட்டாரங்களை அலற வைத்தன. போராட்டத்துக்கும் தயாரானார்கள் தோழர்கள். கணபதி ஹோமம்நிறுத்தப்பட்டது. இப்படி இயங்கிக் கொண்டே இருப்பதுதான் இயக்கம்! கோவையிலே சிங்கள ராணுவம் பயிற்சிக்கு வருகிறது என்ற செய்தி கிடைத்த சில மணி நேரங்களிலேயே எதிர்த்துப் போராட கழகத்தின் படை அங்கே திரண்டு நின்றது.  

திருச்சி சவுந்தரராசன், முன்னாள் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், இத்தனைக்கும் பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கூட அல்ல; பெரியார் கொள்கைப் பற்றாளர். அவர் தனது சொந்த ஊரில், சொந்த செலவில் பெரியார் சிலையை எழுப்பி, அந்த சிலை திறப்பு விழாவுக்கு பெரியார் திராவிடர் கழக தலைவரையும் பொதுச் செயலாளரையும் அழைத்து, கழகத்தின் விழாவாகவே அதை நடத்தினார். தமிழன் ஏற்ற வேண்டிய கொடி பெரியார் திராவிடர் கழகத்தின் கொடி தான் என்று பேசினார். இந்தப் பெருமைகளும் அங்கீகாரமும் கழகத்துக்கு எப்படி கிடைத்தது? அதன் தன்னலமற்ற கொள்கைத் தொண்டினால் தான் கிடைத்தது. தனி மனிதத் துதிகளையும், வீண் ஆரவாரமும் இல்லாமல், இந்த இயக்கம், கொள்கைப் பயணத்தில் உறுதியாக நடை போடுவதால் கிடைக்கும் பெருமை இது.  

பெரியார் இயக்கத்தை குடும்ப வாரிசு கட்சியாகமாற்றிக் கொண்டிருப்பவர்கள் - இன்று, அம்பலப்பட்டு, முகத்திரை கிழிந்து நிற்கிறார்கள். அக்கட்சியில் தங்களை உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்பட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனால், பெரியார் திராவிடர் கழகத் தோழனோ, கொள்கை அடையாளத்தோடு தலைநிமிர்ந்து நிற்கிறான். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்ற கேள்விகளோடுதான் கழகத்தினரை உண்மையான தமிழின உணர்வாளர்கள் சந்திக்கிறார்கள். பொது வாழ்க்கையில் கொள்கை நேர்மையும், அர்ப்பணிப்பும், புகழ் விரும்பாமையும் அருகிப் போன காலச் சூழலில், கொள்கைக்காக, ஒரு கூட்டம் இயங்கிக் கொண்டே நிற்கிறது என்பது பலருக்கும் அதிசயமாகத் தோன்றலாம். பெரியாரியம் தான், இதற்குப் பின்னால் உள்ள ரகசியம். திறந்த உள்ளத்தோடு லட்சியச் சுடரை கரங்களில் ஏந்தி, சமுதாயக் கவலையோடு களத்துக்கு வருவோருக்குத்தான் - இத் தொண்டில் கிடைக்கும் மகிழ்ச்சியும், ஆனந்தமும், மன நிறைவும் புரியும். அந்த உணர்வுகளை தெளிவாக கள அனுபவத்தில் புரிந்து கொண்டவர்கள் எமது தோழர்கள்! அந்த உணர்வுகளை வழங்கிடும் பெரியாரியமே எமது தோழர்களையும் இயக்கத்தையும் வழி நடத்தும் மகத்தான சக்தி! கழகத்தின் கொள்கைச் சுடர்களே! இந்தஇயக்கத்திடமிருந்து நமது சமூகம் எவ்வளவோ எதிர்பார்க்கிறது. இவர்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் என்று நம்பி நிற்கிறது. அந்த நம்பிக்கையை உரமாக்கிக் கொண்டு, பணியினைத் தொடருவோம்! எதிர்காலம் பெரியார் லட்சியத்துக்கே!