ஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களிலிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன ‘இந்து’ ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. - காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள். உண்மையிலேயே அந்த பரிதாபத்துக்குரிய தமிழர்களுக்கு அப்படி ஒரு ‘விடுதலை’யை கலைஞர் கருணாநிதி பெற்றுத் தந்தால் தாராளமாக பாராட்டு மாலைகளை சூட்டலாம். ஆனால், உண்மையில் அப்படி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பச் சென்று விட்டார்களா? இந்தக் கேள்விக்கு, இலங்கையின் அரசு அதிகாரி எமல்டா சுகுமார் என்பவர் அளித்துள்ள பேட்டி - ஏடுகளில் வெளிவந்துள்ளது. அவர் என்ன சொல் கிறார்? முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள், அங்கிருந்து வேறு ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறார்களே தவிர, அவர்களின் வாழ்விடங்களுக்கு அல்ல.

“அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை, முதலில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். மாலவி மத்தியக் கல்லூரி யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள். மக்களை குடியமர்த்துவதற்கு பதிலாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டிடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள். கிளி நொச்சிப் பகுதியிலுள்ள ஜெயபுரம், பூஞ்சரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள். இந்தப் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள். மறு குடியமர்வுக்குத் தேவையானஅனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.” (‘தினமணி’ - அக்.27)

கூடாரங்களில் அகதிகளாக இருந்த தமிழர்கள், பள்ளிக் கட்டிடங்களுக்கு அகதிகளாக அனுப்பப்படுகிறார்கள். இதைத்தான், கலைஞர் கருணாநிதியும், கலைஞர் தொலைக்காட்சியும், பார்ப்பன ‘இந்து’ ஏடும், தமிழர்களுக்கு வாங்கித் தந்திருக்கிற “விடுதலை” இவர்கள் கொண்டாடி மகிழ்கிற மகிழ்ச்சி; குதூகலம். அப்படியானால், இவர்கள் சொந்தப் பகுதிகளுக்கு போவது எப்போது? அதற்கு ஏதாவது காலக் கெடு நிர்ணயித்திருக்கிறார்களா? அதே இலங்கை அதிகாரி, இதற்கும் பதில் கூறுகிறார். “இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது.” (அதே ‘தினமணி’ ஏட்டில்) - என்கிறார் அந்த அதிகாரி.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ, தமிழர்கள் எல்லாம் அகதிகள் வாழ்க்கையிலிருந்தே விடுவித்து விட்டதாக ஏன் பொய்யாக தம்பட்டமடிக்க வேண்டும்? இவர்களின் அரசியல் விளையாட்டுக்.கு கிடைத்தது - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையா? உலக செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காக இப்படியெல்லாம் நாடகமா? இராஜபக்சே - இப்படி முள்வேலி முகாமிலிருந்து பள்ளிக்கூட முகாமுக்கு அவசரமாக மாற்றுவதற்கு என்ன காரணம்? அய்.நா. வின் மனித உரிமைப் பிரிவு தொடர்ந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டும் என்று தந்த அழுத்தத்தால் தான் ‘ராஜபக்சே’ இப்படி முகாமிலிருந்து முகாமுக்கு மாற்றும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சர்வதேச செய்தி நிறுவனமான ‘ஏபி’ கூறுகிறது.

அய்ரோப்பிய நாடுகள் வளரும் நாடு என்பதற்காக இலங்கைக்கு அளித்து வந்த இறக்குமதிக்கான சலுகையை - மனித உரிமை மீறல்களை மீறிய நாடு என்று காரணம் கூறி நிறுத்தி விட்டது. இதனால் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு கிடைத்த உதவி பறிபோனது. இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப் படுகொலை, போர்க் குற்றம் என்று கூறி - கடந்த வாரம், அமெரிக்கா, தனது நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டது. போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் இந்த அறிக்கைகூட விரிவானது அல்ல என்று, இன்னும் ஒரு படி மேலே சென்று அய்.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் ரூபர்ட் சால்வில், இரு நாட்களுக்கு முன், ஜெனிவாவில் பேட்டி அளித்திருக்கிறார். இறுதி கட்டமாக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்கள் பற்றி பாதிக்கப்பட்ட மக்ளிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தி அறிக்கை தயாரிக்க வேண்டும். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக நடத்தியது போன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்காவைச் சார்ந்த நீதிபதி ரிச்சர்ட் ஹோமல் டஸ்டோன் தலைமையில் காசாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 575 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட 12 பேரை எந்திரத் துப்பாக்கியால், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை மனித உரிமைக்கு எதிரான போர்க் குற்றம் என்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக - இப்போது ராஜபக்சே கண் துடைப்பு நாடங்களை ஆடத் தொடங்கியிருக்கிறார். மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக் குழுவை அமைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சுதந்திரமாக செயல்படும் என்றும், இலங்கை மனித உரிமை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்க என்பவர் அமெரிக்காவுக்கு பதில் தந்து அவசர அவசரமாக அறிவித்திருக்கிறார். இதே போல் கடந்த காலங்களில் ராஜபக்சே நாடகமாடிய வரலாறும் உண்டு. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், மனித உரிமைக் குழு செயல்படவே சிங்கள தேசத்தில் உரிமையில்லை என்பதை உணர்ந்து வெளிப்படையாக கண்டனத்தை தெரிவித்து, பதவியை தூக்கி எறிந்துவிட்டு, வெளியேறினார் நீதிபதி பகவதி.

சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நிதி உதவியை நிறுத்தினால் இந்தியா மட்டும், வாரி வாரி வழங்குகிறது. சர்வதேச நாடுகள் ராஜபக்சே மீது விசாரணை நடத்தச் சொன்னால், தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி, ராஜபக்சேவுக்கு நற்சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். முகாம்களிலே விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுவோரை ராணுவம் சுட்டுக் கொல்வதாக சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்டபோது, “ராஜபக்சே அதை மறுத்துள்ளாரே” என்று ராஜபக்சேயின் “பேச்சாளராக” மாறி கலைஞர் கருணாநிதி பதில் அளிக்கிறார். ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு போவதாக இலங்கை அரசு அதிகாரிகளே கூறினாலும், கலைஞர் கருணாநிதி அதை ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் வாழ்விடங்களுக்கே திருப்பி அனுப்பப்படுவதாக எழுதுகிறார்.

“இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பது 15.10.2009 அன்று தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் தமிழர்கள் அவரவர் தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நேற்று (21.10.2009) வரை 12,420 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக 22.10.2009 அன்று மட்டும் 41,685 பேர் முகாம்களிலிருந்து, அவரவர் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” (‘முரசொலி’ அக்.23) என்று அப்பட்டமாக உண்மைக்கு மாறாக எழுதுகிறார். இதையும் தாண்டி ராஜபக்சேயின் கருணைப் பேருள்ளத்தைப் பாராட்டி மகிழ்ந்து இவ்வாறு எழுதுகிறார்: “அனுப்பி வைப்பதில், இன்றைக்குள்ள சிறப்புகள் என்னவெனில், மன்னார் மாவட்டத்திலுள்ள மேற்கு மாண்டே என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் நிசாத் பக்ருதீன், பாசில் ராஜபக்சே எம்.பி. ஆகியோர் பங்கேற்பதும், முகாம்களிலிருந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் தலா இருபத்தையாயிரம் ரூபாய் நிதியும், வீடு கட்டிக் கொள்வதற்கான கூரைத் தகடுகளும், 6 மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் வழங்கப்படுவதும், முகாம்களிலிருந்து தமிழர்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து, அறிந்து, உலகிற்கு அறிவிக்க பத்திரிகையாளர்கள் அமைக்கப்பட்டிருப்பதும் ஆகும்”. (‘முரசொலி’, அக்.23) - என்று உளம்பூரித்து, ராஜபக்சேக்கு தாங்க முடியாத அளவு புகழ் மாலைகளை சூட்டித் தள்ளுகிறார்.

கலைஞர் பாராட்டும் இந்த ராஜபக்சேதான் தமிழர்கள் மீது விமானக் குண்டுகளை வீசியவன்; தடை செய்யப்பட்ட விஷ வாயுக் குண்டுகளை வீசி பொசுக்கியவன். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போராளிகளை சுட்டுப் பிணமாக்கியவன். செஞ்சோலையில் இளந்தளிர்களான பள்ளிச் சிறுமிகள் 63 பேரை சுட்டுப் பொசுக்கியவன். தமிழ்ச் சமுதாயத்தையே பூண்டோடு ஒழித்து, சபதமேற்று, இட்லரையும் மிஞ்சிய இனப் படுகொலையை நடத்தி முடித்தவன். தமிழர்களை நிர்வாணப்படுத்தி கண்களையும், கையையும் கட்டி தலையில் சுட்டுப் பிணமாக்கியவன். இந்த இனவெறியின் கொடூரத்தை சர்வதேச சமூகங்களே கண்டித்து ‘கூண்டிலேற்று’ என்று குரல் கொடுக்கும்போது, தமிழினத் தலைவரோ பாராட்டு மழை பொழியச் செய்கிறார். உலகமே வியந்து நின்ற மகத்தான விடுதலைப் போராட்டத்தை இந்தியாவின் முழு உதவியோடு தகர்த்து சாய்த்த சிங்கள ராணுவத்தை ஒரு வரி கண்டிக்காமல், ‘சகோதர யுத்தம்’ நடத்திய விடுதலைப் புலிகளே காரணம் என்று பழி போட்டு தூற்றுகிறார்.

ஆக - இப்போது என்ன நடக்கிறது? சர்வதேசம் - ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ராஜபக்சேயை அதிலிருந்து விடுவிக்க, தமிழகத்தின் துரோகக் கரங்கள் - கலைஞர் கருணாநிதி வழியாக நீள்கிறது. உலக நாடுகளை ஏமாற்றப் பார்க்கிறார் ராஜபக்சே. உலக ‘செம்மொழி’ மாநாடு நடத்திட தமிழர் உரிமைகளை பலிகடாவாக்குகிறார், கலைஞர் கருணாநிதி!

- விடுதலை இராசேந்திரன்