‘எமன்’ எந்த தோற்றத்தில் இருப்பான் என்பது யாருக்காவது தெரியுமா? எமனின் வாகனம் எது? அதன் உருவம் எப்படி இருக்கும்? அதில் எமன், எந்த வடிவத்தில் உட்கார்ந்திருப்பான்? எமன் பாசக் கயிற்றை எப்படி சுழற்றுவான்? இந்தக் கேள்விக்கெல்லாம் உருவம் கொடுத்து, விளக்கம் தந்திருக்கிறது, தி.மு.க. அரசு! தமிழ்நாட்டின் நாளேடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் தந்து, “பார்த்துக் கொள்ளுங்கள்; இதுதான் எமன்” என்று அறிவித்திருக்கிறது. “எமன் என்று ஒருவன் இருக்கிறான்; அவன் எருமை மீது சவாரி செய்து வந்து பாசக் கயிற்றை வீசி, உயிரை எடுத்துக் கொள்வான். இதோ பாருங்கள், அந்த எமனை, இதோ பாருங்கள் அந்த பாசக்கயிற்றை” என்று அரசே ‘பகுத்தறிவு’ வழியில் விளம்பரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.

பழமையில் ஊறிய பார்ப்பன ஜெயலலிதாவே இது பற்றி கேள்வி எழுப்ப, அதற்கு ‘முரசொலி’ பதிலும் தந்து விட்டது. ‘கடைக்கோடி மனிதனும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளம்பரம்’ என்கிறது முரசொலி! கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதற்காக இனி அரசாங்கம் தரும் விளம்பரங்களை இவ்வாறு வடிவமைக்கலாம் என்பது அடியேனின் தாழ்மையான யோசனை.

கல்வித் துறை விளம்பரத்துக்கு - சரசுவதி படம். நிதித் துறை விளம்பரத்துக்கு - லட்சுமி படம். பெண்களுக்கான திட்டம் என்றால் - பார்வதி படம். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் விளம்பரத்துக்கு - பகவான் கிருஷ்ணன் குழந்தையாக தவழும் படம். மருத்துவமனை திறப்பு என்றால் - படைக்கும் பிரம்மாவின் படம். இது தவிர அய்யப்பன், திருப்பதி ஏழுமலையான், பழனி முருகன் போன்ற ‘பிரபலமான கடவுள்களை’ விளம்பரங்களுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி எல்லாம் அரசு பணம் கொடுத்து இந்து புராணங்களைப் பரப்பி, மக்களிடையே கொண்டு செல்வது தான் பெரியார் வழி - அண்ணா வழி என்று அறிக.

கடைகோடி மனிதனுக்கும் பகுத்தறிவைக் கொண்டு சென்றால் அவன் திருந்தி விடுவான். கடவுள்களை கொண்டு சென்றால்தானே மடமையிலேயே மூழ்கிக் கிடக்க முடியும்! இந்த உண்மை அண்ணாவுக்கேகூட - தெரியாமல் போய்விட்டது. அவர் முதல்வராக வந்தவுடன், அரசு அலுவலகத்திலிருந்து கடவுள் படங்களை எல்லாம் அகற்றுமாறு அரசாணை பிறப்பித்தார். அங்கே மாட்டியுள்ள கடவுள் படங்கள், கடை கோடி மனிதருக்கும் - நல்ல செய்திகளை சொல்லும் என்ற கலைஞர் கருணாநிதிக்கு தெரிந்த உண்மை அவருக்கு தெரியாமல் போய்விட்டதே! பாரதிய ஜனதா கட்சி, ஆளும் மாநிலங்கள்கூட கலைஞர் காட்டும் பாதையை ஏற்று செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்! வழிகாட்டும் முதல்வர் அல்லவா? வீரமணி நடத்தும் ‘விடுதலை’ நாளேடும் கூட ‘எமன்’ விளம்பரத்தை எந்த எதிர்ப்பும் இன்றி, மகிழ்ச்சியுடன் வெளியிட்டு, ‘எமன்’ விளம்பரத்துக்கு ‘பகுத்தறிவு’ ரீதியான அங்கீகாரமும் வழங்கிவிட்டது! இனி திராவிடன் நலநிதி விளம்பரத்துக்கு அவர்களும் ‘லட்சுமி’யைப் போட்டாலும் நாம் வியப்படைய மாட்டோம்! கலைஞர் காட்டிய வழி தானே, வீரமணியின் வழி - வாரிசு நியமனம் வரை!