தமிழ் ஈழத்துக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்கள் நாள் நவம்பர் 27 ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழகம் முழுதும் உலக நாடுகளிலும் நினைவு கூரப்பட்டது. புதுவை அரியாங்குப்பத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் மற்றும் தோழர்கள் கடும் முயற்சியில் மாவீரர்கள் சார்பாக நினைவரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 200 பேர் வரை அமரக் கூடிய அரங்கிற்கு, கரும் புலி காப்டன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுவர்களின் இருபுறங்களிலும் மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட இருக்கின்றன. இந்த மாவீரர் நாள் மற்றும் மாவீரர் நினைவு அரங்கத் திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். முன்னதாக புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் வரவேற் றுப் பேசினார். மாலை 6 மணியளவில், மெழுகுவர்த்தி ஏற்றி, கழகத் தலைவர் உறுதிமொழி கூற, கூடியிருந்த அனை வரும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும், தொடர்ந்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கிடவும் உறுதி ஏற்றனர்.

சாதி மறுப்பு மண விழா

மாவீரர் நாளில் தனது மண விழாவை நடத்த வேண்டும் என்று மாதங்கள் பலவாகக் காத்திருந்து புதுவை கழகத் தோழர் கு. உதயகுமார் - க. பூங்கொடி, தமது மணவிழாவை மாவீரர் நாளில் நடத்திக் கொண்டனர். இது சாதி மறுப்பு திருமணமாகும். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு உறுதிமொழி கூறி, வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்தார். கழகத் தோழர் தீனத் தயாளன் - ஆனந்தி ஆண் குழந்தைக்கு கழகத் தலைவர் கரும்புலியான மில்லரின்  பெயரைச் சூட்டினார். திரளாக வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான அசைவ உணவு வழங்கப்பட்டது.

காஞ்சி மக்கள் மன்றம்

காஞ்சி மக்கள் மன்றத்தை வழி நடத்தி வரும் தோழர்கள் மகேசு - ஜெஸ்சி ஆகியோர் தங்கள் நிறுவனத்துக்காக புதுவையில் புதிய இல்லத்தையும், பயிற்சிக்கூடத்தையும் மக்கள் ஆதரவுடன் கட்டியுள்ளனர். மேதகு பிரபாகரன் பெயர் சூட்டப்பட்ட இந்த இல்லத்தை நவம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். தொடர்ந்து விளக்கேற்றி, மாவீரர் நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. காஞ்சி மக்கள் மன்றத்தின் கலை நிகழ்ச்சிகளும், உரை வீச்சும் காலை முதல் மாலை வரை எழுச்சியுடன் நடந்தன. சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். 

சென்னை தியாகராயர் நகர் கண்ணம்மாபேட்டையில் கழகத் தோழர் இல்லத்தில் நடந்த மாவீரர் நாளில் பத்திரிகையாளர் அய்யநாதன், திருக்குமரன், மருத்துவர் எழிலன் பங்கேற்றனர். கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழகம் தழுவிய அளவில் பல ஊர்களில் முன் எப்போதும் இல்லாத அளவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தன்னெழுச்சியாக தோழர்களால் நடத்தப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் மாவீரர் நாளில் சிறப்புரையாற்றுவதற்கு அமைக்கப்பட்டிருந்த பழ. நெடுமாறன், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலருக்கும் தூதரகங்கள் விசா வழங்க மறுத்துவிட்டன. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு ‘விசா’ பெற்றிருந்த இயக்குனர் சீமான், கனடாவுக்குச் சென்றார். ஆனாலும் முதல் நாளே தோழர்கள் ஒழுங்கு செய்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவீரர் நாளில் உரையாற்ற, கனடா அதிகாரிகள் அனுமதி மறுத்ததோடு விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரம் அலைக்கழித்ததோடு கைவிலங்கு போட்டு அவமதித்துள்ளனர். இந்திய - சிங்கள தூதரகங்கள் திட்டமிட்டு, மாவீரர் நாளை குலைக்கும் நோக்கத்தோடு  சர்வதேச நாடுகளை நிர்ப்பந்தித்து, விசா கிடைக்க விடாமல் செய்துவிட்டதாகத் தெரிகிறது. நவம்பர் 27 ஆம் தேதி தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில் நடந்த மாபெரும் மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார்.