familyman 2

தான் வரையறுத்துக் கொண்ட நியமங்களையும் விழுமியங்களையும் மீறும் வகையில் அமேசன் ஸ்ருடியோ The Family Man - 2 தொடரை வெளியிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன, விவேகமான, புரிந்துணர்வு கொண்ட (sensible) பொழுதுபோக்குத் தளத்தில் நாசிகளுக்கெதிராகப் போராடிய யூத வீரர்களை இவ்வாறு காட்சிப்படுத்த அனுமதிப்பார்களா என அமேசன் ஸ்ருடீயோ (Amazon Studio) நிறுவனத்தை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈழத்தமிழ் மக்களின் நியாயமான நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான போராட்டத்தை பயங்கரவாத முலாமிட்டுக் கொச்சைப்படுத்தும் வகையில் Amazon Studio தளத்தில் சமீபத்தில் வெளிவந்திருந்த The Family Man - 2 தொடர்பில் அந்நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பியுள்ளார்.

உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் எதிர்ப்புக் குரல்கள் மற்றும், இந்தியாவில் தமிழ்நாட்டின் பல தலைவர்களின் எதிர்ப்புக் குரல்கள் எதையும் மதிக்காமல் The Family Man - 2 தொடர்ந்து காட்சிப்படுத்தும் உங்கள் நிறுவனமானது ஈழத் தமிழர்களுக்கு அநீதி, இழைப்பதோடு சொல்லொணா மனவேதனையையும் ஏற்படுத்திவிட்டது. அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டுமெனத் தனது கடிதத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

அமேசான் நிறுவனத்தில் தலைமை அதிகாரி Ms.Jennifer Salke , இந்தியத் தளத்துக்கான அதிகாரி Ms. Aparna Purohit ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

படைப்பாற்றலில் புதுமையை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்ட அனுமதியை, ஈழத் தமிழர்கள் மேல் இன்றுவரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த கொடூர ஒடுக்குமுறைகள், இன அழிப்பு என்பனவற்றிலிருந்து விடுபட முயற்சிக்கும் ஈழத் தமிழர்களின் சுதந்திரமான வாழ்வு, அடிப்படை மனித உரிமைகள், மற்றும்; நீதி என்பனவற்றிற்கான போராட்டச் சரித்திரத்தைத் திரிவுபடுத்திக் காட்டுவதற்கெனத் திட்டமிட்டுப் பாவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு விழிப்பு பெற்ற சமுதாயத்தில் மக்கள் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரம் பேச்சுச்சுதந்திரம் என்பன இச் செயலால் பாரதூரமாக மீறப்பட்டதானது, தமிழ்மக்கள் மத்தியில் மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதோடு ஒரு தார்மீகக் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் வெளிப்பாடாக, தமிழ்நாடு அரசின் தகவல்துறை, தொழில்நுட்பத்திற்கான மாநில அமைச்சர் மதிப்புக்குரிய திரு. மனே தங்கறாஜ் அவர்கள் இந்திய நடுவண் அரசிடம் இத்தொடரை ஒளிபரப்புவதனை தடைசெய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

எந்த ஒரு விவேகமான, புரிந்துணர்வு கொண்ட (sensible) பொழுதுபோக்கு தளத்தில் நாசிகளுக்கெதிராக யூத விடுதலைப் போரட்ட வீரர்களை இவ்வாறு காட்சிப்படுத்த அனுமதிப்பார்களா?

The Family Man - 2 என்பதை காட்சிப்படுத்துவதானது Amazon Studio வரையறுத்துக் கொண்ட நியமங்கள், விழுமியங்கள் என்பனவற்றை மீறும் செயலாகும்.புதுப்பிக்கப்பட்ட சேர்த்தல் கொள்கை (inclusion policy) அடங்கிய (‘Inclusion Play Book-) சேர்ததல் கொள்கையில், 'ஒரு காட்சித் தொடரில் காலப்போக்கில் பக்கச்சார்பு' ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

மேலும் Amazon Studio தொடர்ந்தும் ஈழத்தமிழர்களின் குரல்களை மழுங்கடிப்பதோடு தொடர்ச்சியாக அவர்களின் வரலாற்றை உண்மைக்குப் புறம்பாகப் பாதகமான முறையில் காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குக் கேடு விளைவித்துத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புக் கருத்துகளை ஊக்குவிக்கிறது.

ஈழத்தமிழர் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வேதனைகளையும் ஆட்சேபணைகளையும் பொருட்படுத்தாது இத்தொடரைக் காட்சிப்படுத்தலானது கண்டிக்கத்தக்கது.

அமேசன் நிறுவனம் தனது வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இத்துறையில் தன்னை சமத்துவம், உண்மையின் அடிப்படையிலான பன்முகப் பாற்வை, புரிந்துணர்வு என்பவற்றைக் கொண்ட அமைப்பெனக் காட்ட முயலும் Amazon Studio ஆனது அதை தானே மீறுவதோடு, தனது நல்லெண்த்துக்கும் அப்பாலும் சென்று தானே பொறுப்புக் கூறலுக்கான நிலையில் செயற்படுவது Amazon Studioவின் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துவதாகும்.

Amazon Studio தனது பணிகளின் பொறிமுறைக்கான உறுதி மொழிகளுக்கிணங்க இதுவரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக புரிந்துணர்வற்ற தன்மையுடன் காட்சிப்படுத்தப்படும் The Family Man - 2 தனது தளங்களிலிருந்து முற்றாக நீக்குவதோடு இச்செய்கைக்கு தமிழரிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருவதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.