மதம் மனிதனின் அறிவை கெடுத்து, மனிதனின் மேன்மைக்கு முற்றாக இடையூறுகளை ஏற்படுத்தி மடமைக்கு வழிவகுப்பதை ஆய்வுகள் வழியே அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்தினாலும் மதவாதிகள் திருந்துவதில்லை. காரணம், மதவாதிகளெல்லாம் தங்களின் பிற்போக்குத்தனங்களை மக்களை கவர்ந்திழுக்கும் வண்ணமாக மத அரசியலாக தங்களை நிறுவனமயப்படுத்தி, தங்களை மக்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட சர்வரோக நிவாரணியாக சித்தரித்து அதனுள்ளே ஒளிந்து கொண்டு பல்லாயிரம் கோடிகளை பதுக்கி பகட்டாக வாழ்வதும், பல லட்சம் ஏக்கர் நிலங்களை எளியவர்களிடமிருந்து பறித்து பங்களா போன்ற மடங்களை நிறுவுவதும், பகவான் அருள் என்றுரைத்து பாலியல் வக்கிரங்களை செய்வது என சமூகத்தின் பெரும்பான்மை குற்றங்களின் தளகர்த்தர்களாக மதவாதிகள் விளங்குகின்றனர்.

மதவாதத்தின் ஊடாகச் செய்யப்படும் சமூகக் குற்றங்களில் முதன்மையானதும், நேரடியாக மனிதனின் உடலுக்கும் உயிருக்கும் கேடுகளை விளைவிக்கும் பாலியல் வக்கிர வன்முறைகளை அனைத்து மதங்களும் மென்மையாகக் கண்டிப்பதும், மிருதுவாக ஒழுங்குபடுத்துவதுமான கண்டும்காணாத போக்குகள் எப்போதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். ஏனெனில், இன்றளவும் ஒவ்வொரு மதமும் பெண்கள் மீதான கண்ணோட்டத்தை அடிப்படைவாதத்திலிருந்து மாற்றவுமில்லை, மதமா? மனிதமா? என்றால் மதத்தின் பக்கம் சாய்ந்து நின்று மனிதனை காவுவாங்கத் தயங்குவதுமில்லை. இப்படிப்பட்ட சாதகமான சூழல்களினாலேயே மதவாதிகளின் வெறியாட்டங்கள் கூடுதலாக பீடுநடைபோடுகிறது.

கதுவாவில் கோவிலுக்குள்ளேயே சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட போதும் கூட இந்துத்துவம் பேசும் ஆசாமிகள் வெறுமனே உச்சுக்கொட்டித்தான் நகர்ந்தார்கள் இதற்காக அதிர்ச்சி கொள்ளத்தேவையில்லை, சதாசர்வகாலமும் ஆலயங்களும் மடங்களும் மதவாதிகளுக்கும் மடாதிபதிகளுக்கும் தானே உறுதுணையாக நின்றிருக்கிறது. பிரேமானந்தா, குர்மீத் ராம் ரஹீம், விக்ரம் சவுத்ரி, ஆசாராம் பாபு, நித்தியானந்தா, தேவநாதன் என எல்லோர் செய்த அட்டூழங்களையும் அரவணைத்தபடி நின்ற மதம் மக்களுக்கு நன்மை விளைவிக்கும்படி மாற்றமடையவில்லை. மாறாக, மக்களின் நுகர்வுமய ஓட்டத்திற்கு தக்கவாறு மதபீடங்களின் வெளியே வர்ணம் பூசி தகவல் தொழிற்நுட்ப உதவியுடன் மக்களிடம் மூடத்தனங்களை மேலும் வளர்த்தெடுக்கின்றன.

கேரளத்தின் பாதிரியார்களோ பாவ மன்னிப்பு கேட்க வந்த ஐந்து பெண்களை பாலியல் வன்முறை செய்து மதவாத வக்கிரங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பறைசாற்றிக்கொண்டுள்ளனர்.

 உலகம் முழுவதிலும் உள்ள பாதிரியார்களின் "கிரிமென்" என்ற ரகசியம் காத்தலில் பாதிரியார்களின் பாலியல் வக்கிரங்கள் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்ளும் ரகசிய நடவடிக்கையே பிரதான ரகசியம் காத்தலாகும். அற்புதங்களை உலகுக்கு சொல்லும் மதங்கள் அவலங்களை மட்டும் புதர்களுக்குள் மறைப்பது நியாயமில்லை. 2015 ம் ஆண்டு செய்த பாலியல் குற்றத்திற்காக பாதிரியார் எட்வின் பிகார்ஸ்க்கு நீதிமன்றம் தான் தண்டனையளித்ததே தவிர மத பீடங்கள் சிறு துரும்பும் கிள்ளிப் போடவில்லை.இதுதான் மனிதர்கள் மீதான மதங்களின் கோரப் பார்வை.

பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் மதவாத ஐ.எஸ் அமைப்புகளுக்கு பாலியல் அடிமைகளாக்கப்படுவதும், பிரபல சர்வதேச மதபோதகர் தாரிக் ரமலான் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், பீகாரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது ஹபீஸ் முஜிபுர் ரஹ்மான், அரபு நாடுகளில் பாலியலுக்கு உடன்பட மறுத்த பெண்களுக்கு நடுசாலையில் கல்லடி தண்டனை போன்ற எண்ணற்ற வன்முறைகளை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பெண்களை விளைநிலங்கள் என்பதும், விளைநிலத்தை ஆண் எவ்விதங்களிலும் பயன்படுத்தலாம் என்பதும், மாதவிடாய் தீட்டு என பெண்களை ஒதுக்கும் அத்தனை செயல்களும் ஏனைய பிற்போக்கு மதங்களின் சாயலை ஒத்தே இருக்கிறது. பாலியல் அடிமைகளை எங்கள் மதம் அங்கீகரித்துள்ளது என பிரித்தானிய இஸ்லாமியத் தலைவர் இமாம் அலி ஹமூதா போன்றவர்கள் பேசிவரும் வேளையில் மனிதநேய மாற்றங்கள் என்பது இஸ்லாத்திலும் இல்லாத ஒன்று என்றே தோன்றுகிறது.

பல்வேறுபட்ட மதங்களும் மனிதன் வெறும் கருவி, எல்லாவற்றையும் நிகழ்த்துபவன் கடவுள் என்று சொல்லி மனிதனை பதுமைகள் போன்றவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும், மதங்களையும் மனிதர்களுக்கெதிரான மரபுகளையும் கேள்வியெழுப்பவோ விமர்சனம் செய்யவோ உரிமையற்றவர்களாகவும் எல்லாம் அவன் செயல் என்று நிறுவும் போது மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் பாழாகி மனிதன் மதங்களினால் மிருகமாகிறான். இதனாலேயே தான் தந்தை பெரியார் "மதம் அறிவை அழிக்கும்’’ மதம் மனிதனை மிருகமாக்கும்"என்றார்.

காட்டில் வாழும் மிருகங்களை விட மதங்களினால் மாறிவிட்ட மனித மிருகங்கள் பேராபத்தானவை! மதங்கள் ஒழியட்டும்!  மனிதம் தழைக்கட்டும்!